Namvazhvu
‘விலங்குகளிடமிருந்து மனிதன் வந்தான்’ மானுடம் ஒரு கழிப்பிடமா?
Saturday, 22 Jul 2023 07:46 am
Namvazhvu

Namvazhvu

விலங்குகள் நாட்டுக்குள்ளும், மனிதர்கள் காட்டுக்குள்ளும் புகுந்துவிட்ட காலமிது. ‘விலங்குகளிடமிருந்து மனிதன் வந்தான்என்று டார்வின் சொன்னதை நம்புவதற்கு ஆதாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. மாடுதான், நினைத்த நேரத்தில் எந்த இடத்திலும் சிறுநீர் கழிக்கும்; நாய்க்கு ஒரு மரம் வேண்டும், இல்லையேல் ஒரு சுவர் வேண்டும். இந்தக் கூட்டத்தில் மனிதனும் சேர்ந்துவிட்டான். என்ன... அவனுக்கு மரம் வேண்டாம், சுவர் வேண்டாம், இன்னொரு மனிதன்தான் வேண்டும்! அதுவும் அவன் சொந்தத்தில் வேண்டாமாம்! விளிம்பில் விழி பிதுங்கியவர்தான் வேண்டும் என்று தேடிப்பிடித்துச் சிறுநீர் கழிக்கிறான்! இது பரிணாம வரலாற்றில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது நடந்ததல்ல; இதுDigital Indiaவில் நடந்த, ‘Pi-gital India’, ‘Make in Indiaவில் நடந்தMad in India!’

சிறுநீர் கழிப்பது என்பது இன்றைய நவீனத்தில்வீடியோ கேம்மாதிரி மாறிவிட்டது. விமானத்தில் போனாலும் அவனுக்கு அடக்கிக் கொண்டு கழிப்பறையைத் தேடுகிற ஆறாவது அறிவில்லை. இது வன்ம கேம்! வன்மர்களின் திட்டத்தின் ஒரு செயல் வடிவம்!

சிறுபான்மை மக்களும், சிறியவர்களும், மண்ணின் மக்களும் கழிப்பறைகளாக மாற்றப்பட்டு விட் டார்கள். மானுடம் என்பது கழிப்பிடமாகிவிட்டது. இது வெட்கக்கேடு! ‘தூய்மை - தீட்டுஎன்கிற சித்தாந்தம் தருகிற ஓர் அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு இது. தன்னைத் தவிர எல்லா மனிதரும் தீண்டத்தகாதவர்கள் என்று ஊருக்கு வெளியேயும், ஊருக்குள் அவர்கள் இருந்தால், அவர்கள் தான் வெளியேற்றுகிற கழிவுகளை அள்ளி, தன்னை தூய்மையாகவே வைத்திருப்பவர்களாகவும் திட்டமிடுகிற செயலின் விளைவு இது.

இந்தத் தூய்மையின் ஆட்டம் ஓர் ஆன்மிகச் சடங்கென்று நினைத்துச் சோர்ந்துவிடவேண்டாம். அது அதிகாரத்திற்கான ஏற்பாடு. தூய்மையானவர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும். தூய்மையானவர் திருவாய்தான் மந்திரம் ஓதும் சுத்தம் கொண்டது. அப்போதுதான் மடமும், மடத்தின் வரம்பில்லாத சொத்தும் தன்னைச் சாரும் என்கிற பொருளாதாரச் சூழ்ச்சி அது!

நீதி சொல்லும் இருக்கையிலும், அறிந்து சொல்லும் ஊடகங்களிலும், கோள்மூட்டும் ஆலோசகர் பதவியிலும் அமர்வதற்குக் கல்வி கற்றால்தானே அவை சாத்தியமாகும்? தன்னைத் தவிர மற்றவர்கள் அறிவற்றவராக மாறினால்தானே, அவர்கள் ஒரு மிருகமாக மாறி, சிறுநீர் கழிக்க உதவும் கழிப்பிடமாக மாறுவர்.

மேல் - கீழ் என்றும், இகம் - பரம் என்றும் பிரித்து, அகம் - புறம் என்கிற வாழ்வைச் சிதைத்த ஒரு கூட்டம், போடுகிற திட்டங்களைப் புரிய வைப்பது என்பதுதான் சமூகப் பணியும், ஆன்மிகப் பணியும்! சதுசேயர்களையும், பரிசேயர்களையும் எதிர்த்து இயேசு என்ன செய்தாரோ, அதைச் செய்வதுதான் திருச்சபையின் அவசரப் பணி! உரோமப் பேரரசுக்கு எதிராக இயேசு அப்போது ஓங்கிக் குரல் எழுப்பினாரே... அதுதான் இன்றைய துறவறம் என்று புரிந்து கொள்வது அவசியம். ஆனால், செயல்பாடும், அதன் உத்திகளும் அசாத்தியக் கூர்மை கொண்டதாக அமைய வேண்டும். கூட்டம் போட்டு கூப்பாடு போடுவது சிறப்பானதாக இருக்காது. கருத்துப் போர் ஒன்றை அன்றாடப் பேச்சிலும், தினசரி கலந்துரையாடலிலும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டப்பட வேண்டும். அப்போதுதான் சிறுநீர் கழிப்பவர்கள் பெருநீரில் கலந்து காணாமல் போவார்கள். சிறுநீர் கழிக்கப்பட்டவர்கள் நாட்டை ஆள்வார்கள்!