இலங்கை, கொழும்புவில் 2019 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இடம்பெற்ற எட்டுக் குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகள் அக்டோபர் 18-ஆம் தேதி மீண்டும் துவங்கியுள்ள நிலையில், இலங்கை தலத் திரு அவை, வெடிகுண்டு தாக்குதல்களில் இராணுவ உளவுப் பிரிவின் பங்கு ஆராயப்பட வேண்டும்; நீதியான, வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என மீண்டும் தன் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது. அதற்கு அனைத்துலக அளவிலான சுதந்திர விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இலங்கை அரசுத் தலைவருக்குக் கர்தினால் மால்கம் இரஞ்சித் உள்பட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவப் பிரிந்த சபைகளின் 30 தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், குண்டு வெடிப்பாளர்களுடன் இராணுவ உளவுப்பிரிவு மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு அன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உள்பட 279 பேர்கள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இக்குண்டு வெடிப்புத் தொடர்பாக 24 பேர் தற்போது விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.