Namvazhvu
பொதுநிலையினரின் வேதியப் பணி ‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ என்ற திருத்தூது மடலின் நோக்கமும், அதன் தாக்கமும்
Wednesday, 08 Nov 2023 08:37 am
Namvazhvu

Namvazhvu

நான் பொதுநிலையினரின் வேதியப் பணியை நிறுவுகிறேன்என்ற வார்த்தைகளின் வழியாய்த் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கத் திரு அவையின் உள்ளிருந்து ஓர் அடிப்படை மாற்றத்திற்கு வித்திட்டிருக்கின்றார். கடந்த 2021 - ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டதொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium) என்ற ஆறு பக்கங்கள் கொண்ட திருத்தூது மடலின் இறுதியில் இதனை அவர் குறிப்பிடுகின்றார். இத்திருமடல் திரு அவையினுடைய பாரம்பரியம் மிக்க வேதியர் பணிக்குப்  புத்துயிர் அளித்திருக்கின்றது.

இந்தத் திருத்தூது மடல் உரோமையின் திருவழிபாட்டு மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை ஆணையம் (Dicastery of  Divine Worship and the Discipline of the Sacraments) தீர்மானித்திருக்கிற சடங்கின் வழியாகப் பொதுநிலையினர் நிலையான வேதியப் பணியைப் பெறுவதை நிறுவுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் எப்போதுமே திரு அவையில் பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறவர்பொதுநிலையினரின் பணி என்பது தற்காலத்தில் நாம் பெற்றிருக்கிற அருள் மட்டுமல்ல; மேலும், இது எதிர்காலத்திற்கான நம்பிக்கை. வாசகர்கள், பீடத்துணைவர்கள், நற்கருணை வழங்குதல் உள்ளிட்ட திரு அவையின் திருவழிபாடுகளில் பொதுநிலையினர் பணியாளர்கள் உதவி செய்தது போல, இப்போது நிறுவப்பட்டிருக்கின்ற இந்தப் பொதுநிலையினரின் நிலையான வேதியப்பணி வழியாக, இவர்கள் திரு அவையின் மறைபோதகப் பணியில் மிகப்பெரும் உதவியாக இருப்பார்கள் என்பது திண்ணம்.

ஏன் இந்தத் திருத்தூது மடல்?

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உருவான, புதுப்பிக்கப்பட்ட புரிதலால் இன்று  படிநிலை முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு, அனைவரும் பங்கேற்கும் அமைப்பு முறைக்கு அதிக அழுத்தம் அளிக்கப்படுகின்றது. திரு அவை பொதுநிலையினரைத்  தனது மறைப்பணியின் தவிர்க்க முடியாத அங்கமாகக் கருதி அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இன்று பொதுநிலையினர்  அருள்பணியாளரோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் அதிகமாகவே வழங்கப்படுகின்றன. இரண்டாம் வத்திக்கான் சங்கம்  திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தங்களுக்குக் கடவுள்  அளித்திருக்கின்ற வரங்களைப் பயன்படுத்திக் கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளில் பங்கேற்றுதிரு அவைக்கு நன்மை செய்ய அழைக்கப்படுகின்றனர்.

செபித்தல்’, ‘கொடுத்தல்’, ‘பணிந்திருத்தல்என்ற மூன்று நிலைகளுக்குள் வாழ்ந்து வந்த பொதுநிலையினருக்கு, இவ்வுலகில் கிறிஸ்துவின் கனவை நனவாக்க ஆயர்கள், குருக்கள், துறவியர்களோடு இணைந்து பணியாற்றும் பொறுப்பு அவர்களுக்கும் உண்டு என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் தன் அறைகூவலாக உறுதி செய்தது.

1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள்நிரந்தரப் பணிகள்’ (Ministeria quaedam) என்ற தனது திருத்தூது மடல் வழியாக, வழக்கத்தில் இருந்த சிறிய பட்டங்களை (Minor Orders) திரு அவையின் வழக்கத்திலிருந்து நீக்கினார் என்ற போதிலும், வாசகர் மற்றும் பீடத்துணைவர் என்று அன்று வழக்கத்திலிருந்த இரு பட்டங்களைப் (orders) பணிகளாக மாற்றிப் பொதுநிலையினரோடு பகிர்ந்து கொடுத்தார். மேலும், அவர் ஆயர் பேரவைகள் தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளின் தேவைக்கேற்ப, வேறு பணிகளையும் நிறுவிக்கொள்ளலாம் என்ற கருத்தையும் வலியுறுத்தினார். இதனால்தான் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருத்தூது மடலின் வாயிலாக வாசகர் (Lector), பீடத்துணைவர் (Acolyte) என்ற இந்த இரு பணிகளோடு, பொது நிலையினரான ஆணையோ, பெண்ணையோ தக்கச் சடங்கின் வழியாய் நிலையான வேதியப் பணியில் இணைத்துக் கொள்ளும் புதிய வழிமுறையைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர்களுக்கு வெளிப்படையாக நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கின்றார்

குருக்கள் மற்றும் துறவற வாழ்வுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்று அடியோடு குறைந்திருக்கின்றது. திரு அவையில் பணி செய்கிற அனைவருக்கும் இந்தச் சிக்கல் இருப்பதும், தொடர்வதும் அறிந்த ஒன்றே. இதற்குப் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும், நம்பிக்கைக் குறைவு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது திரு அவையைப் பலவிதங்களில் பாதித்திருக்கின்றது. குறிப்பாக, மறைக்கல்வி போதித்தல் (catechesis) என்பது இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தத் திருத்தூது மடலில் இக்குறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, பின்வருமாறு கூறுகின்றார்: “நற்செய்தி அறிவிக்கவும், மேய்ப்புப் பணி செய்யவும் இயலாத வகையில் குருக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிற இந்நாள்களில் வேதியர்களின் நிலையான பணி மற்றும் பங்கு என்பது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.”

திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலின் வழியாக ஒவ்வொரு பொதுநிலையினரும் இயேசு கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளில் பங்குபெற அழைக்கப்படுகின்றனர். பொதுநிலையினப் பணியின் தொடக்கமாகத் திருமுழுக்குத் திகழ்கின்றது. திருமுழுக்குக் கொடுக்கிற கடமையும், அருள்பணிக் குருத்துவத்திலிருந்து மாறுபட்ட பொதுப் பணிக்குருத்துவமும் இப்பணியின் அடிப்படையாக அமைகின்றது. வேதியர்கள் தாம் பெற்ற திருமுழுக்கின் வழியாகத் தங்களுடைய தலத் திரு அவையில் குருக்களின் வழிகாட்டுதலுக்கேற்ப நம்பிக்கையை அறிவித்தல், பரப்புதல் போன்றவற்றில் அவர்களோடு இணைந்து பணியாற்ற உரிமை பெறுகின்றனர்.

தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி; (Antiquum Ministerium) என்ற இந்தத் திருத்தூது மடலின் உட்பிரிவுகள்

தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium என்பது 11 எண்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய ஆவணம் ஆகும். இதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இதனை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. தொடக்கப் பகுதி (1-3)

இப்பகுதி பொதுநிலையினப் பணிகள், குறிப்பாக, வேதியர் பணி எவ்வாறு திரு அவை தொடங்கிய  காலத்திலிருந்து இன்று வரை உள்ள திரு அவையின் வரலாற்றில் இன்றியமையாத ஓர் இடத்தைப் பெறுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

2. நடுப்பகுதி (4-8)

இந்தப் பகுதி இரண்டாம் வத்திக்கான் சங்கத் திரு அவை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, வேதியர்களின் தோற்றவமைப்பியல் மற்றும் தற்கால சூழலுக்கு ஏற்ற வேதியப் பணியின் பல்வேறு பணிகளை ஆய்வு செய்கிறது.

3. இறுதிப் பகுதி (8-11)

இப்பகுதி இந்தப் பணி நிறுவப்பட்டதையும் , மேலும் இதைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தத் தேவையான படிகளையும், மற்றும் முன்னெடுப்புகளையும் பற்றி விவாதிக்கின்றது.

தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி; (Antiquum Ministerium) என்ற இந்த ஆவணத்தின்  முக்கியமான கூறுகள்

வேதியர்களின் சீடத்துவம்:

வேதியப்பணி அல்லது மறைக்கல்வி ஆசிரியப் பணி என்பது கிறிஸ்துவைப் பிறருக்கு எடுத்துக் காட்டுகிற ஒரு பணி. இதனைச் சிறப்புறச் செய்ய அவர்கள் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டிருத்தல் அவசியம்.

சீடத்துவம் மற்றும் சாட்சிய வாழ்வு ஆகியவை இந்த ஆவணத்தின் முக்கியமான கூறுகள் ஆகும். “நீங்கள் சென்று எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்”  என்பது இயேசு தந்த மிக முக்கியமான கட்டளை. ஆனால், இன்று பல வழிகளில் இக்கட்டளை கண்டுகொள்ளப்படாமல் கடந்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் பல்வேறு பங்குப் பணிகளில் உதவி செய்ய பொதுநிலையினரைப்  பயன்படுத்தினாலும், எப்போதும் அவர்களைச் சீடர்களாக உருவாக்குவதில் நாம் அக்கறை காட்டியதில்லை. சீடத்துவமும், மறைக்கல்விப் பணியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. பிறரில் விசுவாசத்தை விதைப்பது என்பது கிறிஸ்துவைப் போல வாழ்பவர்களால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. தாங்கள் கிறிஸ்துவின் சீடர்கள் என்று உணர்வதுதான் வேதியர்களின் முதல் பொறுப்பு என்று இந்த ஆவணம் அறிவுறுத்துகின்றது.

தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium) என்ற இந்த ஆவணம், சீடத்துவமே வேதியப் பணியின் அல்லது மறைக் கல்வி ஆசிரியப் பணியின் அடித்தளம் என்பதை எடுத்தியம்புகின்றது. இந்த அடிப்படை இல்லையென்றால் வேதியர் பணி என்பது சான்று பகர்கிற ஒன்றாக இல்லாமல், வெறுமனே தகவல்களைப் பரிமாறுகிற ஒரு பணியாகச் சுருங்கிவிடும்.

எனவே, வேதியர்கள் தங்கள் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்த, முதலில் அவர்கள் கிறிஸ்துவின் சீடர்களாக இருத்தல் அவசியம்ஒவ்வொரு வேதியரும் பின்வரும் இயேசுவின் இந்த மறைபொருள் மிக்க வார்த்தைகள் தங்கள் வாழ்வோடு பொருந்திப் போகிற விதத்தில் வாழ வேண்டும்.  

(தொடரும்)