Namvazhvu
அன்னையின் பெருமை ஆகஸ்டு பதினைந்தே! நீ அன்னைமரித் திருநாளே!
Thursday, 10 Aug 2023 11:25 am
Namvazhvu

Namvazhvu

அன்னையின் பெருமையை, அவளருள் மாண்பினை

உலகுக்கு உணர்த்திய உண்மைத் திருநாளே!

அன்னையின் அன்பினை விண்ணுலகப் பயணத்தால்

நமக்காய் வழங்கிட்ட அன்னைமரித் திருநாளே!

தயாளமுள்ள தேவன் தாயை நமக்கிங்கே

தானமாய் ஈந்திட்ட அன்னைமரித் திருநாளே!

தயாள அருள்மேகமாய் இத்திரையில் எந்நாளும்

வாஞ்சையைப் பொழியும் அன்னைமரித் திருநாளே!

அன்னை திருப்பயணத்தை மௌலிசூழ் விண்ணரசியாய்

பிரகடனமாய்த் தந்திட்ட அன்னைமரித் திருநாளே!

கண்ணின் மணிபோல் நம்மைக் காலமெல்லாம் காத்துவர,

கனியாக மகவீந்த அன்னைமரித் திருநாளே!

கருதாங்கிய காலமுதல் கானாவூர் திருமணத்திலும்

மானுடத்தைக் காத்திட்ட அன்னைமரித் திருநாளே!

திருச்சிலுவைப் பாதையிலும் மீட்பின் பயணத்திலும்

மக்களுக்காய் மெழுகான அன்னைமரித் திருநாளே!

அருள்நிறை மரியே! ஆகட்டும் என மொழிந்தே

திருவருளை வழங்கும் எம்அன்னைமரித் திருநாளே!

திருமகனைப் பெற்றபோதும் தேடிஇடம் அலைந்தபோதும்

இறைத்திட்டம் வெளிக்கொணர்ந்த அன்னைமரித் திருநாளே!

எலிசபெத் அம்மாளின் இனியநல் வாழ்த்தினைப்போல்

அனைவரும் பெற்றிடவரும் அன்னைமரித் திருநாளே!

சிலுவையிலே மகன்சிந்திய குருதிதனைக் கண்டபோதும்,

மடிமீது வளர்த்த அன்னைமரித் திருநாளே!

மானுட மீட்பிற்காய் மனுமகனுடன்  துயருற்று

மாளாத வியாகுலத்தின் அன்னைமரித் திருநாளே!

எப்போதும் கன்னிகையான அமல உற்பவியே

உடலோடு விண்சென்ற அன்னைமரித் திருநாளே!

நிறைவான விடுதலைக்குப் பாவத்தினின்றும் சாபத்தினின்றும்

அருங்குறியாய் நிற்கின்ற அன்னைமரித் திருநாளே!

முதற்கனியாம் மீட்பின் வரலாற்று அருமையுடன்,

இந்திய விடுதலையின் அன்னைமரித் திருநாளே!