திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எள்ளளவும் ஐயம் இல்லாத நம்பிக்கை கொண்டு வாழ இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறார். சூறாவளிக் காற்றிலே சிக்கித் தவித்த சீடர்கள், தங்களைக் காப்பாற்ற வந்த தங்கள் போதகரை, ஆண்டவரைக் கண்டு அச்சத்தில் ‘ஐயோ பேய்’ என்று கத்துகிறார்கள். ஆண்டவர் கொடுத்த தைரியத்தில் கடலின்மீது நடந்த பேதுரு, காற்றின் வேகத்தைக் கண்டு அஞ்சி கடலில் மூழ்குகிறார். இச்சீடர்கள் ஆண்டவர் இயேசுவோடு இருந்தவர்கள்; அவர் செய்த அற்புதங்களைக் கண்டவர்கள்; உயிரற்றப் பிணத்திற்கும் உயிர் தரக்கூடிய வல்லமையைக் கொண்டவர் நம் ஆண்டவர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அச்சத்தில், அவர் தங்களது போதகர், ஆண்டவர் என்பதையும் மறந்து ‘பேய்’ என்று கத்துகிறார்கள். நாம் எப்போதெல்லாம் பிரச்சினைகளில், மனக்குழப்பத்தில், கலக்கத்தில் இருக்கிறோமோ, அப்போதெல்லாம் நாமும் கடவுளை ஓர் எதிரியாக, பேயாகத்தான் பார்க்கிறோம். எப்போதெல்லாம் அவர்மீது நமக்கு நம்பிக்கை குறைகிறதோ, அப்போதெல்லாம் நாமும் துன்பக் கடலில் மூழ்கிப் போகிறோம். வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கண்டு, ஆண்டவரை மறந்து ஓடிக்கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து ஆண்டவர் சொல்கிறார்: ‘நம்பிக்கைக் குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?’ ஆண்டவரில் முழுமையான நம்பிக்கைக் கொண்டு, அவர் கரம் பற்றி நடந்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
மனக் குழப்பத்தோடு, கலக்கத்தோடு, உயிருக்கு அஞ்சி ஆண்டவரைக் காண ஓடோடி வந்த இறைவாக்கினர் எலியாவுக்கு, ஆண்டவர் அமைதியில் காட்சி தந்து, அவருக்கு மனத் திடனைத் தந்து, மீண்டும் பணி செய்ய அனுப்பிவைக்கிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்துவைச் சார்ந்தவர் ஒருபோதும் பொய் பேசுவதில்லை. தூய ஆவியானவரே அதற்குச் சான்றாய் இருக்கிறார். ஏனெனில், கிறிஸ்து மேலான கடவுள், என்றென்றும் அவர் போற்றுதற்குரியவர் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
எம்மைப் படைத்தவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தீமைகளைக் கண்டு அஞ்சாமல், உமது திரு மகனைப் போல திருப்பணி ஆற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் அருமை நேசரே! எம் தாய்த் திருநாட்டில் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் தொடுக்கப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தெளிந்த மனம் கொண்டவர்களாக நாங்கள் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்களை அரவணைப்பவரே! எங்கள் குடும்பங்களில் எழும் பிரச்சினைகளைக் கண்டு நாங்கள் துவண்டு போகாமல், உம்மீது முழு நம்பிக்கைக் கொண்டு, அவற்றை எதிர்கொண்டிடும் ஆற்றல் பெற்றவர்களாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆவியைப் பொழிபவரே! எங்கள் பங்கை, பங்குத் தந்தையை, பங்கு மக்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் நீக்கி, அன்புடன் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் விண்ணகத் தந்தையே! எம் நாட்டையும், எங்களையும் காக்க கடும் வெயிலிலும், குளிரிலும், பனியிலும் பணி புரிந்து கொண்டிருக்கும் எம் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, உமது காவல் தூதர்களையும், புனிதர்களையும் பாதுகாப்பாய் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.