Namvazhvu
‘மிக்கி மவுஸ்’ எண்ணங்கள் வண்ணங்கள்
Thursday, 10 Aug 2023 04:44 am
Namvazhvu

Namvazhvu

எல்லாம் அழகே: எண்ணங்கள் வண்ணங்களாகின்றபோதுதான் அழகும், ஆளுமையும், அற்புதங்களும் ஏற்படுகின்றன. மதிப்பற்றவை மதிப்புப் பெறுகின்றனபயனற்றவை பொன் போன்ற மதிப்பைப் பெறுகின்றன. இவ்வுலகில் பயனற்றவை, அருவருப்பானவை, வெறுக்கத் தகுந்தவை என ஏதுமில்லை. எல்லாம் அழகே, எல்லாம் நன்றே, எல்லாம் சுவையே!

பார்வையில் உள்ளது அழகு: ஒரு பொருளை நாம் அணுகுகின்ற முறையில், அதை அழகானதாக, பயனுள்ளதாக, மயங்க வைப்பதாக மாற்றிவிடலாம். கடவுள் எலி குஞ்சுகளை முதலில் படைத்தபோது, அவைகள் ஊர்ந்தன. அங்கும் இங்கும் ஓடின. பலர் அவற்றைக் கண்டு வியந்தாலும், ஒரு தீர்க்கத்தரிசி அவைகள் மீது தன் பார்வையைச் செலுத்தினார். அதில் யாரும் காணாத ஓர் அற்புதத்தைக் கண்டார். அந்த எலி குஞ்சுகளுக்கு வண்ணம் தீட்டினார். அவைகள் ஓடின, பேசின, மகிழ்ந்தன. பல புதுமைகளைச் செய்தன. அவைகளைமிக்கி மவுஸ்என்று வால்டர் டிஸ்னி (Mr.Walter Disney) அழைத்தார்.

மிக்கி மவுஸ்:  டிஸ்னியின் இந்தமிக்கி மவுஸ்என்பது மனிதப் படைப்பு! எப்படி அவரது பார்வை அதை உயிருள்ளதாக மாற்றியது? டிஸ்னி ஒரு புதிய பார்வையைத் தந்து, அதற்கு இன்னுமோர் உயிரைத் தந்து அசத்தினார். அந்த வண்ணம் தீட்டிய மவுஸ் ஒரு நண்பனானது. நம்மைப் போல் ஓர் ஆளுமை பெற்ற நபரானது. உயிர்களைக் காக்கும் நண்பனானது. பல நல்ல செயல்களைச் செய்யும் உயிரானது.

இது எப்படி இந்த மனிதரால் முடிந்தது? இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த படைக்கும் அருள். இறைவனின் அருளைப் பெற்ற மனிதர்கள், அனைத்து உயிருள்ள, உயிரற்றப் பொருள்களை இன்னொருவிதமாக உற்றுநோக்க, நேர்மறையாகப் பார்க்க, அவற்றின் நல்லவைகளை வெளிக்கொணர முடிகிறது. “ஏனெனில் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்  என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக் 1:48). ஆண்டவர் தம்மைக் கண்ணோக்கினார் எனப் பாடும் மரியாவின் பாடல் விவிலியப் பாரம்பரியம் கொண்டது. இஸ்ரயேல் மக்களின் பெருமையே கடவுளின் இரக்கப் பார்வைதான். ஆண்டவரின் இரக்கப் பார்வை ஆண்டியை அரசனாக்கும். விளிம்பிலுள்ளோரை மையம் கொணரும். பாவிகளை விடுவிக்கும்.

மரியா - கடவுளின் அருள்: நாசரேத்தில் உள்ள ஓர் அணங்குஇறைவனின் தாயாகுவதுஇறைவனின் ஓர் அருள்நோக்கு. அவர் ஒரு சாதாரண பாமரப் பெண். இறைவன் தமது அன்புப் பார்வையை அவர்மீது செலுத்தினார். இனி அவர் கிறிஸ்துவின் தாயானார். கடவுளின் அன்புக் கருவியானார். அவரது அழகுக்கும், பெண்மைக்கும், தாய்மைக்கும், சீடத்துவத்துக்கும் எல்லையே இல்லாமல் போகிறது. மரியா நம் தாயாவதும் இந்த அருளாலே. யார் நினைத்திருப்பார் - இடையர்கள் இறைமகனின் பிறப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வார்கள் என்று? இறைவன் அவர்களைச் சந்தித்தது, அவர்களிலே ஒரு திருப்பத்தை உண்டாக்கியதால், அவர்கள் ஒரு சகாப்தமாகிறார்கள். நற்செய்தியின் ஒரு பகுதி அவர்கள் என்பதை சிந்திக்க முடிகிறதா?

மரியா ஒரு விந்தை: நாசரேத்தூர் கிராமப் பெண் உலக அதிசயங்களில் ஒன்றாக, இறை-மறைபொருளின் வெளிப்பாடாக விளங்குவதைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை. ‘அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிரோவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளேஎன்று பாடிப் பரவும் மகோன்னதம் வேறு எந்த நபருக்கும்  கிடைக்கவில்லையே!

மரியா இறைவனின் ஓவியம்: அன்னை மரியா இறைவன் வரைந்த ஓவியம்; நாமெல்லாம் படிக்கும் காவியம். அவர் கடவுளின் காவியம். அவரில் கடவுளைக் காணலாம்; இயேசுவைக் காணலாம்; நம்மைக் காணலாம்; உலகைக் காணலாம். ‘அக்காவியமின்றி வாழ்வில் சுவையிராது.’ ஏனெனில், மனிதன்அழகின் தாக்கமின்றி ஒரு கணமும் வாழ முடியாது. அதுவே நிறைவான இரகசியம், அதுவே நிறைவான வரலாறு’ (டோஸ்தோவஸ்கி). ஆம், அன்னையின்றி குழந்தைகள் அன்பைப் பெற இயலுமோ? அன்னையின்றி அழகை, ஆன்மாவை, வாழ்வைப் பெற முடியுமோ?

மரியாவின் பார்வை: நாம் கடவுளின் கடைக்கண் பார்வையால்பேறுடையவர்எனப் போற்றப்படுவதை அன்னை மரியா வாழ்வில் சுவைத்தார். கருதாங்கிய மகனைச் சுமந்துகொண்டு எலிசபெத்தைச் சந்தித்தபோது நடந்த நிகழ்வுகள் உள்ளத்தில் உவகையை உதிக்கச் செய்கின்றன. “மரியாவின் வாழ்த்தொலியைக் கேட்டதும், எலிச பெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக் 1:41). மரியாவின் எளிய பிரசன்னம் அன்பில் கலந்த வாழ்த்தொலிக்கு இருந்த ஆற்றலைக் கூறவியலாது. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏன் இப்படிப்பட்ட மகிழ்ச்சி? குழந்தை குதூகலித்துத் துள்ளிக் குதிக்கிறது. ஏன், ஒரு சிறிய நடனமே அங்கு நடந்தேறுகிறது. இறைவனின் கடைக்கண் பார்வை மரியாவைப் புதுமை புரியும் புண்ணியப் பெண்ணாக மாற்றுகிறது. மேலும், “உம் வாழ்த்துரை, என் காதில் விழுந்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” (லூக் 1:44) என்பதை  லூக்கா பதிவு செய்கிறார். இதுவும் குழந்தை அனைத்துத் தீய சக்திகளிலிருந்தும் விடுபட்டு, தூய்மையைப் போர்த்திக் கொள்வதைப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். புனித திருமுழுக்கு யோவானைப் பிறப்பின் பாவத்திலிருந்து தூயவராக்கியது இத்தருணம்தான் என அறிஞர்கள் கூறுவதில் உண்மை உள்ளதன்றோ!   

இறைவனின் அருள் பார்வை பெற்ற இந்த அன்னை, நம்மையும் இறைப் பார்வையால் நோக்குகின்றார். நம் பாவங்களையல்ல, நாம்தான் அவருக்குப் பிடித்தமானவர்கள்! அவர் நம்மீது கொண்ட அக்கறை, அன்பு, பேரிரக்கம் இவற்றிற்கு அளவுண்டோ? நம்மை அழகுபடுத்துவதும், வண்ணம் தீட்டுவதும், அழுக்கை விலக்குவதும் அவரது அன்றாட வேலை. அவர் நம்மிலிருக்கும் நல்லவைகளைக் கூர்ந்து நோக்குபவர்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்’ (குறள் -109)

அதுபோலத்தான் எண்ணற்ற கறைகளால் சூழப்பட்டாலும் ஒரே ஒரு நன்மை செய்ய, நாம் மீட்புப் பெறுவோம்.