Namvazhvu
வரலாற்றுத் தொடர் 17 தமிழகத்தில் கிறிஸ்தவம்
Thursday, 17 Aug 2023 10:50 am
Namvazhvu

Namvazhvu

பிரான்சிஸ்கன் துறவிகளின் மறைப்பணி

போர்த்துக்கல்லில் இயேசு சபை முடக்கம் செய்யப்பட, அது குமரி மண்ணிலும் குறுகிய காலத்தில் நிகழ்ந்தது. எனவே, இயேசு சபையினரின் குமரி மறைத்தளங்களை 1765 இல் மூன்று பிரான்சிஸ்கன் அப்சர்வெண்ட்ஸ் சபையினர் 30 ஆலயங்களையும், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் ஆன்மிகப் பொறுப்பையும் ஏற்றனர். தந்தை அந்தோனியோ தெ கொன்சியாவோ, தேங்காய்பட்டினம், இராமன்துறை, இனையம் புத்தன்துறை, இனையம், மிடாலம் (இரு ஆலயங்கள்), குறும்பனை மற்றும் வாணியக்குடி ஆலயங்களின் பொறுப்பை ஏற்றார்.

தந்தை அந்தோனியா தெ ஜேசு மரியா அவர்களின் கண்காணிப்பில் புதூர், சின்னவிளைகடியப்பட்டணம், முட்டம், தோப்பு, இராஜாக்க மங்கலம், பெரியகாடு மற்றும் புத்தன்துறை ஆகிய ஆலயங்கள் ஒப்படைக்கப்பட்டன. தந்தை ஜான் தெ கிறிஸ்தோ பொறுப்பில் பள்ளம், மணக்குடி, கோவளம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆலயங்கள் இருந்தன. கோடிமுனை, குளச்சல் மற்றும் கொட்டில்பாடு ஆகிய ஆலயங்களின் பொறுப்பை மலபாரைச் சார்ந்த மறைமாவட்டக் குரு செபஸ்தியான் பெர்னாண்டஸ் ஏற்றிருந்தார். இருப்பினும், குறுகிய காலத்திலே இவ்வாலயங்களின் பொறுப்பை மற்றொரு பிரான்சிஸ்கன் குரு ஏற்றார்.

நாடார் கிறிஸ்தவர்களின் ஊர்கள் என்ற நீண்ட பட்டியலை பிரான்சிஸ்கன் வரலாற்று ஆய்வாளர் தந்தை மீர்ஸ்மேன் தருகின்றார். மீஞ்சேரி புதுக்கடை (புனித மரியன்னை), வருத்தட்டு (புனித சவேரியார்), குழித்துறை (புனித மிக்கேல்), உண்ணாமலைக்கடை (புனித மரியன்னை), ஆற்றூர் (புனித ஆன்ரூ), களியல் (புனித ஆன்ரூ), புத்தன்கடை (புனித யாகப்பர்), இரவிபுத்தன்கடை (புனித மரியன்னை), பனியாக்கடை (புனித ஆன்ரூ), முடுக்குறிச்சி (புனித தோமா), புதுமட்டங்குறிச்சி (புனித தோமா), திக்கணங்கோடு (புனித அந்தோனியார்), மேக்காமண்டபம் (புனித மரியன்னை), பத்மநாபபுரம் (மரியன்னை), ஓடியாகிரி (மரியன்னை), இரணியல் (புனித தோமா), தலக்குளம் (புனித பேதுரு), திருநயினார் குறிச்சி (புனித அந்தோனியார்), ஆளுர் (புனித நிக்கோலஸ்), வீராணி (மரியன்னை), வடசேரி (மரியன்னை) முட்டத்தூர் (புனித செபஸ்தியார்), ஆண்டியாபுரம் (புனித ஆன்ரூ), தலைகுடி (மரியன்னை), புலிக்குறி (புனித சூசையப்பர்), திருவிதாங்கோடு (புனித தோமா), கோட்டாறு (புனித சவேரியார்).

1765 ஆம் ஆண்டு, தகவலின்படி இவ்வூர்களில் நாடார் கிறிஸ்தவர்கள் இரண்டு அல்லது மூன்று இலக்க எண்ணிக்கையில் வாழ்ந்தனர். இவ்வாறு, குமரி முழுவதும் பதுரவாதோ அமைப்பின்கீழ், 1838 ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கன் துறவிகள் மறைப்பணியாற்றினார்கள்.

கார்மல் துறவியரின் மறைப்பணி

போர்த்துக்கல் பதுரவாதோ அமைப்பின் அத்துமீறல்களால் போர்த்துக்கல் நாட்டைச் சாராத மறைப்பணியாளர்கள் இந்தியாவில் பணியாற்ற பல்வேறு தடைகளைச் சந்தித்தனர். எனவே, பதுரவாதோ மறை மாவட்டத்தின் எல்லைகள் சுருக்கப்பட்டு, திருத்தந்தையின் நற்செய்திப் பேராயத்தின்கீழ் புதிய மறைத்தூது வட்டங்கள் 1830 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. கொச்சின் மற்றும் கிராங்கனூர் போன்ற நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பதுரவாதோ மறை மாவட்டங்கள் முடக்கப்பட்டு, நற்செய்திப் பேராயத்தின்கீழ் வெராபோலி மறைத்தூது வட்டம் 1838 இல் உருவாக்கப்பட்டது. இதில் பழைய கொச்சின் மற்றும் கிராங்கனூர் மறைமாவட்டங்களும் உள்ளடங்கும்.

அதிகளவில் உரோமன் கத்தோலிக்கர்களைக் கொண்ட வெராபோலி மறைத்தூது வட்டத்தின் பொறுப்பு கார்மல் துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இயேசு சபையினர், பிரான்சிஸ்கன் சபையினரைத் தொடர்ந்து, கார்மல் துறவிகளும் குமரி மண்ணில் தடம் பதித்தனர். மறைப்பணியைச் செவ்வனே ஆற்றிட வெராபோலி மறைத்தூது வட்டத்தை திருத்தந்தை 16 ஆம் கிரகோரி, மங்களூர், வெராபோலி மற்றும் கொல்லம் என மூன்றாக 1842 இல் பிரித்தார். கொல்லம் மறைத்தூது வட்டத்தில் கோட்டாறு முக்கிய மறைப் பகுதியாகத் திகழ்ந்தது. கொல்லம் 1886 ஆம் ஆண்டு செப்டம்பர்  1 ஆம் நாளன்று மறை மாவட்டமாக உயர்ந்தது. அதன் முதல் ஆயராக கார்மல் துறவி பெர்டினாந்து ஒசி நியமிக்கப்பட்டார். 1902 ஆம் ஆண்டு துணைஆயர் பென்சிகர் குமரி பகுதியை ஆறு வட்டங்களாகப் பிரித்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளார். அதன்படி,

வேங்கோடு பகுதி: (ஆலயங்கள்: 18 & கிறிஸ்தவர்கள்  4695)

மூளகுமூடு பகுதி: (ஆலயங்கள்: 19 & கிறிஸ்தவர்கள் 9000)

குளச்சல் பகுதி: (ஆலயங்கள்: 7 & கிறிஸ்தவர்கள்7012)

காரங்காடு பகுதி: (ஆலயங்கள்: 14 & கிறிஸ்தவர்கள்10294)

கோட்டாறு பகுதி: (ஆலயங்கள்: 15 & கிறிஸ்தவர்கள் 4695)

கன்னியாகுமரி பகுதி: (ஆலயங்கள்: 7 & கிறிஸ்தவர்கள் 4774)

இவ்வாறு கொல்லம் மறைமாவட்டத்தின்கீழ் குமரி பகுதியில் 47,699 கிறிஸ்தவர்களும், 80 ஆலயங்களும் இருந்தன. 4 ஆண்டு இடைவெளியில் 1906 ஆம் ஆண்டு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 63,300 ஆக உயர்ந்தது.

1887 இல் கொச்சின் பதுரவாதோ மறை மாவட்டம்  மீள் உருவாக்கம் பெற்றது. அதன்கீழ் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட வடக்குப் பகுதியில் அமைந்த சில கடலோரக் கிராமங்கள் கொச்சின் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டன. சுவிஸ் கார்மல் குரு அலோசியஸ் மரிய பெஞ்சமின் கொல்லம் ஆயராக இருந்தபொழுது, குமரி மாவட்டத்தில் தமிழ் பகுதிகளை கோட்டாறு கீழ் தனி மறைமாவட்டமாக உருவாக்கிட உழைத்தார். 25 ஆண்டுகால தனது ஆயர் பணியில் 112 பள்ளிகளைத் திறந்து, மக்கள் எழுச்சி பெற ஆயர் பென்சிகர் பெரிதும் உதவினார்.

கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து கோட்டாறு புதிய மறைமாவட்டமாக 1930 ஆம் ஆண்டு, மே 26 ஆம் நாள் உருவானது. கோட்டாறிலிருந்து புதிய மறைமாவட்டமாகக் குழித்துறை 2015 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் நாளன்று உருவானது.