பல வேளைகளில் புரியாத புதிர் போலத் தோன்றும் இந்த மனித வாழ்க்கையை முடிந்தவரை புரிந்துகொண்டு, கடந்த காலத்தைவிட நிகழ்காலத்தில், வருங்காலத்தில் நன்றாக, இன்னும் நன்றாக வாழ வேண்டும் என்றுதானே நாம் நினைக்கிறோம்? நம் வாழ்வு வளம் பெற வேண்டும், மேம்பட வேண்டும் என்று விரும்பாதார் யார்?
‘இன்றுவரை இது எனக்குப் புரியவில்லையே’, ‘இந்தக் கோணத்தில் இருந்து இதை நான் பார்த்ததே இல்லையே!’ என்று நம்மைச் சொல்ல வைக்கும் காரியங்கள் உள்ளன. ‘இது முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், பல்லாண்டுகளாக இதனைச் செய்து வந்திருப்பேனே’, ‘இது இவ்வளவு ஆபத்தானது என்பது முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், என்றோ இதனை விட்டிருப்பேனே’, ‘அப்படியா? நாளையிலிருந்து இதனை முயன்று பார்க்கிறேன்’, ‘இனிமேல் இதனை பழக்கப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன்’ என்றெல்லாம் நம்மைச் சொல்ல வைக்கிற காரியங்கள் பல வடிவங்களில் வருகின்றன.
இத்தகைய புதிய தகவல்களையும், புதிய புரிதல்களையும், புதிய தெளிவுகளையும் ஒரு நூலோ, திரைப்படமோ, ஒரு கட்டுரையோ, கதையோ, ஒரு கவிதையோ, சொற்பொழிவோ, ஒரு பாடலோ, ஆய்வோ நமக்குத் தரலாம்.
இப்படி நான் பெற்றவற்றை வாசகர்கள் உங்களோடு உரையாடிச் சொல்லத்தான் இந்தப் புதிய தொடர். எனக்குக் கிடைத்ததை என் வாசக நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதுதான் இதன் நோக்கம்.
இத்தொடரில் வரும் கட்டுரைகள் சொல்பவற்றைக் கவனமாய் வாசித்து, நிதானமாக யோசித்து, உங்கள் அனுபவத்தோடு இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்குத் தோன்றுபவற்றை என்னோடு பகிர்ந்து கொள்வீர்களா? என் மின்னஞ்சல் முகவரி: majoe2703@gmail.com அமருங்கள். பேசுவோம்!
1. மகிழ்ச்சியின் அறிவியல்
உலகப் புகழ்பெற்ற சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகமும் ஒன்று. கணடிக்கட் எனும் மாநிலத்தில் நியூ ஹேவன் எனும் நகரில் உள்ள ஒரு பழம்பெருமை மிக்க பல்கலைக்கழகம் இது. முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் புஷ் சீனியர், பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன், ஹாலிவுட் நடிகைகள் மெரில் ஸ்ட்ரீப், ஜோடி ஃபாஸ்டர் போன்றோர் பயின்ற பல்கலைக் கழகம் இது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே மிக அதிகமான மாணவ-மாணவியர் பயில விரும் பிய ஒரு பாடம் என்ன தெரியுமா? ‘உளவியலும் நல்ல வாழ்வும்’ என்பது அதன் பெயர். அந்தப் பாடத்தைத் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டு களாகக் கற்பிப்பவர் லாரி சான்டோஸ் எனும் பேராசிரியை.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இவரது வகுப்புகளில் பங்கேற்க விரும்பியதால் அத்தனை பேரும் அமரும் வசதி கொண்ட அரங்கத்தை யேல் பல்கலைக்கழகம் தேட வேண்டி யிருந்தது. இத்தனை இளையோரை ஈர்க்கும் அளவுக்கு லாரி சான்டோஸ் அப்படி என்ன கற்பிக்கிறார்? மகிழ்ச்சி பற்றி அறிவியல் ஆய்வுகள் சொல்பவற்றைப் பற்றித்தான்.
பிரபல பன்னாட்டு ஆங்கில இதழ் ‘டைம்’ சமீபத்தில் ‘மகிழ்ச்சிக்கு’ என்று ஒதுக்கிய ஓர் இதழில் இவரிடம் நடத்திய விரிவான நேர்காணலை வெளி யிட்டது. அந்த நேர்காணலில் நம் அனைவருக்கும் முக்கியமான சில காரியங் களைச் சொல்கிறார் லாரி சான்டோஸ்.
நமக்கு மகிழ்ச்சியைத் தேடித் தருவது நம் மனதின் இயல்புகளில் ஒன்று அல்ல; மகிழ்ச்சி இல்லாத இடங் களையே நம் மனம் சுட்டிக் காட்டி நம்மை ஏமாற்றுகிறது. அதிக சம்பளம் தரும் ஒரு வேலை கிடைத்தால், நிறைய பணம் கைவசம் இருந்தால், சமுதாயத்தில் செல்வாக்கு உள்ள ஒரு பதவி இருந் தால்... நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றெல்லாம் நம்மை நினைக்கத் தூண்டு கிறது நமது மனம். ஆனால், இவற்றை நாம் கவனமாகப் புறந்தள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் சான்டோஸ்.
இத்தகைய ஆய்வுகள் நாம் உண்மையில் மகிழ்ச்சியாய் இருக்க உதவும் என்று சொல்பவை எவை? உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் உறுதி செய்யும் காரியங்கள் நமக்கு மகிழ்ச்சி தர வல்லவை. எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறோம்? பழக்கம், சுவை இவற்றின் அடிப்படையில் எதையோ உண்டு ஏமாறாமல், நோய்களைத் தவிர்க்க உதவும் நல்ல, பாதுகாப்பான, சத்தான உணவுகளை மிதமாக, அளவோடு உண்பதே உகந்தது. நல்ல, அளவான உணவைப் போன்றே முக்கிய மானவை போதுமான ஆழ்ந்த உறக்கமும், தொடர்ந்த உடற்பயிற்சியும்.
நாம் பிறரோடு இணைந்து வாழவே படைக்கப் பட்டவர்கள் என்பதனால், அன்பார்ந்த உறவுகள் மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவை. இதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய அன்பார்ந்த உறவுகள் நம் குடும்பங்களின் மூலமாக நம் எல்லோருக்கும் கிடைக்கும் என்று நினைக் கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. சிலருக்கே இவை வாய்க்கின்றன. குடும்பத்தைச் சாராத பிறரிடம் இருந்தும் அன்பார்ந்த உறவுகள் நமக்குக் கிடைக்கலாம்.
உண்பது, விளையாடுவது, பாடுவது, ஆடுவது, வழிபடுவது போன்றவற்றைச் சேர்ந்து செய்வதற்கு உதவுகின்ற குழுக்களும் நமது மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன. நம்மைப் புரிந்து ஏற்றுக்கொள்கிற குடும்பங்கள், குழுக்கள், குழுமங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியமானவை.
அர்த்தமில்லாத செயல் களைச் செய்ய வேண்டி யிருப்பது மகிழ்ச்சிக்கு எதிரி. எனவே, நமது வாழ்வின் நோக்கத்தை உணர்வதும், அவ்வப்போது தெளிவு படுத்திக் கொள்வதும் நாம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்தையும் பொருள் உள்ளதாக ஆக்கும் என்கிறார் லாரி சான்டோஸ்.
சான்டோஸ் மட்டுமல்ல, அவரைப் போன்ற பல அறிஞர் கள் மகிழ்ச்சிக்கு அவசியமான ஒன்றாக தற்போது வலி யுறுத்திச் சொல்வது நன்றி உணர்வு. இறைவனிடம் இருந்தும், சக மனிதர்களிடமிருந்தும் நாம் பெறும் நன்மைகள், உதவிகள் அனைத்தையும் மறக்காமல் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு மனமுவந்து நன்றி கூறும் பழக்கத்திற்கும், மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று உறுதியாகக் கூறுகின்ற னர். என்றோ ஒரு நாள் செய்கின்ற ஒன்றாக இது இல்லாமல், அன்றாடம் செய்கிற ஒன்றாக மாறு வதற்கு உதவக்கூடிய ஒன்றையும் பலர் பரிந்துரைக் கின்றனர். ‘நன்றி நாட்குறிப்பு’ (க்ராட்டிட்யூட் ஜர்னல்) ஒன்றில் தினமும் இரவில் உறங்கப் போகும் முன் அன்று நாம் பெற்ற நன்மைகள், உதவிகள் யாவிற்கும் மனதில் எழும் நன்றி உணர்வை எழுதிப் பதிவு செய்வது மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பேருதவியாக அமையும் என்கின்றனர்.
நம்மால் முடிந்த உதவிகளை மனமுவந்து, முகம் மலர்ந்து, பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் செய்வது நமக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தர வல்லது. பல அறிஞர்கள் பரிந்துரைக்கும் இன் னொன்று, நிகழ்காலத்தில் நிலை நிற்பது. ஆங்கிலத் தில் இதனை ‘மைண்ட்ஃபுல்னஸ்’ என்கின்றனர். நாம் செய்யும் யாவிலும் நம் கவனம் இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஒன்றை நாம் செய்யும் வேளையில், நம் நினைவுகள் வேறெங்கோ இருப்பதை நாம் எளிதில் உணரலாம். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, நம் மனம் ஓர் இடத்தில் நில்லாமல், கடந்த கால நினைவுகளுக்குள் போய் விடுகிறது. அல்லது எதிர்காலக் கற்பனைகளுக்குள் ஓடிவிடுகிறது. இந்த மனதைப் பிடித்து நிறுத்தி, இந்தக் கணத்தில் நாம் செய்யும் செயலில் நிற்க வைப்பது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்கின்றனர்.
ஒரு நபரிடமோ, ஒரு குழுவிடமோ தீவிர ஈடு பாடும், ஆர்வமும் இருந்தால், அதுவும் மகிழ்ச்சியைக் கூட்டும் என்கிறார் சான்டோஸ். நடிகர்கள், பாடகர் கள், விளையாட்டு வீரர்களின் இரசிகர்கள் அல்லது ஒரு கால்பந்து அணியை ஆதரிக்கும் ‘விசிறிகள்’ போன்றோரை நினைத்துப் பாருங்கள். இந்த நடிகர் கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அணிகள் செய்கிற சின்னச் சின்ன சாதனைகள் கூட இவர் களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதைப் பார்க்கலாம்.
சான்டோஸின் வகுப்புகளுக்கு வந்து, அவர் கற்பிப்பதைக் கடைப்பிடிக்கும் அவரது மாணவர்கள் மற்ற மாணவர்களை விட மகிழ்ச்சியாய் இருக்கின்ற னர் என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.
மகிழ்ச்சியின் அறிவியலைப் புரிந்துகொண்டு, இவ்வழிகளில் மகிழ்ச்சியைத் தேடுவது சரி என்றாலும், எந்நாளும் எந்நேரமும் நாம் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இது சாத்தியமும் இல்லை, தேவையும் இல்லை என்கிறார் சான்டோஸ். நம் எதிர்மறை உணர்வுகளைப் புறக் கணிக்காமல், அவற்றைக் கவனமாய் உற்று நோக்கி, அவை நம்மைப் பற்றி, நம் சூழலைப் பற்றி, நம் உறவுகளைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை உணர வேண்டும் என்கிறார் அவர். நம் எதிர்மறை உணர்வுகள் நம்மைப் பற்றிச் சொல்வதென்ன என்று கண்டுபிடிக்கத் தேடாமல், அவற்றை ஒதுக்கு வது ஆபத்தானது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இதற்கு அவரது வாழ்வில் இருந்தே உதாரணம் ஒன்றைச் சொல்கிறார். சில மாதங்களுக்கு முன் அவர் தன்னில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவ னித்தார். மகிழ்ச்சி அறிவியலை யேல் மாணவர் களுக்குக் கற்பிப்பது மட்டுமின்றி, வேறு சில முக்கியமான வேலைகளும் அவருக்கு இருந்தன. இந்த வேலைப் பளு அவரில் ஏற்படுத்தும் எதிர் மறை உணர்வுகளை அவர் கவனித்தார். அடிக்கடி சோர்ந்து போனார். சின்ன விஷயங்களுக்கும் எரிச்சல் பட்டார். சில சமயங்களில் அவர் பேச்சில் ஒரு விரக்தி வெளிப்பட்டது. இவற்றைக் கண்டு கொண்ட தால் சான்டோஸ் சுதாரித்துக் கொண்டார். இந்த எதிர்மறை உணர்வுகள் சொல்வதை அலட்சியம் செய்து, முன்பு போலவே தொடர்ந்தால் விரைவில் சோர்ந்து விழுந்து விடுவோம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
நிறைய வேலைகளைச் செய்ய முயன்று, சோர்ந்து வீழ்வதை - உடலும், மனமும் பாதிக்கப்படு வதை - ‘பர்ன் அவுட்’ என்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க மாற்றம் உடனடித் தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பல்கலைக்கழகத்திடம் ஓராண்டு விடுமுறை கேட்டுப் பெற்றார் சான்டோஸ். செய்த வேலைகள் யாவற்றையும் தற்காலிகமாக விட்டு விட்டு, கணவரோடு இன்னொரு நகருக்கு இடம் பெயர்ந்தார். அவர் சென்ற இடம் அவரின் நண்பர்கள், அவரைத் தெரிந்தோர் நிறைய இருந்த ஓர் இடம். அந்த இடத்திற்குப் போன பிறகு கணவரோடு அதிக நேரம் செலவிட அவரால் முடிந்தது. தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டார். வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கச் சென்றார். பிடித்த இசையை வெகு நேரம் கேட்டார். விடுமுறையில் ஆறு மாதங்கள் கடந்த பிறகு இப்போது தனது களைப்பு, சோர்வு, எரிச்சல், விரக்தி போன்ற எதிர்மறை உணர்வுகள் பெரும்பாலும் இல்லாதிருப்பதை சான்டோஸ் உணர்கிறார்.
மகிழ்ச்சி பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டு, அதைப் பற்றிப் பேசுகிற பதினேழு அறிஞர்களையும் ‘டைம்’ இதழ் நேர்காணல் செய்தது. அவர்களில் பெரும்பாலோர் சொல்வதென்ன?
அன்பையும், அக்கறையையும் மையமாகக் கொண்ட நட்புகள், காதல், தாம்பத்யம் போன்ற உறவுகள் நம் மனம் தேடும் மகிழ்ச்சியையும், நிறை வையும் தருகின்றன என்று இவர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.
இயற்கையோடு தொடர்புகொள்வதும் மகிழ்ச்சிக் கான ஒரு வழி. இயற்கையில் கொழிக்கும் அழகை, நீல வானம், குளிர் நிலா, விண்மீன்கள், கடல், ஆறுகள், ஓடைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் போன்றவற்றைக் கண் குளிரக் கண்டு இரசிப்பது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடும் என்று இவர்களில் பலர் சொல்கின்றனர்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் இயற்கையின் ஓர் அங்கம்தான் நாம். எனவே, இயற்கையோடு கொள்ளும் தொடர்பு நம் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்பதில் வியப் பில்லை. பார்த்து இரசிப்பது மட்டுமின்றி, நீரூற்று வது, களையெடுப்பது, உரமிடுவது போன்ற தோட்ட வேலைகள், செடிகளோடும், மலர்களோடும் உரையாடுதல் போன்றவையும் இயற்கையோடு தொடர்பு கொள்வதுதான்.
மனிதர் மனதில் மகிழ்ச்சி வளர்ப்பதாக ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிஞர்கள் சொல்பவற்றில் எவை நம் வாழ்வில் ‘இல்லை’ என்பதைப் பார்த்து, அவற்றைச் சேர்த்துக் கொண்டால் நம் வாழ்வு மேலும் வளம் பெறும்.