Namvazhvu
இன்றைய நாட்டு நடப்புகள் மௌன எச்சரிக்கை
Thursday, 17 Aug 2023 10:21 am
Namvazhvu

Namvazhvu

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்மதச்சார்பற்ற நாடென   தன்னை அடையாளப்படுத்துகிறது. அவ்வாறு இருக்க, அதற்கு எதிர்மாறான  இன்றைய நாட்டு நடப்புகள் மிகவும் கவலை  அளிக்கின்றன.

பாராளுமன்றம், மக்களாட்சி அமைப்பின் தனித்த அடை யாளம். ஆனால், புதிய பாராளு மன்றக் கட்டட வடிவமைப்பு குறித்த தகவல்கள் அதிர்ச்சி  தருகின்றன.

புதிதாகத் திறக்கப்பட்ட  பாராளுமன்றக் கட்டடம் குறித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாளர்.  சு. வெங்கடேசன் அவர்களின்  சமூக ஊடகப் பதிவு கூர்ந்து கவனிக்கப்பட  வேண்டிய  ஒன்று: “இதன் வடிவமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக்கே எதிரான செயல். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் இந்துத்துவா கோட்பாடு களால் இந்த அவை வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்கிறார்.

ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களை தாங்கிக்கொண்டு, சனாதனத் தர்மத்தைத் தூக்கிச்  சுமக்கும் இக்கட்டடம் சொல்லாமல் சொல்லும் செய்தி ஒன்று: அது, நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்ற அடிப்படை அமைப்பைச்  சிதைப்பதாக   அடையாளப்படுத்துகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி ஆட்சி, ஒரே தலைவன் என்ற  சித்தாந்தம் வலுப் பெறுகிறதுமுழு  உரு பெறுகிறது. தேர்தல் வெற்றிக் காக  எதையும் செய்வார்கள்  என்ற பொதுக்கருத்து உண் மையாகிறது. பத்தாண்டு கால  ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க எதுவும் இல்லாதவர்கள், புதிய வழிகளைத் தேடுகிறார்கள். அவர்கள்  பெரிதும் எதிர்பார்த்த கோவில் அரசியல் கூட நீர்த்துப் போனது கண்கூடு. தற்போதும் தேச பக்தி என்ற முகமூடி தங்களுக்குப் பயன்படும் எனத் தேர்தல் நேரத்தில் இராணுவத்தை மையப்படுத்திய சித்து விளையாட்டுக்கள்  கூட அரங்கேறலாம்.

சிறுபான்மை மக்களின் மீதான வெறுப்பு  அரசியல் என்பதை அடிப்படையாகக் கொண்டு, மக்களை மதரீதியாகப் பிரித்து, அவர்களின் மத உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை அள்ளலாம் என்பது அவர்களின்  வாக்கு அரசியல். வளர்ச்சித்  திட்டங்களை  முன்னெடுக்காத, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத எவரும் குடியாட்சி முறையில் எவ்வளவு பெரியவர்கள் எனிலும்மக்களால் புறந் தள்ளப்படுவார்கள் என்பது கடந்த கால வரலாறு.

மக்கள் மட்டுமல்ல, மதவாதக் கட்சி அல்லாத அரசுகள் பாடு பெரும்பாடு! மத்திய-மாநில அரசு களின் அதிகார வரம்பிற்குட்பட்ட கூட்டாட்சித் தத்துவம், இந்திய அரசியல் அமைப்பின் அழகிய வடிவம். ஆளும் ஒன்றிய அரசு புதுப் புதுச் சட்டங்கள் வழி மாநில அரசுகளை உள்ளாட்சி அமைப்புகள் போல தரம் குறைத்தது அரசியலமைப்பின் அடி வேர் களில்  வெந்நீர் ஊற்றியதாகும். ஜி.எஸ்.டி. எனும் வரி விதிப்பு வழி, பொருளாதாரச் சுதந்திரமின்றி, ஒன்றிய அரசிடம் கையேந்தும் அடிமைகளாக மாநில அரசுகளை மாற்றியது காலக்கொடுமை!

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்கள் பிரதிநிதிகளால் சட்டமன்றங்களில் உருவாக்கப் படும் சட்டங்கள் ஆளுநரால் முடக்கப்படுவது குடியரசின் கறுப்புப் பக்கங்கள். எதிர்கட்சிகள் ஆளும் மாநில ஆளுநர்கள் மாநில அரசிற்குப் பெரும் தலைவலி. இதுதான் மதவாத அரசின் உண்மை முகம்.

தங்களை  வெல்ல முடியாதவர்களாக, தங்க ளைத் தாங்களே உருவகப்படுத்திக் கொண்டார்கள். அனைத்துத் தரப்பு ஊடகங்களையும்  வசப்படுத்தி, தங்கள்  பூதாகாரத் தோற்றத்தை வலுப்படுத்தி னார்கள்.

கர்நாடகாவில் தாங்கள் பெறப் போகிற வெற்றி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாத பாரதத்திற்கு முதல் படி என்றார்கள். தேர்தல் முடிவுகள் மதவாதக் கட்சி இல்லாத  தென்னிந்தியாவிற்கு படிக்கல்லானது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லாத போதும், பல  மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களைகுதிரைப் பேரங்கள்வழி பெற்று ஆட்சியைப் பிடித்தவர்கள்; குடியாட்சித்  தத்துவத்தைச் சிதைத்தவர்கள். மதவாதம் வைத்து முடிசூட நினைத்தவர்கள் தோற்றுப் போனார்கள்.

தங்கள் கட்சி தோற்கடிக்க முடியாத கட்சி எனப் பேசியவர்கள் 2024 இல் மீண்டெழ  புதிய பாதை தேடுகிறார்கள். தற்போது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதீஷ் குமார், நவீன் பட்நாயக், சந்திர சேகர் ராவ், ஸ்டாலின் போன்ற முதல்வர்களின்எதிர்கட்சிகளின் ஒற்றுமைஎன்ற முழக்கம் அவர் களைப் பயமுறுத்தினாலும், புது வழி தேடுகிறார்கள். தங்கள் கையில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு களை வைத்து, மாநில ஆளுங்கட்சிகளை அசைத் துப் பார்க்கிறார்கள். ‘ரெய்டுபயம் காட்டுகிறார்கள். எதுவும் முடியாத நிலையில் புதிய வழி கண்டுள் ளார்கள்.

புதிய பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினர் களின்  எண்ணிக்கையைவிட அதிகமான இருக்கை கள் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அரசிற்கு மக்கள் தொகையின் அடிப்படையில், புதிய நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்ய திட்டம் உள்ளது. அப்படிச் செய்யப்பட்டால், தமிழகம் போல் வளர்ந்த மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும். உத்திரபிரதேசம் போன்ற வளர்ச்சி பெறாத மாநிலங்களில் பாராளுமன்றத் தொகுதிகள் கூடும். இது எண்ணிக்கை அடிப்படையிலான அரசியல் சதுரங்கத்தில்  புது வியூகம்.

தேர்தல் அரசியலில் நேரடியான தாக்குதல்கள் இருக்கும். மதவாதக் கட்சியின் தாய் அமைப்பிற்கு  அதில் எப்பொழுதும் நம்பிக்கை குறைவு. தனது மறைக்கப்பட்ட சில திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய காலக்கட்டாயம் வந்து விட்டதாக அவர்கள் எண்ணுகிறார்கள். முதலாவதாகஆட்சித் தலைவருக்கு முழு அதிகாரமும் வழங்கக்கூடிய அதிபர் ஆட்சி முறைக்கு மாறுவது ஒரு கட்சி ஆட்சி முறைக்கு உரிய பாதை என்கிறார்கள்.

அவர்களுக்கும் தெரியும், தங்கள்  ஒன்பதாண்டு கால ஆட்சியில் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த் தும் எந்த திட்டங்களும் இல்லை. வட மாநிலங் களின் வேலையில்லாத் திண்டாட்டம், உச்சம்  பெற்று புலம் பெயரும் தொழிலாளர்கள், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களில் தினம் ஆயிரக்கணக்கில் பசியாற வருகிறார்கள். ஆளும் அரசு பெரும் முதலாளிகளைக் காப்பதில், மதவாதம் பேணுவதில், எதையாவது செய்து ஆட்சியைத் தக்க வைப்பதில் முழு மூச்சாக இருக்கிறது.

நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என் பதை விட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவு பெற்றவர்களாக  இருப்பது நல்லது.

தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் அது குறித்த விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து பார்ப்போம்.