Namvazhvu
பொதுநிலையினரின் வேதியப் பணி ‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’என்ற திருத்தூது மடலின் நோக்கமும், அதன் தாக்கமும்
Thursday, 16 Nov 2023 05:18 am
Namvazhvu

Namvazhvu

வேதியப்பணிக்கான அழைத்தல்

இறையழைத்தல்’(Vocation) என்ற வார்த்தையை வேதியப் பணியோடு தொடர்புப்படுத்தியிருப்பதுதொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministeriumஎன்ற இந்த ஆவணத்தில்  கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சத்தில் ஒன்றுவேதியப் பணிக்காகத் தங்களுக்கு அழைப்பு இருக்கிறது என்று உணர்கிற பொதுநிலையினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழிகாட்டி உதவுவது திரு அவையின் பொறுப்பு. திரு அவை இவ்வழைப்பிற்குத் தூண்டுகோலாக இருந்து, அதை ஊக்கப்படுத்தி  அவர்களுக்கு வேதியப் பணியை வழங்குகின்றது.

கிறிஸ்துவே ஆசிரியராகவும், பண்படுத்துகிறவராகவும் இருந்து, தனித்த விதத்தில் தம்மைப் பின்தொடர ஆண், பெண் இருபாலருக்கும் இந்த அழைப்பைக் கொடுக்கின்றார்இயேசுவின் தனிப்பட்ட  இந்த அழைப்பும், அந்த அழைப்போடு அவருக்குத் தொடர்ந்து இருக்கிற உறவும்தான் இந்த வேதியப் பணியை இயக்குகிற  உந்து சக்தியாக உள்ளது.

வேதியப் பணியின் முக்கியக் கூறாக இருக்கக் கூடிய இறையழைத்தலை அடிக்கோடிட்டுக் காட்டத் திரு அவை (Lumen gentium) எண் 21- சுட்டிக்காட்டி பின்வருமாறு கூறுகின்றார்: “குடும்பம் மற்றும் சமூக உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிற அவர்களது அன்றாட வாழ்விற்கு மத்தியில், பொதுநிலையினர் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சிறப்பு அழைப்பை உணர்கின்றனர். திரு அவையின் இருப்பை உறுதி செய்யவும், அதைக் கனி கொடுக்கச் செய்யவும் இவ்வழைப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவர்களின் வழியாகத்தான் திரு அவை உலகிற்கு உப்பாகத் திகழ முடியும்.”

எனவேதான், திரு அவை வேதியர் பணியை வெறும் வேலையாகக் கருதாமல், அதை ஓர் அழைப்பாகக் கருதுகின்றது. அழைப்பு என்பது தூய ஆவியாரால் ஒருவருக்கு வழங்கப்படுகிற கொடை. அதைத் திரு அவையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது அவசியம். எனவே, ஒரு வேதியரின் வாழ்வு என்பது, தங்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற அழைப்பிற்கான நன்றியின் வெளிப்பாடாக அமைய வேண்டும்.

வேதியப் பணியைப் பெறத் தேவையான தகுதிகள்

திருத்தந்தையின் திருத்தூது மடல் இந்த வேதியப் பணிக்காக அழைக்கப் பட்டவர்கள் ஆழமான நம்பிக்கையும், பக்குவமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகின்றது. மேலும், இவர்கள் கிறிஸ்தவச் சமூகத்தில் துடிப்போடு செயல்படுகிறவர்களாகவும், அனைவரையும் பரந்த மனத்தோடு ஏற்று, அன்பு செய்து, சகோதரத்துவத்தோடு வாழக் கூடியவர்களாக இருத்தல் அவசியம் என்று எடுத்துரைக்கின்றது.

பணியார்வத்துடன் கூடிய இறையழைத்தல் இப்பணிக்கு மிக அவசியம். அதோடு கூட அவர்களின் ஆயரும் இப்பணி பலனளிக்கக் கூடியது எனக் கருத வேண்டும். பொதுவாகவே திரு அவையின் இத்தகைய பணிகள் தனி நபர்களின் நலனுக்காக அல்ல; மாறாக, தனது தலத் திரு அவைக்கு இப்பணி தேவை என ஆயர் கருதுவதனால் வழங்கப்படுகின்றது. இறை சமூகத்தின் தேவையையும், உறுப்பினர்களின் தகுதியையும் மதிப்பீடு செய்து, வேதியப் பணிக்கான அழைத்தலை உறுதி செய்வது மறைமாவட்ட ஆயரின் கடமை. கிறிஸ்தவத் தொடக்க நிலை திருவருள்சாதனங்களைப் பெற்ற பிறகு, முழு மனச்சுதந்திரத்தோடு எழுதிக் கையழுத்திட்டு, கோரிக்கைப் படிவத்தை மறைமாவட்ட ஆயரிடம் ஒப்படைத்த ஆணையோ, பெண்ணையோ இப்பணிக்கான உறுப்பினர்களாக ஏற்று பயிற்சி பெற அனுமதிக்கலாம்.

வேதியர் பணிக்கான தயாரிப்பு

உங்களிடம் இல்லாததை, நீங்கள் தரமுடியாது’ (Nemo dat quod non habet). வேதியப் பணியை நிறுவுதல் என்பது, வலுவான வேதியப் பணிக்கான தயாரிப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். திரு அவையில் ஆயர்களின் அருள்பணி (CD) எண் 14 மற்றும் திரு அவைச் சட்ட எண்கள் 231 மற்றும் 780 ஆகியவை  திரு அவையில் சிறப்புச் சேவைக்காக நியமிக்கப்படுகிறவர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுகின்றன. எனவேதிரு அவையில் வேதியப் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள விழைகிறவர்கள், தாங்கள் ஆற்றப் போகிற  வேதியப் பணிக்காகத் தக்கப் பயிற்சியைக் பெற்றிருக்க வேண்டியது அவர்களின் கடமை.

தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium) என்ற இந்தத் திருத்தூது மடல் வேதியப் பணிக்காக அழைக்கப்பட்டவர்கள் திருவிவிலியம், இறையியல், மேய்ப்புப்பணி, கற்பித்தல் உள்ளிட்ட தளங்களில் தக்கப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. திரு அவையின் நிலைப்பாடு குறித்த புரிதல் மற்றும் திரு அவையின் படிப்பினைகளுக்குப் பணிந்திருத்தல் ஆகிய இவை இரண்டும் இல்லாமல் இந்த வேதியப் பணி என்பது சிறப்பானதாக அமையாது.

பொதுநிலையினரின் உலகுசார் இயல்பு

திருத்தந்தை பிரான்சிஸ் பொதுநிலையினப் பணிகளின் தனித்த உலகுசார் இயல்பை மீண்டும் இந்தத் திருத்தூது மடலில் வலியுறுத்துகின்றார். இந்நவீன காலத்தில் நற்செய்தி அறிவிப்பின் அவசியத்தை உணர்ந்தே அவர் வேதியப் பணியை நிறுவினார். இது குருக்களை மையப்படுத்துகிற போக்கிற்கு மாற்றாக, மக்களை மையப்படுத்துகிற திரு அவை மலர விழைகின்றது. எனவே, இது குருக்களின் மேலாதிக்கத்திற்கு உட்படுத்தப் படாமல், பொதுநிலையினரைச் சார்ந்து செயல்படுதல் அவசியம்.

திரு அவையின் ஆட்சிப் பீடத்திற்கு ஒத்துழைத்தல்

திருத்தந்தை பிரான்சிஸ் குருக்களும், பொது நிலையினரும் இணைந்து பணியாற்றும் ஒரு பங்கேற்புத் திரு அவையை எப்போதும் ஊக்குவிக்கின்றார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற வேதியப் பணியைத் திரு அவையின் ஆட்சிப் பீடத்தோடு இணங்கிச் செய்யதொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium) என்ற இந்த ஆவணம் அழைப்பு விடுக்கின்றது. திரு அவை (Lumen gentium) எண் 33- சுட்டிக்காட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “நற்செய்தியில் திருத்தூதர் பவுலுக்கு உதவி செய்த  ஆண்களையும், பெண்களையும் போல், திரு அவையின் ஆட்சிப் பீடத்தில் இருக்கிறவர்களுக்குப் பொதுநிலையினர் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு நல்கி பணி செய்ய அழைக்கப்படலாம்.”

இதையே, நமது திரு அவை சட்ட எண் 517:2 பின்வருமாறு வழிமொழிகின்றது: ‘தேவையின் காரணமாகத் திருநிலைப்படுத்தப்படாத ஒரு பொதுநிலையினருக்கு வாய்ப்புத் தருகிறபோது, அவர்கள் எப்போதும் அருள்பணியாளர்களின் வழிகாட்டுதலின்கீழ் பங்கின் மேய்ப்புப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு சமூகம் சிறப்புற அமைய இது அவசியப்படுகின்றது. இப்பணி வேதியர்களை அருள்பணியாளர்களுக்கோ அல்லது திருத்தொண்டர்களுக்கோ மாற்றாகக் கருதவில்லை; மாறாக, ஒரு பொதுநிலையின உறுப்பினருக்குக் குருக்களோடு இணைந்து அவர்களின் பணியில் பங்கேற்று, அவரின் மேய்ப்புப் பணி சென்று சேர உதவுவதன் வழியாகத் தங்களது திருமுழுக்கை வாழ்வாக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது.

திரு அவையின் நிலையான பணியாக வேதியப் பணி

முன்பு இருந்ததற்கும், இத்திருத்தூது மடலின் வழியாக இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிற இந்த வேதியப் பணிக்கும் இருக்கிற வேறுபாடு இப்பணியின் நிலைத்தன்மை. இதில் வேதியர் தனது வேதியப் பணியில் இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும். நிலையான பணி என்பது, இப்பணியில் தகுந்த தயாரிப்பிற்குப் பின், முறைப்படி நிறுவப்பட்ட வேதியர்கள் வாழ்வின் இறுதிவரை இப்பணியைச் செவ்வனே செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் குறித்துக் காட்டுகிறது. திருத்தூதரக ஆட்சிப்பீடம் வெளியிட்டிருக்கிற திருவழிபாட்டுச் சடங்குகளைப் பின்பற்றி மறை மாவட்ட ஆயரோ அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அருள்பணியாளரோ இந்த வேதியப் பணியைப் பயிற்சி பெற்றுத் தயாரிக்கப்பட்ட ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ முறையாக வழங்கலாம்.

யார் இந்தப் பணிக்குத் தகுதியற்றவர்கள்?

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, வேதியப் பணியை நிறுவுவதற்கான சடங்குகள் குறித்த திருவழிபாடு மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை ஆணையத்தின் கடிதப்படி பின்வரும் நபர்களை வேதியர்களாக நியமிக்க இயலாது.

1. தூய திருநிலைப்பாட்டிற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறவர்கள், குறிப்பாக அருள்பணியாளராக மற்றும் திருத்தொண்டராகத் தங்களையே தயாரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இப்பணி வழங்கப்படக்கூடாது. ‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministeriumஎன்ற இந்தத் திருத்தூது மடல், பொதுநிலையினப் பணி, என்பது திருநிலைப்படுத்தப்பட்டவர்களின் பணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் தனித்துவமானது என்று நிறுவுகின்றது.

2. துறவற ஆணோ, பெண்ணோ வேதியராக முடியாது. அவர்கள் ஒருவேளை பங்கு சமூகத்தின் தலைவர்களாகவோ அல்லது மறைக்கல்விப் பணியை வழிநடத்துகிறவர்களாகவோ இருந்தால் அவர்கள் வேதியர்களாக நியமிக்கப்படலாம்.

3. கல்விக்கூடங்களில் மறைக்கல்வி போதிக்கிற ஆசிரியர்கள், தங்களுடைய பங்கு அல்லது மறை மாவட்டத்தில் வேறு சில திரு அவையின் பணிகளில் தங்களை ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலொழிய, அவர்களால் நிலையான வேதியப் பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க முடியாது.

திருநிலைப்பாடு தேவைப்படுகின்ற பணிகளோடு கூட, திருநிலைப்பாடு தேவைப்படாத பணிகளும் திரு அவையின் வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகின்றன என்று திரு அவை இன்று அவற்றை  அடையாளம் கண்டிருப்பது திண்ணம். மேலும், மெச்சத்தக்க ஒன்று, இவ்வுலகில் திரு அவையின் மீட்புப் பணி என்பது, வெறுமனே திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களால் மட்டுமல்ல; மாறாக, திருநிலைப்படுத்தப்பட்டவர்களோடு ஒத்துழைக்கின்ற அனைத்துப் பொது நிலையின நம்பிக்கையாளர்களாலும் சாத்தியமாகும். தங்களுடைய திருமுழுக்கின் வழியாகவும், தங்களின் நிலைக்கேற்ப அவர்கள் பெற்றுக்கொண்ட சிறப்பு அழைப்பின் வாயிலாகவும் பொதுநிலையினர் இயேசுவின் அரச, ஆசிரிய, இறைவாக்கினர் பணியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையான வேதியப்பணி என்பது, பொது நிலையினர் திரு அவையின் மீட்புத் திட்டத்தில் தங்களின் பணியை அளிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு நெடுநாள் ஏக்கத்தின் நிறைவாக அமைந்திருக்கின்றது. திரு அவை வேதியர்களை உருவாக்குவதிலும், கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டமைக்க வேதியர்களை அனுப்புவதிலும் இன்னும் அதிகத் தீவிரத்தோடு செயல்பட வேண்டியது இன்று அவசியப்படுகின்றது.

திருத்தந்தையின் அறிவுறுத்தலின் பேரில், அகில இந்திய ஆயர் பேரவை பொதுநிலையினரின் நிலையான வேதியப் பணிக்கான ஒரு கையேட்டை வெளியிட்டிருக்கின்றது. இக்கையேடு, இந்த நிலையான பணியில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் தக்க வழிகாட்டுதலாக அமையும்.