தினமும் என்னைக் கவனி’ எனும் மூன்றெழுத்துக் கவிதை நம்மில் பலரும் அறிந்ததே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில், அடுத்தவர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் பலவகைகளில் நமது வெளிப்புறத் தோற்றத்தை அழகுபடுத்துவதிலும், நம்மைத் தனித்துவமாகக் காட்டுவதிலும் ஆற்றலைச் செலவிடுகின்றோம். உதாரணமாக, இயற்கையான நம் முகங்களில் செயற்கையான அலங்காரப் பொருள்களைக் கொண்டு அழகுபடுத்துகின்றோம். மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான உடைகளை உடுத்துகின்றோம். சில சமயங்களில், பொது இடங்களில், நாம் பேசும்போது கூட, அடுத்தவரின் கவனம் நம்மீது விழுவதை உறுதி செய்து கொண்டு சத்தமாகப் பேசுகின்றோம். இதுபோன்ற செயல்பாடுகள் எல்லாமே பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அறிந்தும், அறியாமலும் செய்கின்றோம்.
கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடவிருக்கும் நமக்கு, இந்தக் கிறிஸ்துமஸ் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம், ‘இயேசு நம்மைக் கண்டுகொள்கிறார்’ என்பதே. அவர் நம்மைக் கண்டுகொண்டதன் விளைவே, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டது (மத் 2:21). இன்று நமது குடும்பங்களிலும், சமுதாயத்திலும் ஒருவர் மற்றவரைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே, அவை அழிவுக் குழியில் மூழ்கி கிடப்பதற்கானக் காரணிகளாகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இயேசு நம்மைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், நமக்கு மீட்பு என்பது ஒரு கேள்விக் குறியே! எனவே, நாம் நமக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், கவனிப்பும், நமது குடும்பங்களில் உள்ளவருக்கும், நாம் சார்ந்த சமுதாயத்தில் உள்ளவருக்கும் கொடுக்கிறோமா எனச் சிந்தித்து, செயல்பட திருவருகைக்காலம் நம்மை அழைக்கிறது.
உறவுகளின் உன்னதக் கோவிலே குடும்பம். சக மனிதர்களை மதிக்கக் கற்றுத்தரும் பண்பாட்டுக் கூடம் அது. உறவுகளால் பாசத்தைக் கோர்த்துக் கட்டப்பட்ட மாலை அது. உண்மையான அன்பையும், உறுதியான மற்றும் வளமான வாழ்வை வாழவும் நமக்குக் கற்றுத் தருவது குடும்பமே! வழிதவறிச் செல்கின்றபோது வழிநடத்தும் ஒளி விளக்காகவும், கலங்கரைத் தீபமாகவும் அது செயல்படுகிறது. இத்தகைய குடும்பங்களின் தொகுப்பே சமூகமாகும். சமூகத்தின் தொகுப்பே உலகமாகும். பல சமயங்களில் ஓர் எடுத்துக்காட்டான குடும்பத்தைக் கட்டியெழுப்ப முடியாமல், அவை சிதறிப் போவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது ‘கண்டுகொள்ளாமையே.’
கண்டுகொள்ளாமை என்பது ஒரு தனிநபரையோ அல்லது குழுவையோ மற்றொரு தனிநபர் அல்லது குழுவைச் சார்ந்தவர்கள் முழுமையாக அவர்களின் தேவையை அறிந்தும், அதற்குத் தகுந்த பதிலிறுப்பை அளிக்காமலும், பார்த்தும் பார்க்காமலும், அவர்களை ஒதுக்குவதாகும்.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் தேவைகளுக்கேற்ப அவர்கள் வெற்றியடையும்போது பாராட்டாமலும், தோல்வியடையும்போது தோள் கொடுக்காமலும், தவறிழைக்கும்போது தவற்றைச் சுட்டிக்காட்டாமலும், வழி தவறும்போது வழியைக் காட்டி நெறிப்படுத்தாமலும் இருப்பதே கண்டுகொள்ளாமை. இவையனைத்தும், குடும்பத்தில் நிம்மதியற்ற வாழ்விற்கும், சண்டைச் சச்சரவிற்கும், அறநெறி பிறழ்ந்த வாழ்விற்கும் காரணமாக அமைந்து, விரைவில் அப்படிப்பட்ட குடும்பமே பிரிந்து போகவும் வழி செய்கின்றன.
தூக்கியெறியும் பண்பாடு, அதாவது, தன்னுடைய சுய தேவைக்காக மற்றவர்களைப் பொருளாகப் பயன்படுத்தும் எண்ணம், பல்வேறு வேலைப் பளுவால் முடங்கிக் கிடக்கும் கணவனும்-மனைவியும் ஒருவர் மற்றவரைக் கண்டுகொள்ளாமல் வாழ்வதும், பிள்ளைகள் தவறுகள் செய்யும்போது, கண்டுகொள்ளாமல் இருப்பதும் இன்று எதார்த்தமாகிப் போனது.
இத்தகைய சூழலில், யோசேப்பு அன்றே இறைத் திட்டத்தைக் ‘கண்டுகொண்டு’ அதன்படி வாழ்ந்தார் என்கிறது திருவிவிலியம். யோசேப்பு, கடவுள் தனக்குக் கனவில் (மத் 2:24) அளித்த திட்டத்தைக் கண்டுகொண்டு அறிந்து செயல்படுகிறார். ஆண்டவருடைய தூதர் தனக்குக் கூறியவற்றை நிறைவேற்றுகிறார் (மத் 2:19). கடவுளின் திட்டம் நிறைவேற யோசேப்பு, உலகம் தன்னைப் பார்க்கும் பார்வையைப் பொருட்படுத்தாமல், கடவுளின் திட்டத்தைக் கண்டுகொண்டு அதை நிறைவேற்றுகிறார்.
‘மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாத யோசேப்பு’ (மத் 2:19) தவறே செய்யாத மரியாவோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இணைந்து வாழ்கிறார். இன்றைய குடும்பங்களில் தனது கணவனோ, மனைவியோ சிறு தவறுகள் செய்ய நேரிடும்போது, அவற்றைப் பெரிதுபடுத்தி, நான்கு சுவர்களுக்குள் முடிக்க வேண்டிய பிரச்சினைகளை, ஊரறிய பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றோம். தவறுவது மனித இயல்பு என்பதை மறந்தவர்களாய், மற்றவர் தீயவர், பாவி என்று தீர்ப்பிடுவதில் முந்திக் கொள்கின்றோம்.
யோசேப்பு தொடர்ந்து குழந்தை இயேசுவோடும், மரியாவோடும் உடனிருக்கிறார் (மத் 2:13,14, 20,23). உடனிருப்பு என்பது பிறரைக் கண்டுகொள்கிறோம் என்பதாகும். யோசேப்பு, குழந்தையையும், அதன் தாயையும் கண்டுகொண்டு, அவர்களோடு உடன் பயணித்து, தனது உடனிருப்பை எண்பிக்கிறார். இன்றைய பல குடும்பங்களில் உடனிருப்பில்லாமல், பலர் இருந்தும் தனிமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குடும்பத்தில் ஒருவர் துன்பத்தில் வாடும்போது அவர்களோடு உடனிருத்தல் அவசியம் என்பதை மறந்துவிடுகின்றோம்.
மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறியது, மரியா இறைத்திட்டத்தைக் கண்டுகொண்டார். அதனால், பிறரின் மீட்பிற்காக உலகிற்கே தாயாகிறார். பிறருக்காக என்னையே நான் எந்த அளவிற்குக் கரைக்கிறேன் என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகிறார் மரியா. கிறிஸ்து பிறப்பில் யோசேப்பு மற்றும் மரியாவின் பங்களிப்பு இறைத்திட்டத்தை நம்மில் நாம் எந்த அளவு கண்டு கொள்கின்றோம் என்பதைச் சிந்திக்க அழைக்கிறது.
‘அன்பின் மகிழ்ச்சி’ எனும் மடலில், எண் 1-இல் ‘குடும்பங்கள் அனுபவிக்கும் அன்பின் மகிழ்வே திரு அவையின் மகிழ்வு’ எனக் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, குடும்பத்திலும் சக மனிதர்களை மதிக்கவும், உறவுகளைப் பேணிக்காக்கவும், உண்மையான அன்பையும், உறுதியான மற்றும் வளமான வாழ்வை வாழவும், வழிதவறிச் செல்கின்றபோது வழிநடத்தும் கலங்கரை ஒளியாகவும், இன்பத்தையும் துன்பத்தையும் பகிரவும், தோள் கொடுத்துத் தூக்கிவிடவும் துணை நிற்போம். இவையனைத்தும் குடும்பத்தில் சரியாக அமைந்ததென்றால், நாம் வாழும் இந்தச் சமுதாயமும் ஒரு புதிய மாற்றுச் சமுதாயமாக மாறும். அத்தகைய மாற்றுச் சமுதாயத்தைப் படைப்பதே கிறிஸ்து பிறப்பு நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.