Namvazhvu
வட இந்தியாவா? வதைக்கும் இந்தியாவா?
Thursday, 14 Dec 2023 08:40 am
Namvazhvu

Namvazhvu

இந்தியாவின் வட மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மதமாற்றத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று அம்மாநிலத்தின் கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மதமாற்றத் தடுப்புச் சட்டமானது 2021-இல் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைமுறைக்கு வந்தது. அன்று தொடங்கி இன்று வரை ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மீதான வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ‘மதமாற்றம் செய்தார்கள்என்று குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட இந்த 400 பேர்களில், 318 பேர்கள் ஆண்கள், 81 பேர்கள் பெண்கள் மற்றும் ஒருவர் கத்தோலிக்க அருள்பணியாளர் ஆவர். இவ்வழக்குகளில் இருந்து பலர் ஜாமினில் வெளியே வந்தாலும், கத்தோலிக்கக் குரு பாபு பிரான்சிஸ் உள்பட 50 பேர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.

அருள்தந்தை பாபு பிரான்சிஸ், அக்டோபர் மாதம் தனது பங்கில் செபக்கூட்டத்தை நடத்தினார். அப்போது அப்பகுதியைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், அருள்தந்தை பாபு பிரான்சிஸ் கிராம மக்களை மதம் மாற்றுகிறார் என்று வழக்குத் தொடுத்ததின் பெயரில் கைது செய்யப்பட்டவர், இன்னும் சிறைச்சாலையில் இருக்கிறார். இது குறித்து கிறிஸ்தவக் கூட்டமைப்பின் செயலர் மீனாட்சி சிங், மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு எமது மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று கூறினார். டெல்லி மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் A.C. மைக்கேல், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் கிறிஸ்தவர்களை வதைக்கத்தான் என்று தோன்றுகிறது எனக் கூறினார். 200 இலட்சம் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 0.18 சதவீதமே உத்திரப்பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.