Namvazhvu
​​​​​​​கூட்டியக்கத் தலைமைத்துவம்
Wednesday, 06 Sep 2023 10:04 am
Namvazhvu

Namvazhvu

 ‘கூட்டியக்கத் திரு அவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி’  என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு பதினாறாவது அகில உலக ஆயர்கள் மாமன்றப் பொதுப் பேரவை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கின்ற சூழலில், கூட்டியக்கத் தலைமைத்துவத்தைப் பற்றி ஜூலை 28 ஆம் நாள் திருச்சி, புனித பவுல் இறையியல் கல்லூரியில்கூட்டியக்கத் தலைமைத்துவம்: தளங்களும், தடங்களும்என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விரிவுரையானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தின் இந்தியத் தேசிய ஒருங்கிணைப்பாளர் அருள்முனைவர் யேசு கருணாநிதி விரிவுரையாற்றினார். இக்கருத்தரங்கு கூட்டியக்கத் தலைமைத்துவத்தைப் பற்றிய தெளிவை வழங்கியதோடு, கூட்டியக்கத் திரு அவை என்ற கருத்தாக்கத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலையும் ஆழப்படுத்தியதாக அமைந்தது.

கூட்டியக்கத் திரு அவைஎன்ற கருத்தாக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், அதிலிருந்து பிறப்பெடுக்கும் கூட்டியக்கத் தலைமைத்துவம் என்ற செயல்பாட்டைப் புரிந்து கொள்வது கடினம். “கூட்டியக்கப் பயணமே இம்மூன்றாம் ஆயிரமாண்டில் வாழும் நம்மிடம் கடவுள் எதிர் பார்ப்பதுஎன்று உலக ஆயர்கள் மாமன்றம் உருவாக்கப்பட்ட 50வது ஆண்டு நிறைவு விழா செய்தியில் அறைகூவல் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், “இறையாட்சிக் கனவை நோக்கி கிறிஸ்துவின் வழியிலும், தூய ஆவியாரின் ஒன்றிப்பிலும் இணைந்து பயணிக்கும் இறைமக்கள் சமூகமே கூட்டியக்கத் திரு அவைஎன்று குறிப்பிடுகின்றார். இது வரையறை அல்ல; மாறாக, திரு அவையைப் பற்றிய ஒரு விவரிப்பு.

திரு அவையை ஒருபோதும் வரையறுத்து விட முடியாது; காரணம், அது வரலாற்றில் நிறுவப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு மறைபொருள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திரு அவை பற்றிய இப்புதிய பார்வை இறை மக்களிடையே போதிப்பவர் - போதிக்கப்படுபவர், புனிதப்படுத்துபவர் - புனிதமடைபவர், வழிநடத்துபவர் - வழிநடத்தப்படுபவர் என்ற பிரிவினையை உடைத்து, ‘இணைந்து பயணித்தல்என்ற புதிய நடைமுறையை நம்முள் உருவாக்குகின்றது. இணைந்து பயணித்தல் என்பது, இணைந்து செவிமடுத்தலை அடிப்படையாகக் கொண்டது.

கூட்டியக்கத் திரு அவை என்பது, திரு அவையை மக்களாட்சித் தத்துவத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சி அல்ல; மாறாக, தூய ஆவியாருக்குச் செவிமடுக்கும் முயற்சி. மக்களாட்சித் தத்துவத்தில் பெரும்பான்மையின் குரலுக்குச் செவிமெடுக்க முடியுமேயன்றி, தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுக்க முடியாது. கூட்டியக்கத் திரு அவையானது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் என ஒருசிலர் வாயிலாகவே தூய ஆவியார் பேசுவார் என்ற பார்வையை மாற்றி, இறைமக்கள் அனைவர் வாயிலாகவும் பேசுவார்; எனவே, அனைவரும் செவிமடுக்கப்பட வேண்டும் என்ற புதிய பார்வையை நமக்குத் தருகின்றது.

இப்புரிதல் நம்பிக்கை, அறநெறி ஆகியவை பற்றி அனைவரும் தம் பொதுக்கருத்தைக் காட்டும் சூழலில் இயல்பு கடந்த நம்பிக்கை உணர்வினால் (sensus fidei) வெளிப்படுத்தப்படும் உண்மைகள், நம்பிக்கையில் தவற முடியாதவை எனக் கூறும் இரண்டாம் வத்திக்கான்  சங்கப் போதனையை அடிப்படையாகக் கொண்டது. தூய ஆவியாரின் குரலுக்குத் திறந்த மனம் உடையவர்களாவும், ‘நான் என்ன சொல்கின்றேன்?’, ‘நீ என்ன சொல்கின்றாய்?’, இறுதியாகநாம் என்ன சொல்கின்றோம்?’ என்று மூன்று நிலைகளில் உரையாடல்கள் நிகழ்த்துபவர்களாகவும் நாம் மாறும்பொழுது, இவ்விணைந்தச் செவிமடுத்தலில் பங்கேற்பவர்களாகின்றோம்.

திருமுழுக்கின் வழியாக அருள்பொழிவு செய்யப்பட்ட அனைவருமே கிறிஸ்துவின் போதிக்கும், புனிதப்படுத்தும், வழிநடத்தும் பணிகளில் பங்கேற்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளின் அடிப்படையில் பணிபுரிய அழைக்கப்படுகின்றார்கள். ஒரே தூய ஆவியாரே, பல்வேறு பணிகளுக்காக, பல்வேறு கொடைகளை பலருக்கும் பகிர்ந்து அளிக்கின்றார். எனவே, ஒவ்வொரு பணியும் தனித்தன்மை வாய்ந்ததேயன்றி, ஒன்றிலிருந்து மற்றொன்று உயர்ந்ததென்றோ, தாழ்ந்ததென்றோ நம்மால் கூற முடியாது. இணைந்து பயணித்தலில் முந்திச் செல்வதற்கோ, பின்தங்கி நிற்பதற்கோ இடமில்லை. இப்பார்வை கூட்டியக்கத் திரு அவையில் தலைமைத்துவத்திற்கு இடம் உண்டா? என்று கேள்வியை நம்முள் எழுப்பலாம். கூட்டியக்கத் தலைமைத்துவத்தைப் பற்றியச் சரியானப் பார்வை இக்கேள்விக்குப் பதிலளிப்பதாக அமைகின்றது.

கூட்டியக்கத் தலைமைத்துவம்ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற் 9:35) என்ற இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது. இயேசு திருத்தூதர்களைத் தலைமையாகக் கொண்டு திரு அவையை நிறுவினார். திருத்தூதர் பேதுருவைத் தனது சகோதரர்களை (பிற திருத் தூதர்களை) நம்பிக்கையில் உறுதிப்படுத்துபவராக்கினார். எனவே, திருத்தந்தையின் பார்வையில், கூட்டியக்கத் திரு அவையில் படிநிலை அமைப்பு முற்றிலும் தவிர்க்கப்படுதில்லை; மாறாக, படிநிலைக் கோபுரமானது தலைகீழ் கோபுரமாக மாற்றப்படுகிறது. உச்சத்தில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் இருப்பவர்களுக்குப் பணிவிடைச் செய்பவர்களாக மாறுகிறார்கள். இங்கு அதிகாரம் பணியாகப் பார்க்கப்படுகின்றது. ஆயர்களின் பணி மக்களின் குரலாக ஒலிப்பதும், உரோமை ஆயரின் பணி அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதுமாக அமைகின்றது.

திருமுழுக்கின் வழியாக தூய ஆவியாரின் அருள் பொழிவு பெற்ற இறைமக்கள் ஒவ்வொருவருக்குமே கடவுளோடும், பிறரோடும் தோழமையில் இணைந்திருப்பதற்கும், இணைந்து பங்கேற்பதற்கும், இணைந்து பணிபுரிவதற்கும் அருங்கொடை அதிகாரமானது (Charismatic Authority) வழங்கப்பட்டுள்ளது. குருத்துவ அருள்பொழிவின் வழியாகப் பெறப்படும் அதிகாரமானது, மக்களிடம் காணப்படும் பல்வேறு அருள்கொடைகளை அடையாளம் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான பணி சார்ந்த அதிகாரமே.

நல்ல சமாரியன் உவமையில் (லூக் 10: 25-37) இடம்பெறும் சமாரியரின் செயல்பாடுகளைக் கூட்டியக்கத் தலைமைக்கான சிறந்த உருவகமாக நம்மால் பார்க்க முடியும். நிறுத்துதல் (லூக் 10:33), பரிவு கொள்ளுதல் (லூக் 10: 33), செயலாற்றுதல் (லூக் 10: 34), ஆற்றுப்படுத்துதல் (லூக் 10: 34), கூட்டுறவு (லூக் 10: 35), ஒருங்கிணைத்தல் (லூக் 10: 35) என்ற ஆறு பணிகளை அவர் ஆற்றுவதை நற்செய்தியில் நாம் காண்கின்றோம். இவை அனைத்தும் நாம் இறைவனுடனான உறவிலும், பிறருடனான உறவிலும் நிலைத்திருக்கும் பொழுதே சாத்தியம். இறையாட்சியே இலக்கென இணைந்து பயணிப்போம். கூட்டியக்கத் திரு அவையில் தலைவர்கள் அதன் பணியாளர்களே.