Namvazhvu
05, நவம்பர் 2023 பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு மலா (1: 14-2: 1-2, 8-10, 1தெச 2: 7-9,13, மத் 23: 1-12)
Wednesday, 01 Nov 2023 11:41 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுகாலத்தின் 31 - ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். “மறைநூல் அறிஞர், பரிசேயர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்; ஆனால், அவர்கள் செய்வதைப்போல நீங்கள் செய்யாதீர்கள்” என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்கு அறிவுறுத்துகிறார். ஏனெனில், இவர்கள் மறைநூலில் உள்ளதைப் போதிப்பார்கள்; அதே நேரத்தில் மறைநூலுக்கு எதிரான வாழ்வை வாழ்வார்கள். கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை எல்லாம் தங்கள் அங்கிகளில் எழுதி வைப்பார்கள்; ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட இவர்கள் கடைபிடிக்க மாட்டார்கள். கடவுளுக்கும், மக்களுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கின்றோம் என்று சொல்வார்கள்; ஆனால், உண்மையில் மக்கள் கடவுளைச் சென்றடைவதற்கும், கடவுளைத் தேடுவதற்கும் ஒரு தடையாய் இருப்பார்கள். பணிவோடும், தாழ்ச்சியோடும் இருக்க வேண்டும் என்று போதிப்பார்கள்; ஆனால், இவர்களோ பொதுவெளியில் தாங்கள் முக்கிய நபர்களாக மதிக்கப்பட வேண்டுமென்று விரும்புவார்கள். எனவேதான், ‘அவர்கள் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்; ஆனால், அவர்கள் செய்வது போல செய்யாதீர்கள்’ என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். இன்று நமது சொற்களும், செயல்களும் இணைந்து செல்கின்றனவா? ஆண்டவர் இயேசுவின் போதனைப்படி நம் வாழ்க்கை அமைந்திருக்கின்றதா? என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்கள் ஆண்டவருக்குச் செவிசாய்க்கும்போது ஆசீர் பெறுகிறார்கள். ஆண்டவருக்குச் செவிசாய்க்காதபோது சாபத்தைப் பெறுகிறார்கள் என்றுரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக   முன்னுரை

‘கடவுளுடைய நற்செய்தியை மனிதர்களாகிய நாங்கள் அறிவித்த போதும், அதைக் கடவுளின் வார்த்தைகளாகவே நீங்கள் கருதியதால், அது உங்களிடையே செயலாற்றியது’ என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* அனைத்துலகின் ஆண்டவரே! உமது திரு அவையை வழிநடத்தும் உம் திருப்பணியாளர்கள் தங்கள் போதனைக்கு ஏற்றவாறு நடந்து, அவ்வழியே உமது மந்தைகளை உம்மிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* அருள்வரங்களைப் பொழிபவரே! நீதி, நேர்மை வழி நின்று மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல், மக்களின் சுமைகளையும் சேர்த்துச் சுமக்கின்ற நல்ல தலைவர்கள் தோன்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* அற்புதங்கள் புரிபவரே! எமது பங்குத்தந்தைக்காகவும், மண்ணின் மைந்தர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்றவாறு வாழ்ந்து, உமது பணியை நிறைவாகச் செய்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* விண்ணுலகில் வாழ்பவரே! எம் மறைமாவட்டத்திற்காக உழைத்து மரித்த ஆயர்கள், குருக்கள், அருள்கன்னியர்கள், வேதியர்களின்  ஆன்மாக்களுக்கு நீர் அமைதி அளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.