Namvazhvu
பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் எண்பது ஆண்டுகளுக்குப் பின்பு
Thursday, 27 Jul 2023 11:22 am
Namvazhvu

Namvazhvu

‘போரும் பகையும் நிறைந்த இந்த உலகமே,

வாரும் அவர்பாதம் அமைதி காணவே!’

எனும் பாடல் வரிகள் இன்றைய உலகின் எதார்த்தச் சூழ்நிலைகளை உணர்த்துகின்றன. போரும், பகையும், வன்முறையும், பயங்கரவாதமும் நிறைந்துள்ள இந்த உலகில், அமைதியின் தூதுவராய் நாம் மாறிட அழைப்பு விடுக்கிறார் நமது திருத்தந்தை பிரான்சிஸ். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரை நினைவுகூர்ந்து,  அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திருத்தந்தை, வரலாற்றின் அந்தத் துயரப் பக்கங்களை நினைவு கூர்ந்தார்.

1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா உரோம் நகரைத் தாக்கப் போவதாக அறிவித்தது. அதற்கு அப்போதைய திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டுடன் பேச்சு வார்த்தையை மேற்கொண்டார். ‘உரோம் நகரைத் திறந்த நகரமாக அறிவிக்க வேண்டும்; உரோமின்மீது எந்தப் போரும் தொடுக்கக்கூடாதுஎன்று கேட்டுக் கொண்டார். ஆனால், திருத்தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆகவே, 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி உரோம் நகரின்மீது வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. 690 போர் விமானங்கள் உரோம் நகர்மீதும், இத்தாலி நாட்டின் மீதும் பறந்தன. 9,125 வெடிகுண்டுகள் வீசப்பட்டன; 3,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்; 11,000 மக்கள் காயமுற்றார்கள்; 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன; 40,000 மக்கள் தங்குவதற்கு வீடில்லாமல், வீதிகளில் வந்து குடியேறினார்கள். அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டன. அந்தச் சூழலில், திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் மக்களோடு இருந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி புரிந்தார்.

80 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தக் கொடுமையான வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்த திருத்தந்தை,  ‘அத்தகைய கொடிய செயல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனஎன்று மிகுந்த கவலையுடன் உக்ரைன் போரைப் பற்றி எடுத்துரைத்தார்.

2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் போரை, தொடக்கத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிஸ் எதிர்த்து வந்தார். “உக்ரைனுக்கு எதிரான வன்முறை ஆக்கிரமிப்பு இன்னும் நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் படுகொலைகள் நடைபெறுகின்றன. அட்டூழியங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அர்த்தமற்ற படுகொலைகள் இவை. இதற்கு எந்த நியாயமும் இல்லை. இந்த அருவருக்கத்தக்கப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சர்வதேச சமூகத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்என்று அழைப்பு விடுக்கிறார்.  மேலும், போரைக் கண்டு அஞ்சாமல், அங்கு தங்கி மக்களுக்குப் பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவிகளைப் பாராட்டிய திருத்தந்தை, திரு அவையின் சார்பாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத் 5:9) எனும் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்க, நாம் அனைவரும் கடவுளின் மக்கள் என்பதை உணர்ந்து, அமைதியை நம்முடைய உள்ளத்தில் முதலில் ஏற்படுத்துவோம்; குடும்பத்தில், உறவுகளுக்குள் ஏற்படுத்துவோம்; நாம் வாழும், பணி செய்யும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவோம்; வன்முறை மற்றும் போருக்கு எதிராகக் குரல் கொடுப்போம். வன்முறையற்ற உலகைப் படைப்போம். தொடர்ந்து உக்ரைன் மக்களை நம் செபத்தால் தாங்குவோம்.