இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலானது 2023, நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதி செவ்வாய் அன்று தேர்தலும், டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், மிசோரமில் வாழும் கிறிஸ்தவ அமைப்புகள் ஞாயிறு தவிர்த்து மற்ற நாள்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்துள்ளனர்.
மிசோரம், ஐஸ்வால் மறைமாவட்டத்தின் ஆயர் ஸ்டீபன் ரோட்லுவாங்கா “கிறிஸ்தவர்களுக்கு ஞாயிறு வழிபாடு என்பது மிக முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, ஞாயிறு தவிர்த்து மற்ற நாள்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை” என்று கூறினார். மிசோரமில் உள்ள கிறிஸ்தவச் சபைகளின் 11 தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து விண்ணப்பத்தை அனுப்பி வைத்துள்ளனர். மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா அவர்களும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.