Namvazhvu
03, டிசம்பர் 2023 (இரண்டாம் ஆண்டு) திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (எசா 63:16-17; 64:1,3-8; 1கொரி 1:3-9; மாற் 13:33-37)
Friday, 01 Dec 2023 04:59 am
Namvazhvu

Namvazhvu

உங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். ஏனெனில், உறங்கும் விழிகளால் வாழ்வின் அற்புதங்களைப் படம்பிடிக்க முடியாது!’ (‘மாசின்மை’)

இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவங்குகின்றோம். மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவழிபாட்டு ஆண்டு அட்டவணையின் இரண்டாவது ஆண்டை ஆரம்பிக்கின்றோம். இன்றைய ஞாயிறை, கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகின்றோம். புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்கவும், குழந்தை வடிவில் பிறக்க இருக்கும் இறைமகனின் வரவை எதிர்நோக்கவும், அதற்கு நம்மைத் தயார்படுத்தவும் திருவருகைக் காலம் நம்மை அழைக்கின்றது.

திருவருகைக் காலம் என்பது எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். மனுவுரு எடுத்த பெருநிகழ்வுக்காக நம்மையே தயார்படுத்த திரு அவை தந்துள்ள புனித நாள்கள்! திருவருகைக் காலம் என்பது, இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம் ஆகும். அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் இதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும், மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.

டிசம்பர் 17 முதல், 24 உள்பட வரும் வார நாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாகவும், திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை உள்ளதை இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

மனித வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், ‘உலகம் முடியப் போகிறதுஎன்ற செய்தி அடிக்கடிப் பேசப்பட்டுள்ளது. கி.பி. 999-ஆம் ஆண்டின் இறுதி நாள்களில் உலகம் முடியப் போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் உரோம் நகரில் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

1999-ஆம் ஆண்டு முடிந்து, 2000-ஆம் ஆண்டு துவங்கியபோது மீண்டும் இந்தக் கலக்கம் தலைதூக்கியது. 2020-ஆம் ஆண்டு முழுவதும் உலகின் பல நாடுகளில், கோவிட்-19 கொள்ளை நோயின் பரவல் உலக முடிவின் அடையாளமாக மக்களால் பேசப்பட்டதும் நமக்கு நினைவிருக்கலாம். ஒவ்வொரு முறையும் உலகில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, கொள்ளை நோய்கள் போன்ற பேரிடர்கள் நிகழும்போது, உலக முடிவைப் பற்றி அதிகம் பேசுகின்றோம், சிந்திக்கின்றோம். சாலையோரங்களில் யாராவது ஒருவர் நின்று கொண்டு, போவோர் வருவோர் அனைவரிடமும்ஆண்டவரின் நாள் நெருங்கி விட்டது... விழித் தெழுஎன்ற வாசகம் தாங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குவதைப் பார்த்திருக்கலாம்.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்ல இயலாது. நாளையே வரலாம்; அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும்? என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும்? என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகின்றோம்? என்பதை எண்ணிப் பார்க்க, இன்று நாம் சிறப்பாக அழைக்கப் படுகின்றோம்.

தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் விண்ணேற்றமான இயேசு மீண்டும் வருவார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல இயேசு உடனடியாக வரவில்லை. அவர் வரக் காலதாமதம் ஏற்பட்டதால் கிறிஸ்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

சிலர் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழாதோ என்று ஐயம் கொண்டனர். ‘அவரது வருகையைப் பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று?’ எனப் பேசத் தொடங்கினர். சிலர் தங்கள் கிறிஸ்தவக் கடமைகளில் ஆர்வம் காட்டாமல் தளர்ந்துபோகத் தொடங்கினர்.

நீடிய பொறுமை, ஆழ்ந்த நம்பிக்கை, தளராத செபம், கடமை தவறாமை, எதிர்பார்ப்பு மனநிலை என்பவை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சூழலில்தான், வீட்டுத் தலைவருக்கு ஒப்பான இயேசு எந்த நேரத்தில் வந்தாலும்நம்பிக்கைக்குரிய ஊழியர் விழிப்பாயிருந்து, தம் கடமைகளை ஆற்றியதுபோலநாமும் நற்செயல்களால் அவரது வருகையை விழிப்புடன் எதிர்நோக்கியிருக்க வேண்டும். அதாவது, வீட்டுத் தலைவர் எந்த நேரம் வந்தாலும், அவரை விழித்திருந்து வரவேற்க கடமையுணர்வுடன் செயல்படும் பணியாளரைப்போல, நாமும் மானிட மகனுடைய வருகைக்காகக் கடமைகளைச் செவ்வனே ஆற்றி, எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதே இன்றைய வழிபாட்டின் மையச் சிந்தனை.

20th Century Foxஎன்ற திரைப்பட நிறுவனம், ‘விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவைஎன்று ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்தைக் கண்டு, விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில், நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. அந்த விண்ணப்பத்தில், ஒரு கடையின் முகவரியைக் குறிப்பிட்டு அப்பெண் எழுதியிருந்தது இதுதான்: ‘நான் தற்போது இந்தக் கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து, நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே, உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த 1,500 பேர்களில், அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!

விழிப்பாய் இருப்பவர்களே எதிலும் வெற்றிக் காண்பார்கள். விழிப்பு நிலையில் இருப்பவர்களே இயேசுவின் வருகையை எளிதாய்க் கண்டுகொள்ள இயலும்; அவர்களே விண்ணக மாட்சியிலும் பங்குகொள்ள முடியும். இன்றைய நற்செய்தி மிகச் சிறிய பகுதியாக இருந்தாலும்விழிப்பாயிருங்கள்’ (Keep awake) என்ற எச்சரிக்கை நான்கு முறை தரப்பட்டுள்ளன (வச. 33,34,35,37). ‘ஒரு தயார் நிலைஎன்கிற கருத்துதான் இயேசுவின் இறுதி உரையில் தொடர்ந்து எதிரொலித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம்வரை நம்பிக்கையாளர் விழிப்பாயிருந்து, தங்கள் வாழ்வைத் தொடர வேண்டும். இந்த விழிப்பு நிலையில் நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவின் வருகையை உணரலாம்.

விழிப்போடு செயல்படுபவர்களுக்கு ஆண்டவரின் துணை எப்போதும் உண்டு என்பதை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் நமக்கு மிகத் தெளிவாகச் சொல்லித் தருகின்றன. படைத்தவரின் திட்டத்தை நிறைவேற்ற, படைப்புகள் எல்லாம் விழித்துக் கொண்டிருந்தபொழுது, இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் கடமைகளைச் செயல்படுத்தத் தவறியதால், விழித்தெழ முடியாத இடத்துக்குச் சென்றனர். ஆம்! அவர்கள் உறக்கம் கலைய 70 ஆண்டுகள் ஆயின. தங்களுடைய வாழ்வில் ஆண்டவருடைய தலையீடு அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். ‘நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?’ எனக் கேள்வி எழுப்பினர். ‘தீட்டுப்பட்டவரைப்போல உள்ளோம்’, ‘அழுக் கடைந்த ஆடைபோல் ஆனோம்’, ‘இலைபோல் கருகிப்போனோம்என்று தங்களுடைய பாவ நிலையை உணர்வுப்பூர்வமான வார்த்தைகளால் வெளிப்படுத்தும் இஸ்ரயேல் மக்கள், ‘ஆண்டவரே நீரே எங்கள் தந்தை! நாங்கள் களிமண்; நீர் எங்கள் குயவர்! நாங்கள் அனைவரும் உம் கைவேலைப் பாடுகள்என்று தங்கள் விடாப்பிடியான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். ஆண்டவரின் வழிகளை நினைவில் கொண்டு, கவனமாகவும்-விழிப்போடும் செயல்படுவோருக்கு ஆண்டவர் துணை செய்ய விரைகின்றார் என்பது உண்மை யாகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் கொடுத்த கொடைகளைத் தவறாகவும், தங்களுடைய நலனுக்காகவும் பயன்படுத்தி, முறைகேடாக வாழ்ந்த கொரிந்து நகர மக்களுக்கு அறிவுரை கூறும் புனித பவுல், கிறிஸ்துவின் நாள் வரும்வரை நாம் விழிப்பாய் இருப்பதோடு, குறைச் சொல்லுக்கு ஒருபோதும் ஆளாகாமல் இருப்பது அவசியம். கடவுள் திருமுன் நாம் மாசு மருவற்ற நிலையில் என்றும் இருக்க வேண்டும். அதற்கு நாம் கவனமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இறுதிவரை இறைவனுக்கு ஏற்புடை யோராய் விளங்குபவர்களுக்கு ஆண்டவர் துணை செய்வார் என எடுத்துரைக்கிறார்.

இன்றைய நாளில் நாம் நினைவில் கொள்ள:

மானிட மகன் வரும் நேரமோ, பொழுதோ நமக்குத் தெரியாது. எனவே, நாம் எப்போதுமே நமது கடமைகளை ஆற்றி, தீர்ப்பு நாளை எதிர்நோக்கியிருக்க வேண்டும். திடீரென அவர் வரும்போது, நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. ஆகவே, இத்தகைய காரணங்களுக்காக நாம் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும்.

● ‘விழிப்பாய்அல்லதுதயார் நிலையில்இருப்பது என்பது நலமானவற்றையும், இறையாட்சியின் மதிப்பீடுகளையும் தேர்ந்து தெளிந்து, இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் தங்கள் நேரத்தைத் தொலைத்துவிடாமல், இன்றைய திருக் குழும மன்றாட்டு சொல்வதுபோலநீதிச்செயல்களுடன் இயேசுவை எதிர்கொள்வது’; கடவுள் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை எல்லா நேரத்திலும் மதித்து நடந்து கொள்வது ஆகும்.

● ‘விழிப்பாய் இருத்தலைஇன்று நாம் மிக முக்கியக் கிறிஸ்தவக் கடமையாகப் பார்க்க வேண்டும். கண்களை மூடியே செபித்துப் பழகி விட்ட நாம், முதலில் நம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை உள்ளுணர்வோடு கவனிக்க வேண்டும். மனிதத்திற்கும், இறைமைக்கும் முரணாக, எதிராக நம் கண்முன்னே நடக்கும் செயல்பாடுகளை விழிப்புடன் உற்றுநோக்கி, அவற்றிற்கெதிரான செயல்பாடுகளைச் செய்வதும் இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் அறைகூவல்.

ஊரே தூங்கியிருந்தாலும், நாம் மட்டும் தூங்காமல் நம் தலைவர் இயேசுவுக்காக விழிப்புடன் காத்திருப்போம். - ‘கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ் சலமே’ (குறுந்தொகை-138).