Namvazhvu
03, செப்டம்பர் 2023 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எரே 20:7-9; உரோ 12:1-2; மத் 16: 21-27
Friday, 01 Sep 2023 10:46 am
Namvazhvu

Namvazhvu

துன்பங்களின் மத்தியிலும் துணிவுடன் இறைப்பணியாற்ற...

ஆஸ்கர் ரொமேரோ 1977, பிப்ரவரி 22 ஆம் நாள் சான் சால்வதோரின் பேராயராக நியமிக்கப்பட்டார். மரபுச் சிந்தனை செயல்பாட்டாளராகவே இருந்த இவருக்குள், மனிதநேயம் ஒரு மூலையில் உறங்கிக் கிடந்தது. 1979 மிலிட்டரி ஜூன்தா எல்சால்வதோரில் ஆட்சியைக் கைப்பற்றியது. அமெரிக்கா இந்த ஆட்சிக்கு ஆதரவு தந்தது. 1980 ஆம் ஆண்டில் மட்டும் 12,000 பேர்களை அது கொன்றதாகச் சொல்லப்படுகிறது. தன் கண்முன்னால் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள், மானிட உரிமை, நீதிக்காகப் போராடியவர்கள் நியாயமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்துப் பதைபதைத்தார் ரொமேரோ. 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் இவரது நெருங்கிய நண்பரும், இயேசு சபை அருள்பணியாளருமான ருட்டிலியோ கிராயதே திருப்பலி நிறைவேற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்த படைவீரர்களால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். புரட்சிப் புயலாக, நீதியின் இறைவாக்கினராகச் சீறி எழுந்தார் ரொமேரோ. மிலிட்டரி ஜூன்தா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துக் கண்டனம் செய்தார். இந்த ஆட்சிக்குத் துணை போகும் அமெரிக்க அதிபருக்குத் தனது கண்டனக் கடிதத்தை எழுதினார். துன்பப்படும் ஏழைகளுடன் தோழமை உறவை வளர்த்தார். இலத்தீன் அமெரிக்காவில் ஏழை எளியோர், ஒடுக்கப்பட்டோர் சார்பாக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், அவர்களின் நீதிக்காகப் போராடியதால் 1980, மார்ச் மாதம் 24 ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றும்போதே ரொமேரோ துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அரசியல் சமூக அநீதிகளை எதிர்த்துப் பொங்கிய இரத்தம் தரையிலே அவர்களுக்காய் ஆறாய் ஓடியது. ‘இனிமேல், யார் எங்களுக்காகப் போராடுவார்? யார் ஆதிக்கச் சக்தியை எதிர்த்துக் குரல் கொடுப்பார்?’ என்பதே சுற்றி நின்றவர்களின் ஏக்கமாக இருந்தது. இறைவாக்குப் பணி என்பது துன்புறும் ஊழியரின் பணி. நீதிக்காக, உண்மைக்காகப் போராடும்போது துன்பங்களைச் சந்திக்க வேண்டியது எதார்த்தம் என்பதை இந்நூற்றாண்டிலே நம் உள்ளங்களில் விதைத்தவர்

புனித ஆஸ்கர் ரொமேரோ.

இயேசுவைத் தீவிரமாகப் பின்பற்றுவதே சீடத்துவம். அவரை அதிகமாக அன்பு செய்வதும், அவரோடு உடனிருப்பதும், தீமையின் ஆதிக்கத்தை அழித்தொழிப்பதும், நற்செய்தியை வாழ்வால் பறைசாற்றுவதும், அன்றாடம் இயேசுவுக்காக, அவர்தம் மதிப்பீடுகளுக்காக வாழும்போது, சிலுவைகளைச் சுமப்பதுமே உண்மையான இறைப்பணி. உயிரையும் பணயம் வைத்துச் செல்லும் துணிவுமிக்க சீடத்துவப் பயணத்தில் பயணிக்க அழைக்கிறது இன்றைய வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் எடுத்தியம்பும்எரேமியாவின் புலம்பல்அவர் அனுபவித்த துன்பங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை வெளிப்படுத்துகின்றன. பிறந்த நாளை, பெற்றெடுத்த தாயை, ஏன் அச்செய்தியை அறிவித்தவரைக்கூட அவர் சபிக்கிறார். இவ்வாறு பிறந்த நாளைச் சபிப்பது, உயிரை எடுத்துக்கொள்ள மன்றாடுவது துன்பத்தின் உச்ச நிலையைக் குறிப்பதாக உள்ளது (1அர 19:4; யோபு 3).

மென்மையான அன்புள்ளம் படைத்த எரேமியா ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையினாலும், சிலைவழிபாடு செய்தமையினாலும் உடன்படிக்கையை மீறியதினாலும் அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு இறைவனால் பணிக்கப்பட்டார். எனவே, யூதா நாட்டினர் நாடு கடத்தப்படுவர் என்ற இறைவனின் செய்தியைப் போதிக்க வேண்டியிருந்தது. நகரமும், ஆலயமும் அழிந்துபோகும் எனச் சபிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் எரேமியா. எல்லா நேரமும்வன்முறை’, ‘அழிவுஎன்றே அவர் பேச வேண்டியிருந்தது. எனவே, இறைவாக்கினர் எரேமியா மக்களின் எதிர்ப்புக்கும், நகைப்புக்கும் ஆளானார்.

மேலும், இம்மேரின் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர் வாயிலில் சிறையில் அடைத்தான் (எரே 20:1-2). தன் சொந்த மக்களே தன்னை ஏற்றுக்கொள்ளாத் தன்மையையும், தனக்கு எதிராகச் செய்கின்ற கிளர்ச்சியையும் நினைத்து வருந்துகிறார் எரேமியா. நிந்தைக்கும், அவமானத்திற்கும், சிறைத்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் ஆளாகின்றார். இவ்வகைத் துன்பங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தையை அறிவித்ததால் வந்தவையே என்றுணர்ந்து தன்னையே நொந்துகொள்கிறார்; சுய சாபமிடுகிறார். இந்நிலையில்தான்ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்! நானும் ஏமாந்து போனேன்!” (20:7) என்று தன்னை அழைத்த ஆண்டவரிடமே முறையிடுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் பாடுகளை அறிவித்துத் தாம் மக்களுக்காகப் பணியாற்றித் தியாகம் செய்து இறக்க வேண்டிய மெசியா என அறிவிக்கிறார். ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’(மத் 16: 16) என்று உரைத்த பேதுருவால், மெசியா நிலையானது, துன்பத்தின் வழியாகவே வரும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.‘மெசியாஎன்ற பெயர் உன்னத அரசப் பதவிக்குரிய பெயராகக் கருதப்பட்டமையால், ‘மெசியா பாடுபடுதல் வேண்டும்என்பதைப் பேதுருவால் ஏற்க முடியவில்லை. எனவே, ’ஆண்டவரே! இது வேண்டாம்! இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத் 16:22) என ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.

துன்பத்திலிருந்து விலகி நிற்க ஆசைப்பட்ட எரேமியாவைப்போல, இங்கே பேதுருவும் அதே நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறார். ஆனால், இருவருக்கும் துன்பத்தின் வழியாகவே இறைப்பணி சாத்தியம் என்பதை இறைவன் உணர்த்துகிறார். துயரமில்லாத, துன்பமில்லாத, போராட்டமில்லாத இயேசுவை நம்மால் பார்க்க முடியாது.

2018, அக்டோபர் 14ஆம் நாள் பேராயர் ஆஸ்கர் ரொமேரோவைப் புனிதராகத் திருநிலைப்படுத்தியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் தனது மறையுரையில், “இயேசு ஒரு வேரோட்டமான புரட்சியாளர்என்றார். இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவோரின் வாழ்வு துன்பங்கள் நிறைந்த வாழ்வு. திருத்தூதர்கள், தூயவர்கள், இறையடியார்கள், மறைச்சாட்சிகள், மாபெரும் மனிதர்கள் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தபோது உயிரை இழந்திருக்கிறார்கள். இறையடியார் ஸ்டேன் சாமி மற்றும் அருள்சகோதரி ராணி மரியா போன்றோர் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

எனவே, துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவுடன் இறைப்பணியாற்ற முன்வரும் நாம் நம்மையே கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாகப் படைக்க வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக அழைக்கிறார் திருத்தூதர் பவுல். ‘உயிருள்ள பலியாக நம்மைப் படைப்பதுஎன்பது, சமூக நீதிக்கான ஒளியை ஏற்றி வைப்பதாகும். மனிதர்களோடு கொள்ளும் நல்லுறவிலே, நீதியும் நேர்மையும் கொண்ட வாழ்விலே எளியவர்கள் ஏற்றம்பெற உழைப்பதிலே கடவுள் விரும்பும் பலி அடங்கியிருக்கிறது (எசா 1:10-20).

எனவே, தீய சக்திகளுக்கும், தீமைகளுக்கும் எதிராகப் போராடும்போது, எண்ணற்ற துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எரேமியாவைப் போல இறைவாக்குப் பணியைத் துறக்க மனம் சொல்லும். ஆனால், இறைவனால் தொடப்பட்ட மனிதர்கள், தாங்கள் பெற்ற செய்தியை, அனுபவத்தை அடக்கி வைக்க தங்களால் முடியாது என்பதுதான் உண்மை. “அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனி பேசவும் மாட்டேன்என்று சூளுரைத்த எரேமியா, “உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றதுஎன்று சொல்லி மீண்டும் தன் பணியைத் தொடரவே விரும்புகிறார். அதுபோலவே வலியும், துன்பமும், ஏமாற்றமும், சோர்வும், விரக்தியும் பேதுருவைச் சூழ்ந்து நின்ற பொழுதிலும், இயேசுவுக்காக உயிர் துறக்கவே முன்வருகிறார். ஆக, இந்நாள் நமக்குக் கற்றுத்தரும் பாடங்களாவன:

1. இறைவனின் வாக்காக ஒலிப்பதும், உண்மைக்காகக் குரல் கொடுப்பதும், நீதிக்காகப் போராடுவதும், ஏழை எளியவர் சார்பாக இருப்பதும், ஒடுக்கப்பட்டோரின் உரிமை வாழ்வுக்காகப் போராடுவதுமே இறைவாக்கினரின் பணி.

2. இயேசுவைப் பின்செல்லுதல் என்பது சவால் மிக்க வாழ்வு. இயேசுவுக்காக, அவரது நற்செய்திக்காக அனைத்தையும் இழந்து, ‘இனி இழப்பதற்கு எதுவுமில்லைஎன்ற நிலைக்கு நாம் கடந்து வரவேண்டும். இதுவே உண்மையான இறைவாக்குப் பணி.

3. இறைவாக்கினராகும் அழைப்பு மிகப்பெரிய சவால். இது உயிரையும் பணயம் வைத்துச் செல்லும் துணிவுமிக்கப் பயணம். இச்சிலுவைப் பயணத்தில் நாம் தனியாக இல்லை, கடவுள் உடனிருக்கின்றார்.

இறுதியாக, துன்பங்களுக்கு மத்தியில் இறைப்பணியாற்றும் பொழுது நம்பிக்கையோடும், மகிழ்வோடும் இணைந்து பாட அழைக்கிறது இன்றைய திருப்பாடல்: “கடவுளே! நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப்பிடித்துள்ளது” (திபா 63:7-8).