Antoine de Saint-Exupery (1900-1944) என்பவர் பிரெஞ்சு உயர் குடியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநர். இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய ‘குட்டி இளவரசன்’ (The Little Prince) என்ற குறுநாவல் திகழ்கின்றது. இது ஓர் அரிதான, அழகான, கருத்தாழமிக்க கற் பனைக் கதை. 1943-இல் வெளியான இந்த நூல், இதுவரை 173 மொழிகளில் வெளியாகி, 80 மில்லி யன் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.
வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில் வரும் சிறுவன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒரு நாள் நிகழ்ந்த சந்திப்பிற்குப் பின், அடுத்த நாள் சிறுவன் வந்ததும் நரி அவனிடம் உரிமையாய், ‘நீ நேற்று வந்த நேரத்திற்கே வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்’ என்று சொல்கிறது. ‘ஏன் நேரத்திற்கு வரவேண்டும்?’ என்று இளவரசன் நரியிடம் கேட்க, நரி சொல்லும் விளக்கம் அழகானது: ‘நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வாக இருக்க ஆரம்பித்து விடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால் என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்க முடியாதே’ என்று நரி சொன்னது.
மிகவும் விரும்புகின்ற நிகழ்வு நடப்பதற்கு முன்னர் ஒருவித மகிழ்ச்சி! எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு குடும்பத்தில் பிறக்கவிருக்கும் குழந்தை; நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து இல்லம் திரும்பும் கணவன்... என மனதுக்குப் பிடித்த நிகழ்வை அல்லது அந்த நபரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது!
ஆவலாய் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு நெருங்க நெருங்க மனம் மகிழ்வில் நிறைவதை நாம் அனைவரும் அனுபவித்திருக்கின்றோம். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில், இறைவன் ஒரு குழந்தையாய்ப் பிறக்கப் போவதை மகிழ்வுடன் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கின்றது.
உண்மையான மகிழ்ச்சி சின்னச் சின்ன நிகழ்வுகளில், எவ்வித ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ, விளம்பரமோ இன்றி நம்மை வந்தடைகின்றது என்பதைச் சொல்லித் தரும் விழா கிறிஸ்து பிறப்புப் பெருவிழா! குழந்தை இயேசுவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை நாம் ‘Gaudete Sunday’ அதாவது, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி என்பது, நீண்ட நாள் நல்வாழ்க்கைக்கான உணர்வு, அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த நிறைவு. அதைத்தான் நாம் அனைவரும் எல்லா நேரங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம். அதனை எப்போதும் தொடரவே விரும்புகின்றோம். ‘மகிழ்ச்சி’ என்ற உணர்வு இல்லாவிட்டால், வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும் என்றார் பெர்னாட்ஷா. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியில் தொடங்கும் ஓர் அற்புதப் பயணம். மகிழ்ச்சி இன்றி எந்த மாபெரும் சாதனையும் நடந்ததில்லை என்றார் தத்துவ மேதை எமர்சன்.
இன்றைய வழிபாட்டின் வருகைப் பல்லவி ‘ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார்’ (பிலி 4:4-5) என்று ஒலிக்கின்றது. இன்றைய பதிலுரைப் பாடலில் மீட்பரின் தாய் மரியா, ‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது’ (லூக் 1:47) என்று பாடுகிறார்.
கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்வு, கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும், பரிசுப் பொருள்களிலும் உள்ளது என்ற தவறான எண்ணங்களை வர்த்தக உலகம் நம்மீது திணிக்க முயல்கிறது. இல்லாத தேவைகளை உருவாக்கி, இன்னும் அதிகம், அதிகமாய்ப் பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்துமஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. ‘நான்’ என்ற உலகை நிறைப்பதே மகிழ்வு என்று சொல்லும் வர்த்தக, விளம்பர உலகின் பாடங்களுக்கு முற்றிலும் எதிராக, உண்மையான மகிழ்வு உள்ளத்திலிருந்து வருகிறது என்பதை இன்றைய ஞாயிறு வாசகங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இன்றைய முதல் வாசகம் (எசா 61:1-2அ,10-11) விடுதலை பற்றிய மகிழ்ச்சியான செய்தியை வழங்குகிறது. இப்பகுதி புதிய சீயோனைப் பற்றிப் பேசுகிறது. ‘சீயோன் அடிமைப்பட்டு, அழிந்து கிடந்த நிலை மாறி, புத்துயிர் பெற்று மேன்மை பெறும்’ என்று எசாயா பாடுகிறார். இஸ்ரயேல் மக்களின் எண்ணங்களும், பார்வைகளும் எருசலேம் நகர் மீதும், இறைவன் உறையும் இடமாகப் பலி செலுத்தி அவரோடு இணைந்திருந்த எருசலேம் ஆலயத்தின் மீதுமே இருந்தது. பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது இஸ்ரயேல் மக்கள் தங்கள் முன்னோர்கள் யாவே இறைவன்மீது கொண்டிருந்த இறை நெருக்க அனுபவத்தைத் தாங்கள் இழந்துவிட்டதாக உணர்ந்தனர். ஆண்டவர் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும், தங்களை மறந்து விட்டதாகவும் நினைத்தனர். இறைவனுக்கும், தங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி விட்டதால் கவலையால் இனிமேல் எதுவும் நல்லது நடக்காது என்ற மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டனர். இந்த எண்ணங்களோடு இருந்த அவர்களிடம், ‘கடவுள் விரைவில் வந்து உங்களை விடுவிப்பார்’ என்ற மகிழ்ச்சி செய்தியை இறைவாக்கினர் எசாயா இங்கு அறிவிக்கிறார். கடவுளுக்கும்-மக்களுக்கும் இடையில் உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது என்பதை எண்ணி கடவுளின் மக்கள் மகிழ்கின்றனர். இவர்களின் இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாயிருப்பவர் கடவுளே என்று உரைக்கிறார் எசாயா.
இறைவாக்கினர் எசாயாவைத் தொடர்ந்து, திருமுழுக்கு யோவானும் ‘விடுதலை’ எனும் மகிழ்ச்சியை வழங்கவிருக்கும் மெசியாவின் வருகையைப் பற்றி முன்னறிவிப்பதை இன்றைய நற்செய்திப் பகுதியில் (யோவா 1:6-8, 19-28) வாசிக்கின்றோம். மெசியா என்றால் ‘விடுதலை தரும் தலைவர்’ என்பது பொருள். தம்மை விடுவிக்கப் போகின்ற தலைவரின் வரவை யூத மக்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். ஜான் இர்க்கான், கலிலேயரான யூதா, தெயூதா, மெனாகெம் போன்ற பலரை மெசியா எனக் கருதி ஏமாந்து போயினர்.
இந்தச் சூழ்நிலையில் திருமுழுக்கு யோவான் வந்தபோது, அவர் ஒருவேளை மெசியாவாக இருப்பாரோ என எண்ணினர் (லூக் 3:15). இந்தப் பின்னணியில் ‘நீர் யார்’ எனக் கேட்டபோது, அவர் ‘நான் மெசியா அல்ல’ என மறுத்தார். ‘நீர்தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?’ என மக்கள் கேட்டபோது, அதற்கும் ‘இல்லை’ என மறுக்கிறார். தன்னைத் தேடி, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த போது, அத்தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பேரும், புகழும் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், தான் உலக மீட்பர் அல்ல; அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டுவது மட்டுமே தன் பணி என்பதைத் திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கூறினார். தன் தாய் வயிற்றில் இருந்தபோதே மீட்பரை அடையாளம் கண்டு பேருவகையால் துள்ளிய திருமுழுக்கு யோவான், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதில் மகிழ்ச்சி அடைகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒருவர் மற்றவர்களுக்காகச் செபிப்பவர்களாக இருக்கவும், மகிழ்வோடு வாழவும், அதே வேளையில் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றியுள்ளவர்களாக இருக்கவும் அறிவுரை தருகிறார் திருத்தூதர் பவுல். இறை வேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு இருப்பதற்கும் நாம் நேரம் செலவழிக்கும்போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம் வாழ்வில் வெள்ளமென பாய்ந்தோடுகிறது.
ஆண்டவரில் பெருமகிழ்ச்சி அடையும் இறைவாக்கினர் எசாயா, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதில் மகிழ்ச்சிகொள்ளும் திருமுழுக்கு யோவான், கிறிஸ்துவின் வருகைக்காக எப்போதும் தயாராக இருக்கச் சொல்லும் பவுல் என அனைவருமே ஆண்டவரில் மகிழ்ச்சிகொள்கின்றனர். உண்மையான மகிழ்ச்சி என்பது உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது எனப் போதித்தனர்.
‘திரு அவை மகிழ்ச்சியின் இடமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லும் திருத்தந்தை பிரான்சிஸ், தான் எழுதிய இரண்டாவது திருத்தூது கடிதமான ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ என்ற ஏட்டில், ‘நற்செய்தி என்பது மகிழ்ச்சி கொணர்கின்ற செய்தி மட்டுமல்ல; அதை அறிவிப்பவர்களும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றார். மேலும், மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கொணர்கின்ற செய்தியானது மனிதர்களைத் துன்பத்திலிருந்தும், சோகத்திலிருந்தும் விடுவிக்கின்ற சக்தியாக மாற வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
மெசியாவின் வருகையைக் காண, அவர் தரும் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
● ஒருவர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமெனில் தன்னிலை அறிதல் மிக அவசியம். என்னுடைய அழைப்பு எத்தகையது? எனது எல்லைகள் எவை? நான் யார்? எனது குறைகள், பலவீனங்கள் எவை? என்பதையெல்லாம் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். திருமுழுக்கு யோவான் தான் யார் என்பதை முழுமையாக அறிந்திருந்தார் (தன்னிலை அறிதல் அவசியம்).
● ‘அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை’ எனும் அவரது தாழ்மையே அவரது மகிழ்ச்சிக்கான காரணம். தலைக்கனம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியை இழந்துவிடுவர் (தாழ்ச்சியோடிருத்தல் அவசியம்).
● ஒருவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொள்ள வேண்டுமெனில், திருத்தூதர் பவுல் அறி வுறுத்துவதுபோல, இறைத் தூண்டுதல்களை ஏற்று வாழவேண்டும்; எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்ய வேண்டும்; எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலக வேண்டும் (நன்மையைத் தெரிதல் அவசியம்).
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம் இல்லங்களில் உயர்த்திக் கட்டும் விண்மீன்களைப் போல, நம்மிடம் ஒளிரும் உண்மையான மகிழ்வு, அனைவருக்கும் இறைவனை அடையாளம் காட்டும் மகிழ்வாக அமைய இறைவனிடம் மன்றாடுவோம்.