“நம்மைத் தூய்மைப்படுத்தும் செபம், இணைக்கும் தொண்டுப் பணிகள், ஒன்றிணைக்கும் உரையாடல் ஆகியவற்றில் ஒன்றிணைந்து பயணிப்போம்; கிறிஸ்துவை அறிவிப்பது ஒருபோதும் நம்மைப் பிரிக்காது; மாறாக, ஒன்றுபடுத்தும்.”
- செப்டம்பர் 11, ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா சபைக்கான செய்தி
“பணியிடத்தில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று; ஒரு முதலாளியின் முதல் கடமை தொழிலாளர்களுக்கு நன்மையின் வடிவமாக இருப்பது மற்றும் அவர்களை மனிதர்களாக மாண்புடன் நடத்துவது. தொழிலாளர்களை இயந்திரங்களாக, அவற்றின் உதிரிப் பாகங்களாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.”
- செப்டம்பர் 11, தேசியத் தொழிலாளர் இயக்கத்திற்கான செய்தி
“சகோதர - சகோதரிகளைக் குறை திருத்தம் செய்வது என்பது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று. நமக்கு எதிராகப் பாவம் செய்யும் நம் சகோதர-சகோதரிகளை மன்னித்து, அன்பு மற்றும் இரக்க உள்ளம் கொண்டவர்களாய் ஏற்று வாழ வேண்டும்.”
- செப்டம்பர் 10, ஞாயிறு மறையுரை
“தவறு செய்பவர்களைச் சுற்றி முதலில் உருவாக்கப்படும் வதந்திகள் மற்றும் புறணிப் பேச்சுகள் கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று. மக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் அவை ஒரு கொள்ளை நோய். இத்தகைய கொள்ளை நோய்கள் உறவுகளை மேம்படுத்தவும், வளரச் செய்யவும் ஒருபோதும் உதவாது; மாறாக, பிளவு, துன்பம் மற்றும் அவதூறுகளை மட்டுமே கொண்டு வரும்.”
- செப்டம்பர் 10, ஞாயிறு மூவேளைச் செபவுரை
“நமது அனுபவங்கள் கடந்த காலத்தை நினைவுகூரும் புகைப்படங்களாக, படத்தொகுப்புகளாக மூடிவைக்கப்படாமல், அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகப் புலப்படும் வகையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகளாக, உயிர்த்துடிப்புடன் வாழ்பவைகளாக இருக்க வேண்டும்.”
- செப்டம்பர் 9, இளையோருக்கான காணொளிச் செய்தி
“எழுத்தறிவுக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரமாக இருந்து, சமுதாயத்தில் இணக்கமாக ஒன்றிணைவதற்கும், சமுதாய முன்னேற்றத்தில் பங்கேற்கவும் உதவுகிறது.”
- செப்டம்பர் 8, உலக எழுத்தறிவு தினச் செய்தி