Namvazhvu
மரியியல் தொடர் – 22 மரியாவின் முன்னடையாளங்கள்
Friday, 08 Sep 2023 07:25 am
Namvazhvu

Namvazhvu

மீக்கா 5:2-5:

நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும் வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது ஆண்டவரின் வலிமையோடும், தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கி தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்” (மீக் 5:2-5). இப்பகுதியை நாம் அதன் சூழலில் முதலில் காண வேண்டும்.

இறைவாக்கினர் மீக்கா என்பவர் இறைவாக்கினர் எசாயா என்பவரின் சம காலத்தவர் ஆவார். இவர் அரசன் யோத்தாம் ஆட்சியின்போது தனது இறைவாக்குப் பணியைத் தொடங்கினார். இக்காலத்தியப் பின்னணியைக் காணும்போது, யோத்தாமிற்குப் பின்பு அரசப் பொறுப்பேற்ற அரசன் ஆகாசு அசீரியாவுடன் சமரச உடன்படிக்கை செய்த காரணத்தால் (2 அர 16:7) யூதா நாடு அசீரியாவுக்கு அடிமையாய் இருந்தது. ஆகாசுக்குப் பின் பொறுப்பேற்ற அரசன் எசேக்கியா, எருசலேமை முற்றுகையிட்ட அசீரியாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை வழிநடத்தினார். இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில்தான், இறைவாக்கினர் மீக்கா தனது பணியைத் தொடர்ந்தார். இறைவாக்கினர் மீக்கா இத்தகைய முற்றுகையிடப்பட்ட தருணத்தை, துன்பம் நிறைந்த தருணத்தைப் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கின்றார்: “அரண் சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்” (மீக் 5:1). இதுவே மீக்கா 5:2-4 இல் காணப்படும் பகுதிக்கான பின்னணி ஆகும். இப்பொழுது மீக்கா 5:2-4 இல் உள்ள பகுதியை நாம் அலசி ஆராய வேண்டும். மீட்பு என்பது எருசலேமில் இருந்து அல்ல; மாறாக, மிகச் சிறியதாய்க் கருதப்பட்ட பெத்லகேமில் இருந்தே வரும் என இறைவாக்கினர் மீக்கா கூறுகின்றார் (பெத்லகேம் எனும் சிறிய ஊரானது எருசலேமில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது). பெத்லகேம் என்பது தாவீதின் ஊர். இந்தப் பெத்லகேமில் இருந்துதான் புதிய ஆட்சியாளர் தோன்றுவார் என இறைவாக்கினர் மீக்கா கூறுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் மீக்கா இறைவாக்கினரின் மெசியா பற்றிய இந்த இறைவாக்கைத் தாவீதின் வழிமரபில் தோன்றிய இயேசுவையே முன் குறிப்பதாய்க் காண்கின்றார்.

மீக்கா 5:3 இல் உள்ள பகுதி மரியாவுடன் எவ்வாறு தொடர்புடையது எனக் காண வேண்டும்: “பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்”. இதே வார்த்தைகளை மீக்கா தனது நூலில் பின்வரும் பகுதியிலும் கூறுகின்றார்: “பேறுகாலப் பெண்ணைப் போல் ஏன் வேதனைப்படுகின்றாய்?” (4:9); “பேறுகாலப் பெண்ணைப் போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு” (4:10). இந்தப் பகுதிகள் அனைத்தும் யூதா நாடு தனது பிரமாணிக்கமின்மையால் அனுபவிக்கவிருக்கும் துன்பங்களைக் குறிப்பதாய் உள்ளன. இவ்வகையில்பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்” (மீக் 5:3) எனும் பகுதியைச் சில திருவிவிலிய விளக்கவுரையாளர்கள் யூதா நாடு அடைந்த துன்பங்களைக் குறிப்பதாகக் கூறுவார்கள். மேலும், பேறுகால வேதனையில் இருக்கும் அவள் பெற்றெடுக்கும் பிள்ளை அவளுக்குத் துன்பத்தில் இருந்து விடுதலை தருவது என்பது அசீரிய அடிமைத்தனத்தில் இருந்து யூதா நாடு பெறவிருக்கும் விடுதலையைக் குறிப்பதாய் உள்ளது எனக் கூறுவார்கள். ஆனால், இந்த விளக்கத்தைத் திருவிவிலிய ஆசிரியர்கள் பலரும் ஏற்பது இல்லை. காரணம், இப்பகுதி இஸ்ரயேலை எதிர்காலத்தில் ஆளவிருக்கும் தலைவர், தாவீதின் வழி மரபில் இருந்து தோன்றுவதைத் தான் கூறுகின்றது. எனவே, இஸ்ரயேல் மக்களை மீட்கவிருக்கும் ஒரு தனிப்பட்ட நபரைக் குறிப்பதாய் இப்பகுதியைக் காண வேண்டும். இந்த நபர் இறைவாக்கினர் மீக்காவே நினைத்திராத ஒன்றாகிய, ஆனால், தூய ஆவியாரால் முற்றிலும் தூண்டப் பெற்று, மரியா பெற்றெடுக்கவிருந்த மெசியாவாகிய இயேசு அரசரைக் குறிப்பதாய் எழுதியிருக்க வேண்டும் என்பார்கள்.

3. பழைய ஏற்பாட்டில் மரியாவைக் குறிக்கும் பட்டங்கள்

3.1. மரியா, சீயோனின் மகள்

2சாமு 5:7 இல்தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார்என்று உள்ளது. பின்புசீயோன் மலைஎன்பது கோவில் கட்டப்பட்ட மலையைக் குறித்தது; அதுவே எருசலேம் எனவும் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், “சீயோனின் மகள்என்பது கி.மு. 721 இல் சமாரியாவின் வீழ்ச்சிக்குப் பின்பு வட நாட்டில் இருந்து வந்த ஏழைகள், இடம்பெயர்ந்த மக்கள் ஆகியோரால் நிரப்பப்பட்ட எருசலேமின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இப்பின்னணியில்தான் இறைவாக்கினர் மீக்கா அந்த மக்களுக்கு நம்பிக்கை வழங்கும் வகையில் தனது இறைவாக்கை உரைக்கின்றார் (மீக் 4:8, 10,13); இறைவாக்கினர் செப்பனியாவும்சீயோனின் மகளாகியஇந்த நலிவுற்ற மக்களுக்கு விடுதலையின் நம்பிக்கையை வழங்குவதைக் காண முடியும் (செப் 3:14-17). காலப்போக்கில், ‘சீயோனின் மகள்என்பது முழுமையான இஸ்ரயேலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது, அதாவது, கடவுளின் மீட்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அனைவரையும் குறிப்பதாய்ச்சீயோனின் மகள்என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

திருவிவிலிய ஆசிரியர்கள் பலர் லூக் 1:28-40 இல் காணப்படும் வானதூதரின் வாழ்த்துரை செப் 3:14-17 பகுதியுடனும், செக் 2:10 பகுதியுடனும் இணைந்து செல்வதாகப் பார்க்கின்றனர். எனவே, லூக் 1:28-40 இல் உள்ள வானதூதரின் வாழ்த்துசீயோனின் மகளுக்குச்சொல்லப்பட்டதாகக் கூறி மரியாவைச்சீயோன் மகள்எனக் கூறுவர். எனவே தான், திரு அவையும் மரியாவைச்சீயோனின் மகள்என அழைக்கின்றது: “ஆண்டவரில் மனத்தாழ்மையும், ஏழ்மையும் கொண்டோர் நம்பிக்கையோடு மீட்பை அவரிடமிருந்து எதிர்பார்த்து அதைப் பெறுகின்றனர்; இவ்வாறு மீட்புப் பெறுவோர் நடுவில் அவர் சிறந்து விளங்குகின்றார். இறுதியாக, சீயோனின் மாண்புமிக்க மகளான அவரோடு, வாக்குறுதியை எதிர்பார்த்திருந்த நீண்ட காலம் முடிந்து புதிய திட்டம் உருவாக்கப்பெறுகிறது. இத்திட்டத்திலே மனிதரைப் பாவத்தினின்று தம் உடலில் நிகழ்ந்த மறைநிகழ்ச்சிகள் வாயிலாக மீட்க இறைமகன் அவரிடமிருந்தே மனித இயல்பை எடுத்துக் கொண்டார்” (திரு அவை, எண் 55).

3.2. மரியா: அரசியும்-தாயும்!

தாவீதின் இறப்புக்குப் பின் பத்சேபாவின் பரிந்துரை காரணமாக, அவரது மகன் சாலமோன் அரசராக நியமிக்கப்பட்டார் (1அர 1:15-35). இதன் மூலம் பத்சேபாஅரசி-தாய்எனும் பட்டம் பெற்றார். சாலமோன் அரசனும் தனது தாய் பத்சேபா மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். பத்சேபாவும் அரசனின் அரியணைக்கு வலப்புறம் அமர்ந்து, அரசன் சாலமோனுக்கு ஆலோசனையும், பரிந்துரையும் வழங்கி, அவரின் ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். திரு அவையின் மரபிலும், வழிபாட்டிலும் பழைய ஏற்பாட்டில் காணப்பட்டஅரசி-தாய்எனும் இந்தச் சிந்தனை மரியாவை அரசியாக, இயேசுவிடம் நமக்காகப் பரிந்துபேசும் தாயாகக் காண்பதற்கு வழிவகுத்தது. எனவேதான், மரியாவை விண்ணக அரசியாகத் திரு அவை விழா எடுக்கின்றது. ‘மிகவும் இரக்கமுள்ள தாயேஎனும் செபம் மரியாவை அரசியாக, தாயாக, பரிந்துபேசுபவராகக் காட்டுகின்றது.

3.3. மரியா: ஓர் உடன்படிக்கைப் பேழை!

இஸ்ரயேலருக்கு உடன்படிக்கைப் பேழை என்பது கடவுளின் உறைவிடம் ஆகும். இவ்வகையில் மரியாவைப் புதிய உடன்படிக்கைப் பேழை என்று அழைக்கின்றனர். இதற்குச் சான்றாக, லூக்கா நற்செய்தியில் உள்ள பகுதிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்:

1) லூக்கா 1:35 இல் வானதூதர் மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்என்று கூறினார். பழைய ஏற்பாட்டில்நிழலிடுதல்என்னும் வார்த்தை கடவுளின் இருப்பை/பிரசன்னத்தைக் குறிக்கக் கூடிய ஒன்று. எனவேதான், உடன்படிக்கைப் பேழை வைக்கப்பட்டிருந்த இடத்தை மேகம் நிழலிட்டிருந்தது (விப 40:35) எனக் கூறக் காண்கிறோம். இவ்வகையில் மரியாவையும்உடன்படிக்கைப் பேழைஎன்றனர். காரணம், இயேசு கிறிஸ்துவைக் கருத்தாங்குவதன் மூலமாக இறைப்பிரசன்னம் மரியாவில் இருந்தது என்பர் விவிலிய அறிஞர்கள்.

(தொடரும்)