Namvazhvu
சீர்திருத்த மனநிலை வருமா?
Wednesday, 11 Oct 2023 04:52 am
Namvazhvu

Namvazhvu

இந்தியாவில் யாரும் பூர்விக மக்களல்லர்; ஆரியரும், திராவிடரும் வந்தேறியக் குடிகளே. ஆரியர்கள்தான் அந்தணர், பிராமணர் என்ற சிவப்பு, நீள மூக்கு, மொட்டை, கீழ்ப்பாய்ச்சு, பூணூல் கொண்ட கால்நடை பராமரிப்பாளர்கள். திராவிடரோ, தோள்வலிமை, ஆள் வலிமை கொண்டவர். இளம் கறுப்பு, இடுப்புத் துண்டு அணிந்தவர். இந்த வடபுலத்தாரும், தென் புலத்தாரும் போரிட்டு, ஆநிரை கவர்தல், பெண்களைக் கொணர்தல் என்பனவற்றால் இனக்கலப்பும், பல சாதிகளும் உண்டாயின.

இந்தக் கலப்புச் சமூகத்தை எப்படி நடத்த வேண்டும்? என்ற சில ஆரியத் தொண்டர்கள், வர்ணாசிரமத் தர்மத்தைக் கொணர்ந்தனர். தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற தத்துவம் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் எழுதவும், சட்டம் கொண்டு வரவும் செய்தனர். ஆரியரும், திராவிடரும் பெண் கொடுக்கல்-வாங்கலில் சொந்தக்காரர்களாகி விட்டனர்.

காலத்தைக் கிரேதா யுகம், துவாப்ரா யுகம், திரேதா யுகம், கலியுகம் என ஆயிரம் ஆண்டுகள் எனப் பிரித்தார்கள். இப்போது நடப்பது கலியுகம். இரவில் கட்டிலில் படுத்துக்கொண்டே வானசாஸ்திரங்களைக் கண்டுபிடித்தனர். அப்பா கண்டுபிடித்ததை மகனுக்குச் சொல்ல, இவை எழுதப்படா அறிவியல் தொடர் கதையானது. அவர்களில் ஞானி ஆரியபட்டா, ஞானி பாஸ்கரா, தெற்கில் இராமானுஜர் போன்ற கணித வல்லுநர்கள் குறிப்பிடப்பட்டவர்கள்.

மனித வாழ்வை நான்கு படிகளாக்கி, பிரம்மச்சாரியம் (இளைஞர்), கிரகபிரஸ்தம் (குடும்பம்), வனப் பிரஸ்தம் (காடு நுழைதல்), சந்நியாசம் (துறவு) கொள்வதாகும். This is What is Called Hindu way of Life.

இப்படி மகாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்களை எழுதி, கலைவழி, இறைவழிக் காண்பித்தார்கள். ஒன்றில் கணவன்-மனைவி - 5:1 என இருந்ததை மற்றதில் 1:1 எனக் கற்புக்கு இலக்கணம் காட்டினர். இப்போதுதான் வம்பு பிறக்கிறது. வாழ்வு, வாழ்வுமுறை, காலங்கள், நாள் நட்சத்திரங்களை வகுத்தவர்கள், இந்தச் சமூகம் எப்படிப் பல பணிகளை ஆற்ற வேண்டும்? யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும்? என Social Stratification சமூகப் பிரிவை ஏற்படுத்தினார்கள். எல்லாரும் எல்லாமும் செய்தால் சண்டை வரும் என்று வர்ணாசிரம தர்மம், சனாதன தர்மம் என ஒரு வடிவத்தைக் கொண்டு வந்தனர். அது ஒரு கூம்பு வடிவம். இப்போதைய கோவில் வடிவம்.

அது ஒரு ஜோடி செருப்புக்கு ஓர் அடிமை விற்கப்பட்ட காலம். இதில் முதல் பிரிவு அந்தணர்கள்தான் இந்தப் படிவரிசையிலே முதன்மையானவர்கள், மேன்மையானவர்கள். இதில் முதல் வகுப்பு மனிதர்கள் என்ன செய்தார்கள் எனில், மதத்தையும், வகுப்புப் பிரிவையும் ஒன்றுகலந்து, தம் சமூகப் பாகுபாட்டை வழிபாடாக, இறைபயமாக முடித்து வைத்து அச்சுறுத்தினர். வேதங்கள் பெயரால் எந்த வாதங்களுமின்றி கண்ட சட்டங்களாக, நிலவாரியாக, மொழி வாரியாக, கலாச்சார வாரியாக ஓர் அணு குண்டு போல், கணக்கில் பெருக்கல் தொடர் வரிசை போல் பலுகப் பெருக, எந்தக் கட்டுப்பாட்டையும் மீறி... கை மீறிப் போய்விட்டது.

ஆனால் மேற்கண்ட ஐந்து பிரிவினருக்கும், அதன் உட்பிரிவுகளுக்கு ஒருவர் மேல் ஒருவர் இருப்பதும், சாட்டையடி கொடுப்பதும், பிடித்தமாய் இருந்ததால் இந்தச் சாதி படிமுறை LIC கட்டடமாய் நிலைபெற்றது. அதுதான் இப்போதுள்ள FC, OBC, MBC, ST, SC மைனாரிட்டி என்பனவாகும்.

ஒருவன்மீது ஒருவன் கொள்ளும் ஆதிக்கம் என்பதுதான் பிராமணத்துவம். இந்தக் கள்ள நினைப்புதான் 5-இன் மேல் 4 கொள்வதும், 4-இன் மேல் 3 கொள்வதும் சனாதனமே. Everybody Wants to rule others.  இந்த ஆளுமை எப்போது மறையும்?

ஒரு SC பட்டியல் பிரிவில் படித்து, முன்னேறி ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்கிறார், ‘சிவப்பாய் இருக்கிறாள்’ என்று. இது சனாதன ஒழிப்பா? இல்லை. அந்த மேல்தட்டு மக்கள், கீழ்த்தட்டு SC உரிமைகளை உறிஞ்சுகிறார்கள் என்று அர்த்தம். அதோடு அந்த SC  உரிமைப் பெற்றவர், உச்சம் பெற்றபின் ஒரு தலித் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்காமல், தன் இனத்துக்குத் துரோகம் செய்கிறான். தன் சாதிப் பெண்ணை அவமானப்படுத்துகிறான். இதற்குப் பெயரென்ன? சனாதனம்!

சனாதனம் என்பது உயர் சாதி, கீழ் சாதி என்ற பிரிவை வைத்து மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ID, Ego என்பனவற்றை வைத்தும்தான். ஆண்டவர் இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார் என்றால், அதுதான் சனாதன ஒழிப்பின் முன் அடையாளம்.

இந்தச் சாதி பைத்தியம் எல்லா மதங்களிலும் உள்ளன. இது ஆசிரியர்-மாணவர், கணவன் மனைவி, அண்ணன்-தம்பி, நில உடமை-பதவி உடமை உள்ளிட்ட இவை எல்லாவற்றிலும் ஆண்டான்-அடிமைக் கலாச்சாரம் நுழைந்துவிட்டது.

மெத்தப் படித்தவர்கள், மேன்மையானவர்கள் என்று கருதப்படுபவர்களில் கூட ஆதிக்கத் தன்மை உண்டு. இது நாட்டிலும், வீட்டிலும் உள்ளது.

ஒருமுறை புனித சாந்தோம் பள்ளித் தமிழாசிரியர் ஒருவர் கவிதை ஒன்றை இவ்வாறு எழுதினார்:

‘கல்லான் ஒருவன் வந்தான்

கற்றான் அவனை கண்டான்

கல்லான் கற்றான் ஆனான்

கல்வியில் தெய்வம் கண்டேன்

இல்லான் ஒருவன் வந்தான்

உள்ளான் அவனைக் கண்டான்

இல்லான் உள்ளான் ஆனான்

ஈகையில் தெய்வம் கண்டேன்.’

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. தாழ்நிலையில் உள்ளவர்கள் அதே தாழ்நிலையில்தான் இருக்கிறார்கள். 2.7%  உள்ள கிறிஸ்தவ மதம் மாறிய தலித் மக்களுக்கு SC உரிமை கொடுக்க வேண்டுமென்ற உணர்வு ஒரு கட்சிக்குக்கூட இல்லை.

இந்த 75 ஆண்டுகளில் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்பட்டாரா? இல்லை, ஓர் இஸ்லாமியரை ஏன் பிரதமராக உயர்த்தவில்லை? ஆனால், இங்கிலாந்தில், சிங்கப்பூரில் பூர்வீக இந்தியனைப் பிரதமர் ஆக்கி அழகு பார்க்கிறார்கள்.

அமெரிக்க உயர் கம்பெனியில் மிக மிக உயர் பதவியில் ‘ஓர் இந்தியர்’ இருக்கிறார். இங்கே இருப்பவர்களுக்கு அந்தச் சீர்திருத்த மனநிலை வராது. குருப்பட்டம் பெற்ற இளங்குருக்கள் திருப்பலி முடியும்போது, அப்புதுக் குருக்கள் ஆசீர் அளிக்க, பட்டம் கொடுத்தப் பேராயர் அந்த ஆசீரைப் பெறுகிறார். இதுவே கிறிஸ்தவத்தின் சீடத்துவம்.

எல்லாரும் எல்லாமும் பெற, சமத்துவ சகோதரத்துவம் ஓங்க, புத்துலகம் படைத்திடுவோம். இயேசு எனும் புரட்சியாளனின் பாதையில் ஓரணியில் புறப்படுவோம்!