இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக் கூடாத நிகழ்வுகளில் ஒன்று, நம்பிக்கைத் துரோகம். எல்லா உறவுகளிலும் ‘நம்பிக்கைத் துரோகங்கள்’ மலிந்து விட்டன. பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கைத் துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. ‘அவன் இப்படி நடந்துக்குவான்னு நான் கனவுல கூட நினைக்கல...’, ‘அவளை அவ்வளவு நம்பினேன்; இப்படிச் செய்வானு நான் நினைச்சுக்கூட பாக்கல...’ - இந்த உணர்வுகளெல்லாம் நம்மில் எழாமல் இல்லை.
‘யாரை நம்புவது?’ என்கிற கேள்வி, வயது வேறுபாடின்றி அனைவராலும் கேட்கப்படுகிறது. ‘எவரையுமே நம்ப முடியவில்லையே!’ என்கிற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. உறவுகள் பொய்த்துப் போன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நல்லுறவு நீடிப்பதுபோல நாம் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஏன் நாம் எவருமே குற்றவுணர்ச்சி கொள்வதில்லை?
பெருகி வரும் குற்றங்களுக்கு மூலக்காரணம் ‘துரோகமே’. காதலிக்குக் காதலன் செய்யும் துரோகம், மனைவிக்குக் கணவன் செய்யும் துரோகம், கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம், பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யும் துரோகம், உடன் பணியாளர்களுக்கு அதிகாரிகள் செய்யும் துரோகம், மக்களுக்கு அரசியல்/ஆன்மிகத் தலைவர்கள் செய்யும் துரோகம், நோயாளிக்கு மருத்துவர் செய்யும் துரோகம், நாட்டிற்குத் தீவிரவாதிகள் செய்யும் துரோகம், இன்னும் பல... எனத் துரோகத்தின் பட்டியல் நீள்கின்றது. வயது வேறுபாடின்றி அனைவரும் துரோகத்தைச் சந்திக்கிறோம்; சுமக்கிறோம். இதிலிருந்து மீண்டு வருவது என்பது மறுவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்குச் சமம் என்று சொல்லலாம்.
‘நண்பர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் விருந்து கொடு; விருந்து முடிந்ததும் பாத்திரங்களின் எண்ணிக்கையைச் சரி பார்த்துக்கொள்’ என்று மேலைநாடுகளில் வேடிக்கையான பழமொழி உண்டு. ஒருவரை 100 சதவீதம் நம்பும்போது, அவர் அதை அளவு கடந்து பயன்படுத்திக் கொள்வதோடு, எல்லையைத் தாண்டவும் செய்கிறார் என்பது அனுபவம் கற்றுத்தரும் பாடம். நாம் நம்பிய ஒருவர் நமக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? நமக்கு அந்த நொடியில் என்ன செய்வதென்றே தெரியாது. ஒருவிதமான கோபம், வலி, அதிர்ச்சி எல்லாம் ஒருசேர நமக்குள் வெளிப்படும்; மன உளைச்சல், தாங்க முடியாத மனவலி ஏற்படும்; காலத்துக்கும் வலிக்கும்; நினைத்த உடனே கண்ணீர் வழியும்; பேச வாய் எழாது; நம் வாழ்க்கை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து நிற்பது போன்ற ஓர் உணர்வுக்குத் தள்ளப்படுவோம். அந்த நிகழ்வைக் கடப்பது அல்லது மறப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல; அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது கூட மிகப்பெரிய கேள்வியாகவே அமையும். நாம் செய்த அழகான அத்தனை நிகழ்வுகளும் நம் கண்முன்னே வந்து செல்லும். நிற்க! கடவுளுக்கு எதிராக நாம் நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது அவரும் இப்படிப்பட்ட உணர்வுகளையெல்லாம் எதிர்கொள்வாரன்றோ!
ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு இறைவன் நம்மீது கொண்ட நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையினால் அவர் எதிர்கொண்ட ஏமாற்றத்தையும் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றது. மாற்கு நற்செய்தியாளர் மட்டுமே இயேசுவின் இறுதி நாள்களில் நடந்த நிகழ்வுகளை நாள் ரீதியாகவும், கால அளவை (மணி நேரம்) ரீதியாகவும் தருகிறார் (காண். மாற்கு 11:1-16:2). இன்று வாசிக்கப்படும் மத்தேயு நற்செய்திப் பகுதி ஒத்தமைவு நற்செய்திப் பகுதியான மாற்கு 12:1-12 இல் இடம்பெறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம், புனித வாரத்தில் தம்முடைய இறப்பின் விளிம்பில் இயேசு போதித்த பகுதியாகும்.
குருத்து ஞாயிறு அன்று எருசலேம் நகரில் கழுதையின் மேல் அமர்ந்து ‘வெற்றி ஆர்ப்பரிப்போடு’ நுழைந்த ஆண்டவர், அந்த இரவு பெத்தானியாவில் கழித்துவிட்டு, அடுத்த நாள், குறிப்பாகத் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எருசலேம் ஆலயத்தில் போதிக்கிறார். அத்தி மரத்தைச் சபித்தல், எருசலேம் கோவில் முரண்பாடுகள், கள்வர் குகை, எருசலேம் கோவிலைத் தூய்மையாக்குதல், தம் அதிகாரத்துக்குச் சவால் என்பன இயேசுவின் மையப்போதனைகளாக அமைந்தன. இப்போதனைகளைக் கேட்டதும் எருசலேமில் வாழ்ந்த சமயத் தலைவர்கள் ஆவேசத்துடன் இயேசுவைத் தொலைக்க முற்படுகின்றார்கள். இத்தருணத்தில் இயேசுவுக்கும் சமயத் தலைவர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்குமிடையே மோதல் போக்குகள் நீடிக்கின்றன. அவர்களை மீட்க இயேசுவின் இறுதிக்கட்ட போராட்டம் இது! இந்நிலையில்தான் ‘இரு புதல்வர்கள் உவமை’, ‘கொடிய குத்தகைக்காரர் உவமை’ (இன்றைய நற்செய்தி), ‘திருமண விருந்து உவமை’ என இயேசுவின் இறுதிப் போதனைகள் நீள்கின்றன. இந்தப் பின்னணியோடு இன்றைய நற்செய்தியைப் புரிந்துகொள்வோம்.
கொடிய குத்தகைக்காரர் உவமை ஒரு தொடர் உருவகம். திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் மக்களையும், தோட்டத்தின் உரிமையாளர் கடவுளையும், குத்தகைக்காரர்கள் யூதத் தலைவர்களையும், அனுப்பப்பட்ட பணியாளர்கள் வெவ்வேறு பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரையும் குறிக்கின்றன. இறுதியாக வரும் தோட்ட உரிமையாளரின் மகன் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள், அறுவடை நேரம் வந்ததும் அத்தோட்டத்தின் உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்காமல் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; நம்பிக்கைத் துரோகம் இழைக்கின்றனர்; இறுதியில் உரிமையாளரின் மகனைக் கொலை செய்யவும் துணிந்துவிட்டனர்.
‘விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து தொழுகுவார்’ (குறள் 143). அதாவது, துளியும் சந்தேகம் கொள்ளாது, உறுதியோடு நம்பி, நட்புடன் பழகிய ஒருவருக்கு அல்லது அவரது குடும்பத்துக்குத் தீமையைச் செய்பவர், இறந்து போனவரே அன்றி, உயிருடன் வாழ்பவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்களின் நட்பைத் துண்டித்துவிடுவது தான் சாலச்சிறந்தது. இயேசு நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்களின் நட்பைத் துண்டித்துவிட்டு, இனித் திராட்சை தோட்டம் வேறு ஆள்களிடம், அதாவது நம்பகத்தன்மை மிக்க யூதர் அல்லாத வேறு இனத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள ‘திராட்சை தோட்டம் பற்றிய கவிதை’ பழைய ஏற்பாட்டு நூலில் இடம்பெறும் மிகச் சிறந்த உவமையாகும். இதில் வரும் ‘என் அன்பர்’, ‘என் நண்பர்’ என்ற சொற்றொடர்கள் யாவே ஆண்டவரைக் குறிக்கின்றன. இங்கே திராட்சை தோட்டம் என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, வழிநடத்தி, பராமரித்துப் பாதுகாத்து வருகிறார். ஆனால், அவர்களுடைய செயல்கள் அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளன. பிரமாணிக்கமின்மை, முறையற்ற உறவு வாழ்வு, சிலை வழிபாடு மற்றும் அரசர்களின் உலகப் போக்கைப் பின்பற்றுவது இவற்றினால் யாவே இறைவனை வேண்டாம் என்றனர். ‘இரத்தப் பழி’, ‘முறைப்பாடு’ இவை இரண்டும் இஸ்ரயேல் மக்களின் தீய செயல்களைக் குறிக்கின்றன.
‘என் திராட்சை தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும், இனிச் செய்யக்கூடியதும் ஏதும் உண்டோ?’ எனும் கேள்வி நம் இதயங்களை உறுத்துகின்றன. திராட்சைத் தோட்டமான இஸ்ரயேல் மக்களுடனே வாழ்ந்து, அவர்களைக் காக்க கடவுள் அமைத்த கண்காணிப்புக் கோபுரம் (எசா 5:2), யாராலும், எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் அமைக்கப்பட்ட இரட்டை வேலி (5:5), செழிப்பான, போதுமான சூரிய ஒளி கிடைக்கும் மேல்குன்று (1:1) போன்ற உருவகங்கள் எல்லாம் மக்களின் தேவைகள் அனைத்தையும் மிகக் கவனத்துடன், முழுமையாக நிறைவு செய்துள்ள கடவுளின் எல்லையில்லாப் பேரன்பையும், அக்கறையையும் படம்பிடிக்கின்றன. நற்கனி கிடைக்கும் எனப் பொறுமையாகக் காத்திருந்த கடவுளுக்குக் கிடைத்தது என்னமோ ‘காட்டுப்பழங்கள்’, அதாவது, உறவுக்கு வலுசேர்க்காத ‘நம்பிக்கைத் துரோகம்’ எனும் அழுகிய பழங்களே! கடவுள் தம் மக்கள்மீது அளவுக்கு அதிகமான அருளைக் கொடுக்க, அதை அலட்சியம் செய்து, கொஞ்சமும் கண்டுகொள்ளாத கடினமான உள்ளத்தின் வெளிப்பாடே இதுவாகும்.
நாம் கடவுளுக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் இழைப்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. “ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் அடுத்தவரைத் தலைகுனியவைப்பதைவிட, நீ தலைகுனிந்து போவது தவறே இல்லை” என்று மகாத்மா காந்தி சொன்னதுபோல, நாம் கடவுளுக்கு எதிராகத் துரோகம் இழைக்கின்றபோது அவர் தலைகுனிந்து போகிறார்! மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமையை நினைத்துக் கடவுள் மனம் வருந்தினார்; துயரமடைந்தார் (தொநூ 6:6). நாம் செய்யும் தவறுகள் கடவுளுக்கு மறைவாக இல்லை (லூக் 12:2). எல்லாம் அவருக்குத் தெரிந்தபோதிலும்கூட, எள்ளளவும் நாம் சிறுத்துப் (குறுகி)போகவில்லை. கடவுளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ளாமல் இருக்கும் அளவுக்குக் கடவுள் நமக்கு உந்துசக்தியாக இல்லாமல் போய்விட்டாரோ? சிந்திக்க!
1. நம் நாட்டில் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள் என்பதையும் சிறிதும் எண்ணிப்பாராமல், ஏதோ இந்த நாடு, நாட்டின் பெயர் - ‘இந்தியா’, இந்த மாநிலம், இங்குள்ள மக்கள், பொது கட்டடங்கள் எல்லாமே தங்கள் உரிமைச் சொத்து என்ற மமதையில் செயல்படும் போக்கிலிருந்தும், தன்னை மிஞ்சியவர் எவரும் இல்லை என்ற இறுமாப்பில் இவர்கள் பின்பற்றும் வன்முறை மனநிலையிலிருந்தும் விடுபட்டு, இறைவனின் வழியில் மீட்படைய மன்றாடுவோம்.
2. நாம் அனைவரும் இந்தப் பூமியின் குத்தகைக்காரர்கள் என்பதை உணர்ந்து, இறைவனின் கைவண்ணமான இந்த உலகம், இயற்கைச் சூழல், படைப்பு அனைத்தையும் அரவணைக்கவும், படைப்பிற்கும், நம் சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் குறிப்பாகக் குடும்பங்களில் கணவன் - மனைவிக்குமிடையே நம்பிக்கைத் துரோகம் இழைக்காத வண்ணம் நல்ல எண்ணங்களால் நம் உள்ளங்களையும், உலகையும் நிரப்புவோம்.
3. திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, “எனது தினசரி வாழ்வில் கிறிஸ்துவுக்கு நான் நம்பிக்கையுள்ள மனிதராக வாழ்கின்றேனா? மதிப்போடும், அதே நேரம் துணிவோடும் என் நம்பிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்ட என்னால் முடிகின்றதா?” என நமக்குள்ளாகவே கேட்டுப் பார்ப்போம். உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, விரும்பத்தக்கவை, பாராட்டுதற்குரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனதில் இருத்துவோம் (பிலி 4:8). இல்லையெனில், கடவுளின் அழகிய தோட்டத்திலிருந்து நாம் விரட்டியடிக்கப்படுவோம்; விண்ணரசிலிருந்து அப்புறப்படுத்தப்படுவோம் எனும் எச்சரிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டாலும், “படைகளின் கடவுளான ஆண்டவரே! நீர் நட்டு வைத்த இந்தத் திராட்சைக் கொடிமீது (எங்கள் மீது) பரிவு காட்டும்” என வேண்டிக்கொள்வோம் (திபா 80:14).