Namvazhvu
29, அக்டோபர் 2023 ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு)விப 22:21-27, 1தெச 1:5-10, மத் 22:34-40
Thursday, 26 Oct 2023 11:58 am
Namvazhvu

Namvazhvu

பலவிதமான மனித உறவுகளிடம் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும், கலக்கமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில், அன்புதான் ஒரே ஆறுதல். அன்பாக இருப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் வழியாக, நமக்கு எப்போதும் மகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. நம் வாழ்வுக்கு உயிர் தருவது அன்பே.

‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு’ (குறள் 80).

அதாவது, அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த உடம்பு. அன்பு மட்டும் இல்லையென்றால், இந்த உயிர் வெறும் எலும்புகளின் மேல் தோலைப் போர்த்தியது போன்றதாகும் என்கிறது வள்ளுவரின் வாக்கு. அன்பு இல்லையேல், நல் வாழ்க்கை இல்லை. அன்புதான் மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரம்.

இறைவன் நம்மீது காட்டுகின்ற அன்பு முதலில் கிறிஸ்து மனிதராகப் பிறந்ததில் வெளிப்படுகிறது. கிறிஸ்தவத்தின் ஆணிவேர் அன்புதான். எனவே, கிறிஸ்துவின் நற்செய்தி அன்பில் மையம் கொண்டுள்ளது எனலாம். நம் “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா 4:8) என்கிறார் நற்செய்தியாளர் யோவான். இதனையே ‘அன்பே கடவுள்’ என்கிறது திருமூலரின் திருமந்திரம் நூல். ‘அன்பிற் சிறந்த தவமில்லை’ என்றார் பாரதி. ‘அன்பு என்பதே தெய்வமானது’ என்றார் கவியரசு கண்ணதாசன். ‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’ என இறைவனின் பெருங்கருணையை வியந்து பாடுகிறார் மாணிக்கவாசகர். எனவே, உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நாம் காட்டும் அன்பே.

எல்லாவற்றையும் விட அதிகமாய்க் கடவுளை அன்பு செய்வதும், தன்னைத்தான் அன்பு செய்வது போல, அடுத்தவரை அன்பு செய்வதுமே இயேசு நமக்குக் கற்றுத்தந்த போதனை. இயேசுவின் போதனைகள் எல்லாம் அன்பின் அடிப்படையிலானவை. அன்பை விலக்கி விட்டு, இயேசுவின் போதனைகளை நாம் நிறைவேற்றவே முடியாது. திருத்தந்தை பிரான்சிசும், ’அன்பில்லையெனில் நம் வாழ்வும், இறைநம்பிக்கையும் வறண்டு போகும். வாழ்வுக்கு எது முக்கியமானதோ அதனையே இயேசு போதித்தார், வாழ்ந்தார்; அதுதான் அன்பு’ என்கிறார் (ஞாயிறு மூவேளைச் செப உரை, 29.10.2017). ‘தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1யோவா 4:20). எனவே தான், ‘...உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ எனும் தலைசிறந்த, புதிய கட்டளையைச் சிந்திக்க இந்நாளில் ஆண்டவர் நம்மை அழைக்கின்றார்.

யூதப் பாரம்பரியத்தில் 613 கட்டளைகள் உள்ளன. அவற்றில் ‘நீங்கள் செய்ய வேண்டியது’ என்பதைக் கூறும் கட்டளைகள் 248 ஆகவும், ‘நீங்கள் செய்யக்கூடாதது’ என்பதைக் கூறும் கட்டளைகள் 365 ஆகவும் இருந்தன. இந்த 613 கட்டளைகளில் ஓய்வுநாள், கோவிலில் அளிக்கப்படும் பலிகள், காணிக்கைகள், விருத்தசேதனம் ஆகியவை குறித்துச் சொல்லப்பட்டுள்ள கட்டளைகள் யூதத் தலைவர்களுக்கு மிக முக்கியமானவையாக இருந்தன. இயேசுவைச் சிக்க வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார்: “திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்பதே அவர் கேட்ட கேள்வி. திருச்சட்ட அறிஞரின் ஒற்றை வரிக் கேள்வி, மிகச் சிறியதாகத் தோன்றினாலும், யூத புனித நூலாகிய தோராவின் சாராம்சமே இக்கேள்விக்கான பதில் எனலாம்.

திருச்சட்ட அறிஞர் கேட்ட கேள்விக்கு அவர்கள் உயிரினும் மேலாகக் கருதுகின்ற தோராவின் இரு நூல்களிலிருந்து தம் பதிலை முன்வைக்கிறார் இயேசு. “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” (இச 6:5) என்பதைப் பதிலாக அளிக்கிறார். இது யூதரின் ‘நம்பிக்கை முழக்கம்’ ஆகும் (இச 6:4). ‘ஷெமா இஸ்ரயேல்’ (இஸ்ரயேலே, செவிகொடு!) எனத் தொடங்கும் இந்த நம்பிக்கை அறிக்கையை எல்லா யூதர்களும் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் செபமாகச் சொல்லி வந்தனர். இப்பகுதி மறைநூல் அறிஞர்களுக்கு எவ்வளவு முக்கியமானதெனில், இச்சொற்கள் தங்கள் மனங்களிலும், பிள்ளைகளின் உள்ளங்களிலும் பதிய வேண்டுமென அவர்கள் வீட்டில் இருக்கும்போது, பயணம் செய்யும்போது, படுக்கும்போது, எழும்போது இக்கட்டளையைப் பற்றிப் பேசினர். இந்த நம்பிக்கை முழக்கத்தைக் கையிலும், கண்களுக்கிடையிலும் சீட்டுப்பட்டமாகக் கட்டிக்கொண்டனர். இதை அவர்கள் தகட்டில் எழுதி சிறு குப்பியில் வைத்து வீடுகளின் கதவு நிலைகளில் வைத்திருந்தனர் (இச 6:6-9). சீட்டுப்பட்டமாக எழுதி ஆண்கள் தங்கள் நெற்றியில் கட்டிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது. 

இவ்வளவு முக்கியமான, முதன்மையான இடத்தைப் பெற்றிருந்த இக்கட்டளைக்கு இணையாகப் ‘பிறரன்பு’ என்ற கட்டளையையும் இணைத்துக் கொள்கிறார் இயேசு. ‘உன் மீது நீ அன்புகூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!’ (லேவி 19:18) என்ற அந்தக் கட்டளையும் இறைவன் வழங்கிய கட்டளையே என்பதைப் பரிசேயர் தங்கள் ஒழுக்கநெறிக் கையேடாகக் கருதிய லேவியர் நூலினின்று இயேசு சூழ இருந்த அனைவருக்கும் எடுத்துக்காட்டுகிறார். இயேசுவைப் பொறுத்தமட்டில் கடவுளை அன்பு செய்வதும், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் முதன்மையான கட்டளை. இவை இரண்டும் இணையானவை; சமமாக வைத்துக் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை.

இயேசு கூறும் இந்த ‘அடுத்திருப்பவர் யார்?’ பொதுவாக, இச்சொல் அருகில் வாழும் ஒருவரைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் அடுத்திருப்பவர் என்பவர் உடன் வாழும் இஸ்ரயேல் இனத்தாரைக் குறித்துக் காட்டியது (விப 2:13). பிற்காலத்தில்  இத்தகையோர் ‘சகோதரர்’ என்று அழைக்கப்பட்டனர் (லேவி 25:25; இச 15:2-3). புதிய ஏற்பாட்டில் அடுத்திருப்பவர் பற்றிய பகுதியை இயேசு மேற்கோள் காட்டும்போது, இவர்கள் அறிந்தவர்கள், உறவினர்கள், உடன் வாழும் இஸ்ரயேலர் எனும் நிலையையும் தாண்டி, அடுத்திருப்பவர் என்பவர் தேவையிலிருக்கும் அனைவரையும் உள்ளடக்குகிற பரந்து விரிந்த கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறார். இது புதிய கட்டளையாகும் (யோவா 13:34-35).

இது இயேசு கூறிய நல்ல சமாரியர் உவமையில் இன்னும் தெளிவாகிறது. எனவே, ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல’ எனும் அளவுகோல் கொண்டு ஏழைகள், பாவிகள், விளிம்பு நிலையினர் என யாவரையும் அன்பு செய்ய வேண்டும் என இயேசு கற்றுத் தருகிறார். இயேசுவின் இந்தக் கண்ணோட்டத்தை இன்றைய முதல் வாசகத்தில் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

“அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே” எனத் தொடங்கும் இன்றைய முதல் வாசகம் அன்னியருக்கு நாம் காட்ட வேண்டிய அன்புச் செயல்களைப் பட்டியலிடுகின்றன. முதலில் யார் இந்த அன்னியர்? விவிலியத்தில் ‘அன்னியர்’ என்போர், இஸ்ரயேல் இனத்தைச் சாராத வேற்றினத்தாரையோ (இச 17:15), வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் சென்றவரையோ (தொநூ 15:13), தொலைநாட்டினரையோ (இச 29:22), தற்காலிகமாக வேறு இனத்தவர் நடுவில் தங்கியிருப்பவரையோ (விப 2:22), அயல் நாட்டவரையோ குறிப்பதாக அமைகிறது. சுருங்கக் கூறின், ‘அன்னியர்’ என்பவர் இஸ்ரயேல் மக்கள் நடுவில் தங்கியிருக்கும் வேற்றினத்தவர் ஆவர் (விப 12:48). இப்படிப்பட்டோர் இஸ்ரயேல் கூட்டமைப்பைச் சாராதவர்களாயினும், அவர்கள் நடுவில் வாழ்பவர்கள். இவர்கள் இஸ்ரயேல் எல்லைக்குள் வாழ்ந்தாலும், முழு குடியுரிமை இல்லாதவர்கள். இவர்களுக்குச் சொத்தை உரிமையாக்கும் உரிமை இல்லை. சொல்லப் போனால், இஸ்ரயேலரின் வழிபாடுகளில் கூட பங்குகொள்ள இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது (விப 12:43).

ஓர் இனத்துடன் தொடர்பில்லாத, உரிமைச் சொத்தில்லாத இவர்கள் கைம்பெண்கள், அனாதைகள் ஆகியவர் போல மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருந்தனர். ஆகவே, அவர்கள் யாவருக்கும் இரக்கம் காட்டவேண்டும்; அவர்களின் பலவீனத்தை வாய்ப்பாகக் கொண்டு அவர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது; அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது என அறிவுரை கூறுகிறார். அவர்களோடு தம்மை முழுமையாக அடையாளப்படுத்தும் இறைவன், அவர்கள் அழுகுரலுக்குச் செவி சாய்ப்பேன் என்கிறார்.

எனவே, மனித வாழ்வின் அடித்தளமாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய், இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ‘பிறரன்பைப்’ பற்றி இன்று பல கேள்விகள் எழுகின்றன. அன்பைச் சிலருக்குக் காட்டத் தெரிவதில்லை. சிலருக்கு அது காட்டப்படுவது தெரிவதில்லை. பலருக்கு அது காட்டப்படுவது புரிவதே இல்லை. காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கின்றோம், பேசுகின் றோம், சிரிக்கின்றோம். இவர்களில் எத்தனை பேர்களிடம் உள்ளன்போடு சிரித்துப் பேசுகின்றோம்? வேறு வழியில்லை, சிரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சிரிக்கின்றோமா? அல்லது உண்மையான அன்போடு பேசிச் சிரிக்கின்றோமா? பொய்யாகச் சிரித்து, போலியாகப் புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும், வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்த ஒரு செயலும் மனமகிழ்வைத் தரும். எனவே, இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் வாழ்வுக்கான பாடங்கள்:

அன்பில் பேதமில்லை. ‘இவருக்கு நாம் உதவினால், இவர் இப்படி மாற்றுதவி செய்வார்’ என்று நாம் செலுத்துவதற்குப் பெயர் அன்பு இல்லை... அது ‘நாகரிக வணிகம்’.

இந்த உலகில் எந்த ஒரு மனிதரும், தான் பெற்றதை வைத்து மதிப்பு அடைவதில்லை; மாறாக, அவர் பிறருக்கு என்ன கொடுத்தாரோ, அதை வைத்தே எப்போதும் மதிக்கப்படுகிறார். நாம் எல்லாரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது அன்புச் செயல் ஒன்றைச் செய்தால், நாம் இந்த உலகைச் சரியான திசையில் நடத்திச் செல்கிறோம் என்று பொருள்.

அன்பிருந்தால் உலகில் யாரும் அனாதையில்லை. மனத்தில் தன்னலமில்லா அன்பிருந்தால், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. ‘அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. ஏனென்றால் அன்புக்கு விலை அன்பே’ (ஜான் கீட்ஸ்). 

ஆம். அன்புதான் உலகத்தை இயக்கும் சக்தி; அன்புதான் உலகை வெல்லும் ஆயுதம்!