Namvazhvu
விடியல் இல்லா மீனவர் வாழ்க்கை!
Wednesday, 04 Oct 2023 11:17 am
Namvazhvu

Namvazhvu

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் புயல், கன மழை, கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களையும், துயரங்களையும் சந்திப்பதுண்டு. சில சமயங்களில் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டியும், திசை மாறி வேறு நாடுகளுக்குச் சென்று அவதிப்படும் அவலநிலையும் ஏற்படத்தான் செய்கிறதுபொதுவாக, மீனவராய் பிறந்த எல்லோரும் இதனைச் சந்திப்பது வாடிக்கை என்றாலும், தமிழக மீனவர்கள் படும் துயரம் வார்த்தைகளால் அடங்காது. இயற்கை இடர்ப்பாடுகளைவிட செயற்கை இடர்ப்பாடுகள் தமிழக மீனவர்களை வாட்டி வதைக்கின்றன.

எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடிப்பதும், படகுகள் மீது மோதி படகுகளைச் சேதப்படுத்துவதும், மீன்களை அள்ளிச் செல்வதும், வலைகளைச் சேதப்படுத்துவதும், படகுகளுடன் கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளை ஒப்படைக்க மறுப்பதும், படகுகளை அரசுடமை ஆக்குவதும், ஏலம் விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது.

கையகப்படுத்தப்பட்ட படகுகள் வெயிலிலும், மழையிலும், பாதுகாப்பின்றி சேதமடைந்த நிலையில் கடற்கரை ஓரங்களில் கவனிப்பாரின்றி கிடப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பல மீனவர்கள் மாற்று வேலை தேடிச் செல்லும் நிலை. தமிழக மீனவர்கள் விசயத்தில் ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைதான் தொடர்கின்றது.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் தாக்கப்படும்போது மேல் நடவடிக்கை ஏதுமின்றி, ஒன்றிய அரசு கண்டனத்தை மட்டும் தெரிவிக்கும் நிலைதான் உள்ளது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் நிலையில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை எதையும் கண்டுகொள்வதில்லை.

இந்தியக் கடலோரக் காவல்படை மட்டும் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை மீனவர்கள் எல்லை மீறும்போது அவர்களைக் கண்ணியமாக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைத்து விடுகிறது. ஆனால், இலங்கை இதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறது. இந்திய வெளியுறவுத் துறை இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படவில்லை. தமிழக முதல்வர் மீனவர் அடிக்கடி தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், ஒன்றியப் பிரதமர் அவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியும் இலங்கை அரசு கண்டு கொள்வதில்லை. தமிழக மீனவர் பிரச்சினை சார்பாக இந்திய வெளியுறவுத் துறை விரைந்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. தமிழக மீனவர்களைஇந்திய மீனவர்கள்என்று எண்ணாததால் துரித நடவடிக்கை எதுவும் இல்லை. அண்மையில் கூட இலங்கை அதிபர் இந்தியா வந்தபோது கூட மீனவர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கப்படவில்லை.

கடந்த 27 வருடங்களில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் பலியானதோடு மட்டுமல்லாமல், 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்ட மீனவர்கள்காணாமல்போய் உள்ளனர். இதுவரை இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள்மீது, குறிப்பாகத் தமிழக மீனவர்கள்மீது 4000க்கும் மேற்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளனர் என்பதைப் பத்திரிகைச் செய்திகள், ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. தற்போது இது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக மாறி விட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவே அஞ்சும் நிலையில் உள்ளனர். மீன் பிடிக்கச் சென்று திரும்பி வந்தால்தான் உயிருக்கும், உடமைக்கும் உத்திரவாதம்.

மீனவ அமைப்புகள் பலமுறை கூடி வேலை நிறுத்தம், ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பியும் எந்தப் பலனும் ஏற்பட்டதில்லை. பல இலட்சக்கணக்கான பணத்தைச் செலவிட்டு உருவாக்கிய தங்கள் படகுகள் இலங்கைக் கடற்படையால் பறிபோவதை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றனர். இத்துறையின் ஒன்றிய அமைச்சர் L. முருகன் மீனவர்களைச் சந்தித்து உறுதிமொழி அளித்தும், இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

செய்தித்தாள்களில் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது, சிறையில் அடைப்பு என்ற செய்தியினைப் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்டது. ஒன்றிய அரசு இதற்கு ஒரு நல்ல தீர்வு எடுத்திட, தமிழக மீனவர் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டும் என்பதே நம் எல்லோரின் எண்ணமாய் உள்ளது.