“இயேசுவின் சீடர்களில் ஆண்களோடு சில பெண்களும் சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகச் சரியானவர்களோ, திறமையானவர்களோ, வானதூதர்களோ அல்லர்; மாறாக, அவர்கள் அனைவரும் வாழ்வின் தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள். அத்தகையவர்கள் இயேசுவின் இரக்கம் மற்றும் மென்மையால் வரவேற்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டவர்கள்.”
- அக்டோபர் 30, மாஃபியாவிலிருந்து வெளியேறிய பெண்களைச் சந்தித்தபோது
“நம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளை அன்பு செய்வதன் வழியாக, ஒரு கண்ணாடியைப் போல, தந்தையின் அன்பை நாம் பிரதிபலிக்கின்றோம். கண்ணால் காணாத இறைவனை, காணும் சகோதரர்களை அன்பு செய்வதன் வழியாக நாம் அன்பு செய்கின்றோம்.”
- அக்டோபர் 29, மூவேளை செபவுரை
“அன்பு என்பது ஆராதிப்பது, ஆராதனையின் வழியாக நாம் கடவுளின் அளவற்ற மற்றும் ஆச்சரியமுள்ள அன்பிற்குப் பதிலளிக்கின்றோம்.”
- அக்டோபர் 29, ஞாயிறு மறையுரை
“உலகின் பல்வேறு பகுதிகளில் போரின் அகோரம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மோதல்களும், கலவரங்களும் நம்பிக்கைச் சுடரை மறைத்திட அனுமதிக்க வேண்டாம். அனைத்துக் கலாச்சாரங்களும் தூய ஆவியாரின் நல்லிணக்க வெளிப்பாட்டிற்கு உட்படும் வகையில், அமைதியின் அவசியத்தையும், அவசரத்தையும் அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம்.”
- அக்டோபர் 28, திருத்தந்தையின்‘டுவிட்டர்’ செய்தி
“நாம் நம் ஆயுதங்களைக் குறைபாடற்ற ஒன்றாக மேனிலைப்படுத்தியுள்ளோம், அதே வேளை, நம் மனச்சான்றைத் தூங்க வைத்துள்ளோம். உலகின் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.”
- அக்டோபர் 27, உலக அமைதிக்கான அழைப்பு
“நான் திரு அவையைக் கடவுளின் உண்மையுள்ள மக்கள், துறவி மற்றும் பாவி, ஒரு மக்கள் கூட்டம் என்று நினைக்க விரும்புகிறேன். திரு அவை என்பது பெண்பால்; அவர் ஒரு மனைவி; அவர் ஒரு தாய்!”
- அக்டோபர் 25, இறை மக்களுக்கான கடிதம் குறித்து உரை