Namvazhvu
தமிழ்நாடு-புதுவை மேய்ப்புப்பணி பேரவை பொதுக்கூட்டம்
Thursday, 27 Jul 2023 09:56 am
Namvazhvu

Namvazhvu

தமிழ்நாடு ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தின் ஓர் அங்கமாகதமிழ்நாடு - புதுவை மேய்ப்புப்பணி பேரவையின்பொதுக்கூட்டம் 2023, ஜூலை 9 ஆம் தேதி கோவை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜீவஜோதி ஆசிரமத்தில்இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களும், நமது பதிலிறுப்பும்என்ற கருப்பொருளில் கருத்தமர்வாக, தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர், சென்னை- மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகுஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில்   நடைபெற்றது.

பேராயரின் துவக்க உரையிலிருந்து...

இந்தக் கருத்தமர்வில் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு இப்போதைய காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றதாகும். இந்திய நாட்டில் கிறிஸ்தவம் தனித்துவம் பெற்றது. சமயம் கடந்து நாம் ஒரு குடும்பமாக இந்தியர் என்று வாழ்கிறோம். ஆகவே, நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளோடு, கிறிஸ்துவின் சீடர்களாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். மலைப்பொழிவில் இயேசு, ‘கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்’ (மத் 5:38-39) என்று கூறியது சரிவர புரிந்துகொள்ளப்பட வேண்டும். ‘சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ (மாற்12:17) என்று சொல்கிறார். அதே நேரம்நான் தவறாகப் பேசியிருந்தால், தவறு என்னவென்று காட்டும்; சரியாகப் பேசியிருந்தால், ஏன் என்னை அடிக்கிறாய்?’ (யோவா 18:23) என்று கேள்வியும் கேட்க வேண்டும்புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமடல் பிரிவு 13, ஒன்று முதல் ஏழு வரை உள்ள இறைவசனங்களில், நல்ல குடிமகனும், அரசு அதிகாரிகளும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் அடிப்படைக் கருத்து, கிறிஸ்துவின் சீடர்களாக அவரைப் போல் வாழ வேண்டும்.

 பேராயர் புனித ஆஸ்கர் ரோமெரோ காட்டிய வழி, அவர் கொல்லப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் செய்தியாளர்களின் நேர்காணலில், ‘நான்  கடவுளின் ஒலிவாங்கியாக (microphone), தூதுவராக, இறைவாக்கினராகச் செயல்பட வேண்டும். வெறுப்பூட்டுவதால் ஆன வன்முறை, அதனால் உருவாகும் பயங்கரவாதம் (violence of hatred, terrorism)...  இவற்றுக்கெதிராக, உண்மையான அமைதி ஏற்படுத்த அர்ப்பணிப்புத் தேவை. அது அன்பின் வன்முறைஎன்றார். இந்த அர்ப்பணிப்பு, தவறுகளைச் சுட்டிக்காட்டும்அன்பு வழிவன்முறையாகும்.

இந்த நாட்டில் நமக்குச்சிறுபான்மையினர்என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. நம் தலைவர்களைப் பார்த்து நாம் கேள்விகள் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2014 இல் பொது சிவில் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்து, நமது நாட்டின் பன்முகத்தன்மையை ஒதுக்கி, தனிப்பட்ட கலாச்சாரங்களை அழிக்க, நமது உரிமைகளைப் பறிக்க இன்று நம் மேல் திணிக்கப்படுகிறது. 2018 இல் தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. அதற்கு மாற்றாக, நாம் தயாரித்த கல்விக் கொள்கை மற்றும் மாநில அளவிலான கல்விக்கொள்கை என அடிப்படைக் கல்வி அளிப்பதில் குளறுபடிகள் நிலவுகின்றன.

அரசியல் அமைப்புச் சட்டம் 25, நமக்கு அளித்துள்ள நம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர்; ஆயினும், ஜனநாயக சக்திகளை நசுக்கும் அனைவரையும் நாம் இனம் காண வேண்டும்.

மணிப்பூர் கலவரம் இரு இனத்தவர் வன்முறை அல்ல; மதக்கலவரம்! 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை விட்டு, காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவைகளின் மத்தியில் நாம் மேற்கொள்ள வேண்டிய பதிலிறுப்பு, வார்த்தையில் மட்டும் இருந்துவிடக்கூடாது; மாறாக, செயலாக்கம் பெற வேண்டும். அதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பொதுநிலையினர் பணிக்குழு, பொதுநிலையினர் பேரவை, கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம் என நமக்குள் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அர்ப்பணத்துடன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு.

ஆக்கப்பூர்வமாகப் பணிகளைச் செயல்படுத்த வழிமுறைகள் வகுத்துச் (Guideline) செயல்பட வேண்டும். நமது ஊடகங்கள், தொலைக்காட்சி, ‘நம் வாழ்வுவார இதழ் ஆகியவை உறுதுணையாக இருக்க வேண்டும்.

அரசியல் தலைவர்களுக்குக் கீழ்ப்படியும் அதே நேரத்தில், ‘ஏன் என்னை அடிக்கிறாய்?’ என்று கேட்கவும் நமக்கு உரிமை உள்ளது.”

அருள்பணி. முனைவர் கிறிஸ்து ராஜாமணி உரையிலிருந்து...

மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும்...’ (லூக் 12:49)  என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையின் வழியில்  பேராயர் புல்டென்ஷின் கூறியபடி, ‘நாம் எழும்பி நிற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். உறைந்து போனவர்களாக இருக்க அல்ல; அமைதியாக இருப்பது தீமையை ஆதரிப்பதற்குச் சமம்’. அவ்வாறே, கிரேக்க தத்துவ அறிஞர் சாக்ரட்டீசின்கொடியது, தீமை கொடியது, அதனினும் கொடியது, நல்லவர்களின் மௌனம்என்னும் கூற்று இங்கே நினைவுகூறத்தக்கது.

ஆட்சியாளர்களுக்கு வரி செலுத்தும் கடமை இருக்கும்போது, ‘ஏன் என்னை அடிக்கிறாய்?’ என்று கேள்வி கேட்கவும்  நமக்கு உரிமை உண்டு. ‘நம் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்என்று பொறுப்பற்று இருப்பது சரியல்ல. நாம் இறையாண்மை மிக்க ஜனநாயக குடிமக்கள்! ஆனால், அன்பியக் கூட்டங்களைக் கூட தடை செய்யும் அளவிற்கு மதமாற்றத் தடைச்சட்டங்களைப் பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.    

இன்று மணிப்பூரில் நடைபெறுவது வெறும்குகி’, ‘மெய்திஇன மக்கள் போராட்டம் அல்ல; இது ஒரு மத அழிப்புப் போராட்டம்! இதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். இவர்கள்தான் 2002 இல் இரண்டு நாள்களில் 3000 இஸ்லாமியர்களை அரக்கத்தனமாகக் கொன்றார்கள்! இஸ்லாமியர்கள் மீதான வன்முறை, அசீமானந்தா போன்றவர்கள் மூலம் வன்முறையைத் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அதேநேரம், ‘மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்என்பதும் இவர்களின் வாதம். சச்சார் கமிட்டி அடிப்படையில், இஸ்லாமியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

தலித் மக்களின் மேல் எதிர்ப்பு, சனாதனத்தின் படி அவர்கள் அடிமை வேலை செய்ய வேண்டும், அவர்கள் படித்து முன்னேறிவிட்டால் உயர் சாதியினருக்குப் பணிவிடை செய்ய ஆள்கள் இருக்க மாட்டார்கள். பழங்குடியினர் மக்கள் தாங்கள் வசிக்கும் காடுகள் மற்றும் மலைவாழ் இடங்களிலிருந்து கார்ப்பரேட்டுகளுக்காக விரட்டப்படுகின்றனர்.

சனாதனம் சொல்கிறது... ‘பெண்கள் தனித்து சுதந்திரமாக இயங்கக்கூடாதுஎன்று. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டில் பெண்களுக்கும், தலித்துகளுக்கும் எதிராகப் பல கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்தும் நீர்த்துப் போகுமாறு மாற்றப்பட்டுள்ளன. போதைப் பொருள்கள் தங்கு தடையின்றி தனியார் வசமுள்ள முனையங்கள் வழியாக நாட்டுக்குள் வருகின்றன.

தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் சட்டங்களும் நீர்த்துப் போகும் அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டன. 16 லட்சம் கோடி அளவிற்கு அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன.

தனிப்பட்ட ஒருசிலருக்காக, எல்லாருக்குமான வேலை வாய்ப்புகளை அழிக்கும், இன ஒதுக்கல் கொள்கைக்கான புதிய கல்விக் கொள்கை திணிக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன; சொந்த மண்ணில் பெரும்பாலான மக்கள் அகதிகள் ஆக்கப்படுகின்றார்கள்.

உலக நாடுகளின் மகிழ்ச்சி அட்டவணையில், நம்மைச் சுற்றி உள்ள நாடுகளான நேபாளம் 84 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 94, பாகிஸ்தான் 121, ஸ்ரீலங்கா 127 ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 136 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. நமக்கு அருகில் 146 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

இந்தியா ஏழை நாடுஎன்று அழைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. 2018 இல் 82.6 ஆக இருந்த ஏழ்மைக் குறியீடு 1.2 உயர்ந்து 83.8 ஆக அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளுக்குப் பின்னால் அவர்களை இயக்குவது RSS என்னும் இந்துத்துவ மதவாத அமைப்பே. 1925 ஆம் ஆண்டு ஹெட் கேவார் என்பவர் தலைமையில்  துவங்கப்பட்ட இந்த RSS அமைப்பின் முக்கியக் குறிக்கோள், எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான். தற்போது இந்த அமைப்பு நான்கு கோடி உறுப்பினர்களைக் கொண்டு 52 வெவ்வேறு அமைப்புகளாக இயங்குகின்றனஅவர்களின் குறிக்கோளை அடைவதற்காகப் பெரும்பான்மை இன மக்களிடம் மதவெறியை உண்டாக்கி, அவர்களை வயப்படுத்த, ‘நாம் - நமது எதிரிஎன்ற வெறுப்புணர்வைத் தூண்டுகிறார்கள். இதனால், இந்தியாவில் அழிக்கப்பட வேண்டிய நால்வர்கள் வரிசை முறையே இஸ்லாம், கிறிஸ்தவர், இடதுசாரிகள், சமயச் சார்பற்ற இந்துக்கள் என நம்மை வரிசைப் படுத்தியுள்ளனர். இதற்காக முதலில் இந்து-முஸ்லீம் கலவரங்களை உருவாக்கினர்.

1940 இல் இதன் தலைவர்களுள் ஒருவரான கோல்வால்கர் எழுதியசிந்தனைக் கட்டுகள்’ (BUNCH of THOUGHT) என்ற நூலில், ‘அந்நிய இனத்தவர் இந்துக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்; தங்களின் தனிப்பட்ட அடையாளம் துறந்து, இந்து தேசத்தில் இருந்து கொள்ளலாம்என்பது அவர்களின் முக்கிய கருத்தியல்களில் ஒன்று.

மற்றொரு தலைவரான சாவர்க்கர் எழுதியஇந்துத்துவா - இந்து என்பவர் யார்?’ (HINDUTHUVA Who is the Hindu) என்ற நூலில், ‘இந்துக்கள் அல்லாதார் நம்மோடு வாழத் தகுதியற்றவர்கள். சனாதன தர்மம் என்பது இந்துச் சட்டம், அது நிறுவப்பட்டு கடைபிடிக்கப்பட வேண்டும்என்கிறார். இங்கு ஜாதி அடிப்படையில் மனித சமத்துவம் கிடையாது, பெண்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலில் மனித மாண்பு, உரிமைகள், சமத்துவம், சுதந்திரம் அனைத்தும் மறுக்கப்படுகின்றன.      

ஆகவே, அரசியல் சட்டம் 370- நீக்குவது, சனாதன தர்மத்தைச் சிறிது சிறிதாகக் கொணர்வது, மதமாற்றத் தடைச்சட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துவது என்ற குறுகிய கால இலக்குடன்ஆட்சி உரிமையைத் தக்கவைத்துக் கொண்டு, இந்து தர்மத்தை நிலைநிறுத்துவது, அரசியலமைப்புச் சட்டத்தில்மதச்சார்பற்றஎன்ற வார்த்தையை நீக்கி, அதற்கேற்றாற்போல் சட்டத்தையே மாற்றுவது என்ற நீண்ட கால இலக்கை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இச்சூழலில் நமது வலிமை: 1. அரசியல் அமைப்புச் சட்டம், 2. RSS- எதிர்க்கும் சக்திகள், 3. சமய சார்பற்ற இந்துக்கள், 4. அகில உலக மனித உரிமைக் கழகம் (International Human Rights Organisation) மற்றும் 5. சமூக ஊடகங்களே! பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. நமது செயல்பாடுகள் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். ஆகவே, கீழ்க்காணும் கேள்விகளை நாம் சிந்தனையில் அசைப்போட்டு பொருளுள்ள விவாதங்களை, கலந்துரையாடல்களை மேற்கொள்வோம்.

1. இந்திய சமூகத்தின் சிறப்பம்சம் - சமய சார்பின்மையும், பன்முகத்தன்மையும். இவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை  கிறிஸ்தவர்களாகசிறுபான்மைச் சமூகத்தவராகஇந்தியக் குடிமக்களாக  நாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்?

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் நமது உரிமைகளின் பாதுகாவலன்! இதனைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் எவை? இப்பணியில் எவற்றைக் கூட்டணி சக்திகளாகக் கருதுகிறோம்மேலும், திரு அவையில் - இறை மக்களாக மற்றும் சமூகத்தில் - குடிமக்களாக நாம் கடைபிடிக்க வேண்டிய யுக்திகள் யாவை?

சிறுபான்மையினராக, இந்தியக் குடிமகனா (ளா) நாம் இன்றைய அரசியல் சூழலை எதிர்கொள்ள வழிமுறைகள்:

●  நம்மிடையே உள்ள சாதியப் பிரிவினைகள் முக்கியமாகக் களையப்பட்டு, ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

●  பிற சபைகளோடுகிறிஸ்தவ ஒன்றிப்புடன்உரையாடல் செய்து, ஒத்தக் கருத்து உருவாக்க வேண்டும்.

●  நம்மிடமுள்ள அமைப்புகளுக்குச் சமூக-அரசியல் விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும்.

●  நம் அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றிய தெளிவுகளை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

●  சமூக மற்றும் பிற ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

●  பள்ளிகளில் ஒழுக்கக் கல்வியில் மற்றும் மறைக்கல்வியில் அரசியல் சட்டம் பற்றி அறியப்படுத்த வேண்டும்.