மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் பெறுவது உணவு. தாம் மட்டும் உண்பதல்ல, வீட்டிற்கு வரும் எளியவர் - முதியவருக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ வேண்டும் என்பதுதான் நம் முன்னோர் நமக்குக் கற்றுத்தந்த வாழ்க்கை நெறி. இதைத்தான் ஒளவையார் ‘மருந்தே ஆயினும் விருந்தோடுஉண்’ என்கிறார். முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும் என்பதுதான் நம் பண்பாடு. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை ‘விருந்தோம்பல்’ அதிகாரம் 9, குறள் 84 இல்,
‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்’
அதாவது, இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் வாழ்வாள் எனக் கூறுகிறார்.
‘விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது’ எனும் குறிஞ்சிப் பாடல் (201-205) தலைவன் தலைவியிடம் விருந்தினருக்கு உணவு படைத்து, மிஞ்சியிருக்கும் உணவைத் தலைவியோடு பகிர்ந்து உண்பதுதான் நிறைவான வாழ்வு அல்லது குடும்ப தர்மம் என்கிறது. சங்கக் கால மகளிரின் மனையற மாண்புகளில் முதன் மையானதாக ‘விருந்தோம்பல்’ முன்வைக்கப்பட்டுள்ளது. அக்காலத் தமிழர்கள் பொருளீட்டி தாமே நுகராமல், ‘இல்லை’ என்று தம்மிடம் வந்து இரந்தோர்க்குக் கொடுத்து வாழ்விக்க வேண்டும் என்பதற்காகவே செல்வத்தைச் சேர்த்தார்கள். இதையே கலித்தொகை ‘இல்லென இரந்தோருக்கு ஒன்று ஈயாமை இழிவு’ (கலி 2:15) எனக் கூறுகிறது. ‘இரவலர் வரவேண்டும், பசியில்லாமல் போக வேண்டும்’ என்பது நம் முன்னோரின் விருப்பமாக இருந்துள்ளது. ஏழை-எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் அன்னச்சத்திரங்கள் அமைத்தனர் என்பதும் பெருமைக்குரிய செயலாகும். இன்று பசி என்று யார் வந்தாலும், உணவு கொடுக்கும் பழக்கம் இன்னும் நம்மிடமிருந்து மறையவில்லை.
பொதுக்காலத்தின் 28 ஆம் ஞாயிறு இறைவன் நமக்குத் தரும் சிறந்ததொரு விருந்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. இறைவன் தரும் விருந்தை நாம் ஏற்கவும், அவ்விருந்துக்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவும், மேலும், நம் வாழ்வில் கடவுள் தந்த அழைப்புகள், அந்த அழைப்புகளை ஏற்க மறுத்த நேரங்கள், சில வேளைகளில் அழைத்தவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட போக்குகளையும் இன்றைய வழிபாட்டில் சிந்திப்போம்.
மத்தேயு நற்செய்தியின் 19 முதல் 25 வரையிலான அதிகாரங்கள் விண்ணரசின் வருகையை பற்றிய பகுதிகள். இவை யூத மக்கள் விண்ணரசுப் போதனையை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலை பற்றிப் பேசுகின்றன. இந்த வரிசையிலே அரச விருந்து பற்றிய உவமையும் வருகிறது. இந்த உவமையும் லூக்கா நற்செய்தியில் இடம்பெற்றுள்ள ‘பெரிய விருந்து’ உவமையும் (14:15-24) ஒன்றையொன்று மிகவும் ஒத்துள்ளன. இவை உவமைகள் என்றாலும், பல உருவகங்கள் இவற்றில் கவனிக்கத்தக்கவை.
தொடர் உவமையில் அரசர், அவருடைய மகன், அவர் நடத்த விரும்பிய திருமணம் முறையே இறைவன், அவர் மகன் இயேசு கிறிஸ்து, இயேசு உருவாக்க விரும்பிய இறையாட்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. இறைவன் தரும் மாபெரும் விருந்து வரவிருக்கும் வாழ்வின் மகிழ்ச்சியைக் குறித்த யூத உருவகமாகும். மேலும், விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைக் கூட்டி வருமாறு சென்ற பணியாளர்கள் இறைவாக்கினரையும், வர மறுத்தவர்கள் இஸ்ரயேல் மக்களையும், இரண்டாம் முறை அனுப்பப்பட்ட பணியாளர்கள் திருத்தூதர்களையும் குறிக்கின்றது. முதலில் கொடுத்த அழைப்பானது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் கொடுத்த அழைப்பாகும். ஆனால், அழைப்புப் பெற்றவர்கள் அத்திருமண விருந்தில் பங்கேற்க விரும்பவில்லை. எனவே, அழைப்புப் பெற்றவர்கள் வர மறுத்த போதிலும், அவர்கள்மீது சினம் கொள்ளாது, இரண்டாம் முறையும் அழைப்புக் கொடுக்கிறார். ஆனால், அவர்கள் அந்த அழைப்பைப் பொருட்படுத்தாமல் அழைக்கச் சென்ற பணியாளர்களைப் ‘பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்’ (வச 6).
கொடிய குத்தகைக்காரர் உவமையில் இதையொத்த நிகழ்வைக் காண முடியும் (மத் 21:39). முதலில் அழைப்புப் பெற்ற யூதர்கள் அழைப்பைப் புறக்கணித்த காரணத்தால் காலப்போக்கில் பல கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ‘...நகரத்தையும் தீக்கிரையாக்கினார்’ (வச 7) எனும் இச்செயல் கி.பி. 70 இல் உரோமைப் பேரரசு எருசலேமைக் கைப்பற்றி, கோவிலை அழித்து, நகரைத் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாய் உள்ளது. இது மத்தேயு போதித்த முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவச் சமூகத்தில் உருவாகியதொன்று. அழைக்கப்பட்டவர்கள் தகுதியற்றுப் போனதால் சாலையோரங்களில் காணும் நல்லோர்-தீயோர், ஏழையர், மாற்றுத்திறனாளிகள், பாவிகள், வரிதண்டுவோர், விலைமாதர், யூதரல்லாத பிற இனத்தவர் என யாவரையும் அரசர் அழைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற தலைப்பில் வெளியிட்ட திருமடலில், ‘தூக்கியெறியும் உலகம்’ என்ற பகுதியில் மனிதக் குடும்பத்தில் முக்கியமானவர்கள் அல்லர் என்று கருதப்படும் வறியோர், மாற்றுத்திறனாளிகள், இது வரை பயனில்லை என்ற முத்திரை குத்தப்பட்ட பிறக்காத உயிர்கள், இனியொரு பயனில்லை என்ற முத்திரை குத்தப்பட்ட வயதில் முதிர்ந்தோர் ஆகியோர் தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அரசனின் செயல் நமக்கு நினைவூட்டுகின்றது (எண். 18,19).
இறுதியாக, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள திருமண ஆடை அணியாதவனைக் குறித்த உவமை புரிந்துகொள்ள இயலாத புதிராக உள்ளது. அழைக்கப்பட்ட பாமர மக்களிடையே ஒருவரிடம் திருமண ஆடை இல்லாத குறைக்காக அவர் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார். கட்டாயப்படுத்தி அழைத்து வந்த தெருவோரத்து மனிதனை அவனுடைய ஆடைக்காக எப்படிக் குற்றஞ்சாட்ட முடியும்? இதன் உட்கருத்து என்னவாக இருக்க முடியும்? எனச் சிந்திக்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும், அவர்களைக் கடவுள் திரு அவைக்குள் கொண்டு வந்திருக்கிறார். இறையாட்சிக்குள் நுழைய அனைவருமே அழைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் இயல்பிலே இருக்க முடியாது. எனவே, ‘மனமாற்றம்’ என்ற ஒரு அடிப்படைத் தகுதி இருந்தால்தான் வரவிருக்கும் ‘வாழ்வின் மகிழ்ச்சியில்’ (விண்ணக விருந்து) முழுமையாகப் பங்கெடுக்க முடியும். எனவே, ‘மனமாற்றம்’ எனும் திருமண ஆடையை ஒவ்வொருவரும் அணிந்துகொள்வது கட்டாயமாகிறது (மத் 4:17).
மனம் மாறாமல் இஸ்ரயேல் மக்கள் பிற கடவுள்கள்மீது கொண்டிருந்த பிடிவாத நம்பிக்கையையும், தங்களின் தவறான தத்துவங்களையும் கடைப் பிடித்ததினால் ‘வாழ்வின் மகிழ்ச்சியை’ இழந்தனர். அவர்கள் அனுபவித்தவை பசி, பட்டினி, வறுமை, நோய், துன்பம், அடிமைத்தனம், கண்ணீர், நிந்தை, சாவு போன்றவைகள்தாம். ’கடவுள் எங்களை மறந்து விட்டாரோ?’ என்று புலம்பிய அவர்களுக்கு ‘இல்லை, நான் உங்களை எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன்’ எனும் அருள்மிகு இறைவனின் இரக்கச் செயலை, ‘ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து’ வழியாகப் புரிந்துகொள்கிறோம் (முதல் வாசகம்).
கடவுள் அளித்த இவ்விருந்தைப் பாபிலோனிய அடிமை வாழ்வின் பின்னணியிலிருந்து சிந்தித்தால், இவை அவர்கள் ஏங்கித் தவித்த விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். உடலளவிலும், மனதளவிலும் சுமார் 70 ஆண்டுகள் (எரே 29:10) அடிமைகளாய், புலம்பெயர்ந்தோராய், நாடோடிகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள் சுவைமிகு உணவை உண்டிருப்பார்களோ? உண்டதெல்லாம், பரிதாபமான உணவு வகைகளே. ஒவ்வொரு நாளும், ஒரு சிறு துண்டு ரொட்டிக்காகப் போராட வேண்டியிருந்தது. சுவையுள்ள திராட்சை இரசத்துடன் விருந்து கொடுத்து, பெருமை கொண்ட காலங்களெல்லாம், அவர்களுக்கு, தொலை தூரத்துக் கனவுகளாக இருந்தது. ஆற அமர்ந்து, சுவை மிக்க உணவை எப்போது உண்போம் என்ற ஏக்கம் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. இவ்விதம் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு இறைவன் மிகவும் இரக்கத்தோடு அளித்த விருந்துதான் ‘மெசியாவின் விருந்து’. ஆண்டவரை அரசராக, கடவுளாக ஏற்றுக்கொள்பவர்களுக்காக நடக்கும் மாபெரும் ‘அரச விருந்து’.
இறைவன் அளித்த இந்த விருந்தில் பரிமாறப்படும் உணவுகள், தங்கள் சுயமரியாதையை இழந்து, உணவுக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை வாழ்வைப் பற்றிய நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. மேலும், கடவுளின் புனித மலையில் நடக்கும் விருந்தில் பங்கெடுக்கும் அனைவரின் துன்பமும், அடிமைத்தனமும், அகமகிழ்வுக்குத் தடையாக இருக்கின்ற சாவு எனும் ‘புலம்பலின் முக்காட்டையும்’ (துன்பத்துகில்) அகற்றி (எசா 25:8), மக்களின் மனங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுக்கிறார் இறைவன். இந்தச் சிந்தனையில் இன்றைய நாள் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்களாவன:
* இறையாட்சிக்கான அழைப்பு பாகுபாடின்றி எல்லாருக்கும் கொடுக்கப்படும்போது, ‘முதன்மை’ எதுவென அறியாது, பற்பல போலிக் காரணங்களை முன்வைத்து அழைப்பை ஏற்க மறுப்போர் இறையாட்சி சமூகத்திற்குத் தங்களையே அந்நியராக்கிக் கொள்கின்றனர் (சாக்குப்போக்குகள் சொன்ன மனிதர்களைப் போல!).
* இறையாட்சி சமூகத்தில் அழைக்கப்பட்டோர் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்றபடி வாழத் தங்களையே தகுதிப்படுத்திக் கொள்ளவில்லையெனில் இறையாட்சிக்குப் புறம்பே தள்ளப்படுவர் (திருமண ஆடை அணியாத மனிதரைப் போல!).
* நம் திரு அவையில் ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், இரந்து உண்போர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர், கைம்பெண்கள், நோயுற்றோர், குழந்தைகள், முதியோர் போன்றோர் மையப்படுத்த வேண்டும். இவர்களே இறையாட்சி சமூகத்தின் மைய உறுப்பினர்கள் (விருந்து கொடுக்கும் அரசரைப்போல!).