Namvazhvu
27, ஆகஸ்ட் 2023 ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 22:19-23, உரோ 11:33-36, மத் 16:13-20
Saturday, 26 Aug 2023 05:49 am
Namvazhvu

Namvazhvu

நல்வாழ்வில் அக்கறை கொள்ளும் தலைமை தேவை!

2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் 82 வயதான திருத்தந்தை பிரான்சிஸ், தெற்கு சூடான் நாட்டுத் தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிடும் காட்சி மிக விரைவாக ஊடகங்களில் பரவியது. திருத்தந்தை பிரான்சிஸ் உள் நாட்டுப் போரை விட்டுவிடுமாறு தெற்கு சூடான் நாட்டின் அதிபர் சல்வாகிர், துணை அதிபர் ரெபேக்கா நியான்டெங் மற்றும் அதிருப்தி தலைவர் ரியாக் மக்சார் ஆகியோரது கால்களில் விழுந்து முத்தமிட்டார். அப்போது திருத்தந்தை, “இப்போது இருக்கும் பகைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்; அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போர் நிறுத்தப்பட வேண்டும்; அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் களையப்பட வேண்டும்; நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்க, நீடித்த அமைதி நிலவ வேண்டும். இதுவே எனது கனவுஎனக் கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் செய்கையைக் கண்டு துணை அதிபர்களுள் ஒருவர் ரெபேக்கா நியான்டெங் கூறும்போது, “திருத்தந்தையின் இந்தச் செயலால் நான் நெகிழ்ந்து போனேன். இதுபோன்ற நிகழ்வை நான் கண்டதே இல்லை. திருத்தந்தை என் பாதங்களை முத்தமிட்டபோது நான் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்என்றார். அதிபர் சல்வாகிர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “திருத்தந்தை எங்கள் பாதங்களை முத்தமிட்டபோது நான் அதிர்ச்சியடைந்து நடுங்கினேன். இது எங்களுக்கு ஓர் ஆசியாக அமைந்தது. நம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடினால், அது பெரும் சாபமாக அமையும்என்று கூறினார்.

ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று உலக நாட்டுத் தலை வர்களுக்கே முன்மாதிரி காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் இலவசமாகத் தரும் அதிகாரம், நீதி, நேர்மையுடனும், இறைத்தந்தையின் மனநிலையுடனும் பணியாற்றுவதே பதவிக்கு அழகு. நாட்டு மக்களின் சுமைகளை உறுதியான முறையில் தூக்கிச் சுமக்கவே பதவி தரப்பட்டுள்ளது எனும் அழகிய பாடங்களை இன்றைய வழிபாடு நமக்கு மிக அருமையாகக் கற்றுத்தருகிறது.

ஆகாசு மன்னனின் இறப்பிற்குப் பிறகு, அவரது மகன் எசேக்கியா (கி.மு. 715-687) எருசலேமில், யூதாவின் அரசராக இருந்தார். இக்காலத்தில் தென் நாடாம் யூதா வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. மிகவும் பயந்துபோன மன்னன், அதிலிருந்து தப்பிக்க அறிவற்ற விதத்தில் அசிரியாவுடன் உடன்படிக்கை செய்திருந்தான். அசிரியாவுடன் இவர்கள் செய்த உடன்படிக்கையே இவர்களுக்குப் பேராபத்தாக மாறியது. பெரிய அளவிலான பணத்தைத் தென் நாடு அசிரியாவிற்குக் கப்பமாகக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனைத் தாங்க முடியாத அரசர் எசேக்கியா, அசிரியாவை எதிர்க்கத் துணிந்தார். ஆகவே, எசேக்கியா எகிப்தின் உதவியையும் நாடினார். ஆனால், இறைவாக்கினர் எசாயா, “வேண்டவே வேண்டாம்; கடவுளிடம் சரணடையுங்கள்என்று இறைவன் சார்பாக எச்சரித்தார். வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கடவுளின் கரத்தை நாடாமல், தங்களின் கைவன்மையில் அதிநம்பிக்கை கொண்டது மடமையின் உச்சக்கட்டமாகும். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் எசேக்கியாவின் அரச மாளிகையில் மிக முக்கியமான அதிகாரியும், பொறுப்பாளரும், தலைமை அமைச்சராகவும் இருந்த செபுனா. இவரிடமே அதிகாரத்திற்கான திறவுகோல் இருந்ததுநாடு ஆபத்தில் இருக்கும்போது, மன்னன் எசேக்கியாவுக்கு நல்ல அறிவுரை கொடுத்து வழிநடத்தாது, தன் நினைவு காலங்காலமாக நிலைத்திருக்கும் பொருட்டு, இரகசியமாகத் தனக்கென்று ஒரு கல்லறையை உயரமான மலைப்பாறையில் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய வரம்பை மீறி, தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தன் பொறுப்பை மறுத்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட திறவுகோலை மதிக்காது, மனசாட்சியின்படி செயல்படாமல் நடந்தார். இறைவார்த்தையின் ஒளியில் மக்களின் நிரந்தர நலனைப் பற்றிச் சிந்திக்காது, சுயநலம் தரும் தற்காலிக மகிழ்ச்சியில் ஆர்வம் கொண்டு அலைந்தார். எனவே, இவருக்குப் பதிலாக இல்கியாவின் மகனான எலியாக்கிம் தலைமை அமைச்சர் பதவியில் அமர்த்தப்படுவார் என்று முன்னறிவிக்கிறார் எசாயா.

இன்றைய நற்செய்தியில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் இடையேயான உரையாடல் கலிலேயாக் கடலின் வலதுபுறம் 20 மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த பிலிப்பு செசாரியா பகுதியில் நிகழ்கிறது. இந்த இடம் எர்மோன் மலைக்கு அடியில் இருந்த ஒரு பசுமையான நகரமாகும். கோடை காலத்திலும் நீர் கிடைக்கக்கூடிய மிகவும் வளமான வட இஸ்ரயேலின் ஒரு பகுதி. பெரிய ஏரோதின் மகனான பிலிப்பு, பிலிப்பியாவின் குறுநில மன்னராக இருந்தார். பிலிப்பு இந்த நகரைப் புதுப்பித்தார். இதனை அகுஸ்து சீசருக்கு அர்ப்பணித்து, அதற்குச்செசாரியாஎன்று பெயர் சூட்டினார். கடலோர செசாரியாவிலிருந்து இதனை அடையாளப்படுத்த இதனைப் பிலிப்பி செசாரியா என அழைத்தார். இந்த நகர்தான் பிலிப்புவுடைய அரச மற்றும் சமயத் தலைநகராக விளங்கியது. இங்குதான் கிரேக்க உற்பத்தியின் கடவுளாகபான்என்ற சிலை வழிபாடு அதிகமாக இருந்தது. எனவே, ஒரு காலத்தில் பிற இனத்துத் தெய்வத்தின் திருத்தலமாக இருந்து, பிறகு உரோமைப் பேரரசன் அகுஸ்துவின் ஆலயமாக மாற்றப்பட்ட இடத்தில்தான் பேதுருவின் மாபெரும் நம்பிக்கை அறிக்கை முழக்கமிடப்படுகிறது.

நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்!” என்ற நம்பிக்கை அறிக்கை, இயேசு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பதன் அடையாளம். பேதுருவின் இந்த நம்பிக்கை அறிக்கையே தொடக்கக்காலத் திரு அவையின் அடித்தளமாக அமைந்தது. ‘விண்ணகத்திலுள்ள என் தந்தையே இதை வெளிப்படுத்தியுள்ளார்எனும் இயேசுவின் பாராட்டு, அவர் பெறவிருக்கிற பொறுப்பிற்குத் தந்தையின் உடன்பாடு உண்டு என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே, பேதுரு மனிதர்மீது கொண்ட நம்பிக்கையினாலன்றி, கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் திரு அவையின் போதனைகளை அடையாளப்படுத்தும் விண்ணரசின் திறவுகோல்கள் அவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

கடவுளின் அருள் செல்வமான அவரது ஞானமும், அறிவும்தான் இன்று நல்ல தலைமை உருவாக நாட்டுக்கும், திரு அவைக்கும் தேவை. கடவுளின் ஞானம்தான் உலகை நடத்திச் செல்வதுடன், மக்களுக்கு மீட்பு அளிப்பதிலும் அடங்கியுள்ளது. மனித அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட இறை ஞானம், உலகை வழிநடத்தவும், மீட்கவும் தேவை என்பதை இரண்டாம் வாசகம் வழியாக விளக்கிட முயல்கிறார் திருத்தூதர் பவுல்.

எனவே, மூன்று இறைவார்த்தைப் பகுதிகளுமே மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்ளும் நல்ல தலைமை உருவாக நம்மை அழைக்கின்றன.

இன்று நாட்டில் நடக்கும் அரசியல் சூழலைக் கூர்ந்து கவனிக்கும்போது, கைம்மாறு கருதாத, பிரதி பலன் பார்க்காத, சுயநலம் மற்றும் சுயவிளம்பரம் தேடாத மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெறுவதற்காகநாக்கு யாகம்நடத்தும் தலைவர்கள், மக்களுக்கென்று ஒரு பிரச்சினை எழும்போது எவரையும் களத்திலே காணமுடியவில்லை. ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்; பிறர் நலம் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம்என்று முன்மொழிந்த நம் முன்னோர்களின் வாக்கு இன்று பொய்யாய், பழங்கதையாய், கனவாய், கானல்நீராய் காணாமல் போய்விட்டது. ‘வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றோம்; ஆனால், கொள்ளையிடும் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து இன்னும் விடுதலை பெறமுடியவில்லையே!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடவேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில், இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குத் தரும் பாடங்கள் என்னென்ன?

1. தன்னலம் மறுத்து, பொதுநலனுக்காகத் தொண்டாற்றும் தலைவர்களே உண்மையான மக்கள் தலைவர்கள். கடமை தவறிச் செயலாற்றும் தலைவர்கள் ஒரு நாள் தகுதியிறக்கம் செய்யப்படுவார்கள். நாட்டின் நல்வாழ்வில் கவனம் செலுத்தாது, சுயநலச் சிறையில் சிக்கி இருப்பவர்கள் ஒரு நாள் மக்கள் மனத்திலிருந்து தூக்கி எறியப்படுவர்கள்

2. பல ஏழைகளைப் பகடைக்காய்களாய்ப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும், இறுமாப்புடன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்தத் தலைவரும், தலைமையும் நிலைத்திருக்கப் போவதில்லை. இறுதியில், தோல்வியும், தகுதி இழப்புமே வந்தடையும் என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

3. ‘நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லைஎன்று ஒதுங்கி நிற்கும் போக்குதான் இன்றைய அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம். அரசியல் என்பது அழுக்கு என்று மூக்கைப் பிடிக்காமல், அதைச் சுத்தம் செய்ய அறிவார்ந்த நல்ல உள்ளங்கள் தேவை என்பதை ஒவ்வொருவரும் உணர்வது நலம். அரசியல் மட்டும் ஆரோக்கியமாக அமைந்து விட்டால், இந்தச் சமூகம் நலமாக அமையுமன்றோ!

ஆண்டவர் உன்னதத்தில் உறைபவர்; எனினும், நலிந்தோரைக் கண்ணோக்குகின்றார். ஆனால், செருக்குற்றோரைத் தொலைவிலிருந்தே அறிந்து கொள்கின்றார்” (திபா 138:6).