Namvazhvu
‘இது சாத்தியமா?’ ஒளிர்கிறதா இந்தியா?
Wednesday, 16 Aug 2023 10:59 am
Namvazhvu

Namvazhvu

இந்தியா ஒளிர்கிறதுஎன்ற வெற்று முழக்கத்தை வைத்தே 2004 நாடாளுமன்றத் தேர்தலில் நின்றது பா... அரசு. அதன் பிறகும் அதையே சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற்று 2014 இல் ஆட்சிக்கு வந்தார்கள். அதையே இப்போதும் சொல்கிறார்கள்!

மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா இப்போது ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. அதை நான் மூன்றாம் இடத்திற்குக் கொண்டு வரப்போகிறேன்என்று மார்தட்டுகிறார் நமது பிரதமர். ‘இது சாத்தியமா?’ என்ற கேள்விதான் இப்போது பொருளாதார வல்லுநர்களிடமும், வளர்ச்சிப் பற்றி ஆய்வு நடத்துகிறவர்களிடமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. முதலில் இவர் சொல்கின்ற வளர்ச்சியைப் பார்ப்போமே! பிரதமர் 75 ஆம் விடுதலை நாள் விழாவின்போது நாடு அடைய வேண்டிய ஐந்து இலக்குகளை முன்வைத்தார். அவற்றில் ஒன்று, 25 ஆண்டுகளில் அதாவது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக ஆக்கிவிட வேண்டும் என்பது!

வளர்ந்த நாடுஎன்றால் என்ன என்பதைடைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு கட்டுரை விளக்குகிறது. இந்தக் கட் டுரை, பிரதமர் சொன்னது சாத்தியமா என்பதை ஆராய்கிறது. வளர்ந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிக உயரிய அளவு இருக்கும். வாழ்க்கைத் தரம், தனிநபர் வருமானம் ஆகியவையும் உச்சத்தில் இருக்கும். அதோடு கூட, மனித வளர்ச்சிக் குறியீடும் அதிக எண்ணிக்கை உடையதாக இருக்க வேண்டும். இதில் கல்வி, எழுத்தறிவு, உடல்நலம் ஆகியவை இருக்கும்.

இந்த Human Development Index (HDI) மிக முக்கியமான தரவாகக் காணப்படுகிறது. உயிர் வாழ்க்கை எதிர்பார்ப்பு, கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில், மனித வளர்ச்சியை நான்கு அடுக்குகளாகப் பிரிக்கிறார்கள். அவைகள்: 1. மிக அதிகம், 2. அதிகம், 3. நடுத்தரம், 4. குறைவு. இந்த அடிப்படையில் கடைசிக் கணக்கெடுப்பில் இந்தியாவின் HDI தரவரிசை 189 இல் 131. ஆதலால், இந்தியா மனித வளர்ச்சியில் நடுத்தர வகையில் வருகிறது. மிக அதிகமுள்ள நாடு நார்வே, அமெரிக்கா 17. சீனா 85.

இந்தியா  பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சி, பிரதமர் நேரு காலத்திலேயே தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் உடையது. இது 7% வீதத்தில் வளரும். ஆனால், இதே அளவை சீனா 2000 ஆண்டிலேயே அடைந்துவிட்டது. 2050 இல் இந்தியா அமெரிக்காவையும், சீனாவையும் எட்டி விடும். அதேசமயம், இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைந்தே இருக்கிறது.

உலக வங்கி இந்தியாவை இப்போது கீழ் மத்திய (low medium) வருவாய் உள்ள பொருளாதாரம் என்று வகைப்படுத்துகிறது. எனவே, இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்பதை ஒப்புக் கொண்டாலும், இருபத்தைந்து ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஆக முடியாது என்று தரவுகள் காட்டுகின்றன. சீனா போன்ற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா இன்னும் வெகு தூரம் போகவேண்டும். உலக வங்கி சொல்வது போல வாங்கும் சக்தியில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

எழுத்தறிவில் முன்னேற்றம் இருக்கிறது; ஆனால், இன்னும் 25% பேர் எழுத்தறிவில்லாமல் இருக்கிறார்கள் என்பதும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பெண்களின் சதவீதம்  (65%) ஆண்கள் சதவீதத்தை விடக் (83.4%) குறைவாக இருப்பதும் அவமானம்! அதேபோல, படிக்காதோர் எண்ணிக்கை சில இடங்களில் அதிகமாக இருப்பது, நமது நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போன்றதுதான். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10.8% பேருக்குத் தான் மேற்படிப்புக்குப் போக வாய்ப்பிருக்கிறது.

படித்தவர்களுக்கு வேலையில்லை. நமது கல்வித்தரம் எவ்வளவு மோசமென்றால், 80% பொறியியல் பட்டதாரிகள் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

வேறு சில குறைபாடுகள்

ஊழல் பற்றிய அறிதல் குறியீட்டில், இந்தியா 180 நாடுகளில் 85 ஆவது இடத்தில் (2022) இருக்கிறது. வாழ்க்கைத் தரக் குறியீடு தரவரிசை 5.6 பாலின சமத்துவம் 127 (146 நாடுகளில்). உலகப் பசி குறியீடு 94 (118 நாடுகளில்). இப்படி இருக்கும்போது, இந்தியா வளர்ந்த நாடாக  எப்போது, எப்படி ஆக முடியும்? முதலில் கீழ் மத்திய நிலையிலிருந்து மத்திய நிலைக்கு வரவேண்டும். இதைத்தான்தினமணிஇதழில் வந்திருக்கும் கட்டுரை விளக்குகிறது.

நாம் முன்னே கூறிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பைக் கொண்டு மட்டும்  ஒரு நாட்டை வளர்ந்த நாடு என்று சொல்ல முடியாது. அதற்கான வேறு காரணிகளும் இருக்கின்றன. தனிநபர் வருமானத்தில், இந்தியா 146 ஆம் இடத்தில் இருக்கிறது. சீனா 71 ஆம் இடம். பெரிய பொருளாதாரம்தான்! ஆனால், பெரும்பான்மையான மக்கள் பசியால் அல்லவா வாடுகிறார்கள்! ‘தினமணிசுட்டிக்காட்டுவதுபோல, பிரதமர் 80 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசியைக் கொடுப்பதாகப் பெருமை பேசுகிறார். அதாவது, 140 கோடி மக்கள் உணவுக்கு ஒன்றிய அரசிடம் கையேந்துகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை! இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள பணக்காரர்கள் கையில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சிக்குண்டிருக்கிறது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்ப முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

தவறான தகவல்களைத் தந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் ஒரு தந்திரம்தான்வல்லரசு’, ‘வளர்ந்த நாடுஎன்ற கற்பனைக் கதை. மற்றோர் உத்திமத உணர்ச்சியைத் தூண்டி திசை திருப்புவது. அதுபோதாது என்றுஎன் மண்; என் மக்கள்என்று வெற்று முழக்கம் வேறு. தலாய் லாமாவின் தன் வரலாற்று நூலானMy Land and My Peopleஇன் தலைப்பைக் கடன் வாங்கி இவர்கள் யாத்திரை போகிறார்கள். தலாய் லாமாபுரிதலும், அமைதியும் வேண்டும்என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார். இவர்கள் வெறுப்பையும், பகைமையையும் விதைக்கிறார்கள். ‘தேசப்பற்றுஎன்ற பெயரில், ‘என் மண்என்று இந்த மண்ணையே சுரண்டிவிட்டார்கள். நாம் நம் மண்ணுக்காகப் போராடுவோம்!

ஷேக்ஸ்பியர் எழுதியஇரண்டாம் ரிச்சர்ட்என்ற நாடகத்தில், முதியவர் மன்னனுக்கு அறிவுரை கூறும்போது, இங்கிலாந்தின் பெருமையை எடுத்துரைப்பார். அதில்இந்த நிலம், வெள்ளிக் கடலில் பதித்த விலை மதிப்பற்ற வைரம்என்று சொல்லி விட்டு, கடைசியில் இந்த மண்ணின் பெருமை அழிக்கப்பட்டு விட்டதை எடுத்துச் சொல்லி அங்கலாய்ப்பார். இந்த நாட்டின் வளத்தை, வளர்ச்சியைக் கெடுத்துவிட்டார்கள் என்றுதான் நாம் அங்கலாய்க்க வேண்டும்.