Namvazhvu
இந்திய நாடா? இந்து நாடா?
Friday, 18 Aug 2023 07:26 am
Namvazhvu

Namvazhvu

இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆர். எஸ்.எஸ். அமைப்பிற்கு எந்தப் பங்குமில்லை. ஆகவே, அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா விடுதலைப் போர், தேச பக்தி எனப் பேசுவது வாக்கு வங்கி அரசியலே! சில ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் விடுதலைப் போரில் கலந்து கொண்டது, மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவந்தது என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், அந்தமான் சிறையிலிருந்து பறவையின்  இறக்கையில் அமர்ந்து தப்பி வந்தது எனச் சொல்லப்படுவது புராணக் கதை. அது குறித்துச் சமூக ஊடகங்களில் வந்த விவாதங்கள் பலே  சிரிப்பு ரகம்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விடுதலைப் போரில் தங்கள் பங்களிப்புக் குறித்த விவாதங்களில், தாங்கள் அமைப்பு ரீதியாகக் கலந்து கொள்ளவில்லை; ‘ குழுக்களாகப் போராட்டத்தில் சேர்ந்து கொண்டோம்என ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளார்கள்.

1925 ஆம் ஆண்டு  துவங்கப்பட்ட ஆர்.எஸ். எஸ். அமைப்பு, இந்துக்களுக்கான இந்து இராஷ்டிரம் என்பதிலும், ‘இந்துஸ்தான்என்பதிலும் உறுதியாக இருந்தது. அப்போதே தங்களைச் சமூக அமைப்பு எனக் கூறிக் கொண்டே, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர். விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு ஆள்காட்டி அமைப்பாக, அடிவருடிகளாக இருந்தனர் என்பது வரலாற்றுப் பதிவுகள். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் 52 ஆண்டுகளாகத் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்பதே  இவர்களின் தேசபக்தியின் அளவுகோல்.

அனைத்து  மதத்தினரையும், அனைத்து மொழியினரையும், அனைத்து இனக் குழுக்களையும், அனைத்து மாநிலத்தவரையும் இணைத்த இந்தியச் சுதந்திரப் போராட்டம் பெற்ற விடுதலை, அதில்  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் கோபத்தில் இருந்தது. அக்கோபம் தேசப்பிதா காந்தியடிகளின் படுகொலையில் வெளிப்பட்டது.  1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்து, 1948 பிப்ரவரி 4 இல் அரசு அறிக்கை வெளியானது. அதில்  கூறப்படுவதாவது: ‘ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம்என்று கூறுகிறது. ஆனால், நடை முறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துகளுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரிய வருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும்ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை - இராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் இரகசியமாகவே உள்ளன.

இங்கு குஜராத், மணிப்பூர் கலவரங்களைப்  பொருத்திப்   பாருங்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மை முகம் தெரியும்!

ஆர். எஸ். எஸ். அமைப்பு  இந்தியாவில் மூன்று முறை தடை  செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுது, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது தடை செய்யப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு பா... என்பது இந்திய அரசியலின் பால பாடம்.   

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரீதியாகத் தீவிரவாத அமைப்பாக இருப்பதால், காவல்துறை துணையோடு அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் துவங்கிமணிப்பூருக்கு நகர்த்தி விட்டது. சமூக ஊடகங்களில் பெண்களை நிர்வாணப்படுத்திய, குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சிப்  பெற்றவர்கள் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் அவர்கள் இருக்கும் புகைப்படங்ளே முதல் ஆதாரம்.

2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா வரவுள்ளது. அதற்குள் அமைப்பு ரீதியான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை நிறை வேற்றிக்கொள்ளத் துடிக்கிறது. ஒரே நாடு- இந்து நாடு, ஒரே மதம் - இந்து மதம், ஒரே மொழி- இந்தி மொழி, ஒரே சட்டம்-பொது சிவில் சட்டம் என வெறிபிடித்து அலைகிறார்கள்.

2024 பொதுத் தேர்தலில், எத்தகைய சதித் திட்டங்கள் தீட்டியும் வெல்வதே ஆர்.எஸ்.எஸ்.சின்   முழு முனைப்பு. அதற்கான கலவரங்கள், சதித் திட்டங்கள் நம் கற்பனைக்கு எட்டாதவை. ‘அகண்ட பாரதம்என்பது அவர்களின் கனவு. அதற்கான முயற்சிகளுக்கு நகர்த்த அதிபர் ஆட்சி முறையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டம். அதற்காக மக்களவை, மாநிலங்களவையில் பெரும்பான்மை இடங்களைப்  பெற, அரசு தீவிரவாதம் உள்ளிட்ட கொடூரங்கள் இனி வேகமாக நடத்தப்படலாம். நாடே பற்றி எரிந்தாலும், இந்துத்துவாவை உள்ளடக்கிய வாக்கு வங்கியே அவர்கள் முதல் குறி.

சென்னையைச்  சேர்ந்த மறைந்த இந்துத்துவா தலைவர் ஒருவர்  கலவரங்கள் மூண்ட பின்  “இப்போதைய ஸ்கோர் என்ன?” எனக் கிரிக்கெட் மாதிரி கேட்பாராம். உயிர்ப்பலிகள் அவருக்கு ரன் மாதிரி வெற்றிக்கான இலக்காம். இதுதான் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். மத வெறியை முறியடிக்க 2023, ஜூலை மாதம் 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில், இந்தியத்  தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance, I.N.D.I.A.) என்பது, இந்தியத் தேசிய காங்கிரசு  தலைமையிலான இந்தியாவில் உள்ள 26 கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு பொதுவுடைமை  சோசலிச அரசியல் கட்சிகளின்  ஓர் அரசியல் கூட்டணியாகும். ஹிட்லரின் நாசிசத்தை ஒட்டிய வலதுசாரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்கொள்ள இருக்கும்இந்தியாகட்சிகள் இடது சாரி சிந்தனை கொண்டவை.

இந்தியாஎன்ற பெயர் தீவிரவாத அமைப்புகளுக்கான பெயரில் இருப்பதாக, அதன் வடிவாக  இருப்பதாகப்  பாரதிய ஜனதா கட்சி  கருத்துத் தெரிவிக்கிறது. ‘அவர்கள் பெயரே அவர்கள் யார் எனக் காட்டுகிறதுஎன, தன் தேச பக்தி  குறித்துத் தனக்குத் தானே நற்சான்று வழங்குகிறது பா... அவர்கள்  எங்கும் முழங்கும்பாரத் மாதாக்கி ஜேஎன்ற வெற்று முழக்கமே அவர்களை அடையாளப்படுத்துகிறது.

விடுதலைப் போரில்பாரத மாதாஎன உருவகப்படுத்தப்பட்ட பாரத மாதா கையில் தேசியக் கொடி இருக்கும். இவர்கள் பாரத மாதாவுக்குத் தேசியக் கொடிக்குப் பதில் காவி கொடி கொடுத்து, தங்கள் நிறம் எனக் காட்டுகிறார்கள். இவர்கள் பெரியாருக்கும், திருவள்ளுவருக்கும் காவிச் சாயம் பூசியவர்கள்! வாக்குப் பெற  இவர்கள் என்றும் ஏற்றுக் கொள்ளாத அம்பேத்கரைக் கூட  சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

2024 - மக்களவைத் தேர்தல் முனைப்புகள், பெற்ற விடுதலையைப் பேணுவதாக, தேசத்தின் மதச்சார்பற்றத் தன்மையை நிலைநாட்டுவதாக, சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக, அதற்கான தர்ம யுத்தமாக இருக்கும்.

இறுதியில், தர்மமே வெல்லும்!