Namvazhvu
25, டிசம்பர் 2023 ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா (எசா 9:2-4,6-7 தீத்து 2:11-14; லூக் 2:1-14)
Thursday, 21 Dec 2023 04:56 am
Namvazhvu

Namvazhvu

வியப்பின் இடங்களில் குடியிருக்கும் இறைவன்!

விண்ணில் வாழும் கடவுளின்

சின்னச் சின்ன விருப்பங்கள்

மண்ணிலே முத்தமிட்ட

வியப்பூட்டும் நாள்தான்

கிறிஸ்துமஸ்!’

ஜேக்கப் கிரிம் மற்றும் வில்லெம் கிரிம் எனும் இரு ஜெர்மானிய மொழியியலாளர்கள் (கிரிம் சகோதரர்கள்) பழைய நாட்டுப்புறக் கதைகளையும், தேவதைக் கதைகளையும் சேகரித்துக்கிரிம்மின் தேவதைக் கதைகள்என்ற பெயரில் வெளியிட்டனர். இக்கதைகளின் முதல் தொகுப்பு 1812-ஆம் ஆண்டுகுழந்தைகள் மற்றும் வீட்டுக் கதைகள்என்ற பெயரில் வெளியானது. 200 கதைகள் கொண்டிருந்த இத்தொகுப்பில் இன்றளவும் உலகெங்கும் புகழ் பெற்று விளங்கும் கதைகளுள் ஒன்றாகத்தவளை இளவரசன்’ (The Frog Prince) கதை இடம்பெறுகிறது. இக்கதையில், ஓர் அழகான இளவரசி அழகில்லாத ஒரு தவளையை முத்தமிடுகிறார். உடனே அத்தவளை அழகான ஓர் இளவரசனாக மாறுகிறது. ‘Sesame Streetஎன்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் இக்கதை மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது, அத்தவளையை இளவரசி முத்தமிட்டதும், அவர் ஒரு தவளையாக மாறிவிடுகிறார். இறைவன் மனுக்குலத்தை முத்தமிட்டதால், அவரே நம்மில் ஒருவராக மாறியதைக் கொண்டாடும் விழாதான் கிறிஸ்துமஸ் பெருவிழா.

கடவுள் மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ (யோவா 1:14). கடவுள் தூரமாக இல்லை; அவர் தாம் இம்மானுவேல் - ‘கடவுள் நம்மோடு’. அவர் அந்நியர் அல்லர்; அவருக்கு முகம் உண்டு; அதுவே இயேசுவின் முகம். கிறிஸ்து பிறப்புச் செய்தி என்பது வெறும் ஓர் அறிவிப்பல்ல; இது ஒரு நிகழ்வு; அன்றாடம் நம்மில் நடக்கும் வியப்புக்குரிய நிகழ்வு!

கடவுள் வியப்புகளின் ஆண்டவர். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி நம்மை வியப்புகளில் ஆழ்த்துபவர் நம் கடவுள்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்பமோ, துன்பமோ மனிதரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதை நாம் கண்டும், அனுபவித்தும் வருகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கடவுள் பெத்லகேமில் மனித உரு எடுத்த அந்த வரலாற்று நாளிலும் வியப்புகள் நடந்தேறின. இரவெல்லாம் தங்கள் கிடைகளுக்குக் காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்கள், இயேசு பிறந்த செய்தியை முதலில் அறிந்தனர். வானில் தோன்றிய அற்புத விண்மீனால் வழிநடத்தப்பட்டு மூன்று கீழ்த்திசை ஞானிகள் பெத்லகேம் நோக்கி வந்து குழந்தை இயேசுவைத் தரிசித்துச் சென்றனர். இப்படி இயேசு பிறந்த நேரம் முதல் இன்றுவரை வியப்புகள் தொடர்கின்றன.

கிறிஸ்து பிறப்பு விழாவைப் பொருளுள்ள வகையில் சிறப்பிக்க வேண்டுமெனில், வியப்பின் இடங்களில் குடியிருக்கும் இறைவனைக் கண்டு அனுபவிக்க இந்தப் பெருவிழா நம்மைப் பாசத்தோடு அழைக்கின்றது. நம் அன்றாட வாழ்வில் இந்த வியப்பின் இடங்கள் எவை? முதல் இடம், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள்; இரண்டாவது, வியப்பின் இடம் நாம் வாழும் குடும்பம்; மூன்றாவது, நம் திரு அவை. நாள்தோறும் இறைவன் நம்மைத் தேடி வருகின்றார்; நம் இதயத்தில் இடம் தேடி வருகின்றார். ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது. தமது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார். தம்மையே தாழ்த்தி ஏழ்மை வடிவம் பூண்டு, இறைமகன் மனிதர் ஆனார். ‘ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்’ (எசா 9:6) என்ற வார்த்தைகளின் பொருளை இடையர்கள் உணர்ந்துகொண்டனர். ‘குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்’ (லூக் 2:12) என்று வானதூதர் கூறியதை அவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டனர்.

வானதூதரின் வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாக, இறைவனின் மாட்சியைச் சாதாரண கண்களால் கண்டு இடையர்கள் தியானித்தனர். நகர்களில் இடமற்ற மற்றும் விருந்துகளுக்கு அழைக்கப்படாத சாதாரண இடையர்களுக்கு, இயேசுவின் பிறப்பு முதலில் அறிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள் மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்; சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்டவர்கள். பாவிகளாகவும், பிற இனத்தவர்களாகவும், வேற்றுக் குடியினராகவும் கண்ணோக்கப்பட்ட இவர்களுக்கே நற்செய்தியைக் கொணர்கிறார் வானதூதர். ஆம், நம் அன்றாட வாழ்வில் வியப்பின் அடையாளங்களாக இருப்பவர்கள் நம்முடன் வாழும் எளிய மனிதர்கள்!

இயேசுவின் பிறப்பிலிருந்து ஒவ்வொரு மனிதரின் முகமும் இறைமகனின் சாயலைத் தாங்கியுள்ளது. இந்தச் சாயலைக் குறிப்பாக ஏழைகளின் முகத்தில் காண்கிறோம். காரணம், கடவுள் இந்த உலகில் ஏழையாக வந்தார். ஏழைகள் தம்மை முதலில் பார்க்க அனுமதித்தார். எனவே, ஏழ்மை, எளிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை இவற்றில்தான் ஏழையாகப் பிறந்த இயேசுவைக் காண முடியும்.

இன்று செல்வங்கள், பெருமைகள், அதிகாரங்கள் ஆகியவை மத்தியில் இறைவனைக் காண முடியாது. உண்மையில் ஏழையாக மாறாதவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட முடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தான் மட்டுமே தனக்குப் போதும் என்ற மமதையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. மாறாக, இறைவனை ஏறக்குறைய மறைவான வழியில், அதிகத் தேவையில் இருப்பவர், நோயாளர், பசியாய் இருப்பவர் மற்றும் சிறையில் இருப்பவரில் காண முடியும் என்பதே இவ்விழா நமக்குத் தரும் முதல் பாடம்.

கடவுள் குடிகொண்டிருக்கும் இரண்டாவது வியப்பின் இடம் நம் குடும்பம். கிறிஸ்து பிறப்பு, ஓர் அழகான குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு. சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வு. தயங்கிய யோசேப்பு, தளரா மனம் கொண்ட மரியா, இவர்களின் குடும்பச் சவால்களில் ஒருமித்த பங்கெடுப்புதான் இந்தக் கிறிஸ்து பிறப்பு. இயேசு ஒரு மாளிகையில் ஓர் இளவரசிக்கு மகனாகப் பிறக்கவில்லை; ஆனால், உரோமைப் பேரரசின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய இளம் பெண்ணுக்கு, தாழ்மையில் வந்து பிறந்தார். மரியா கருவுற்றிருந்தது குறித்துப் புறணிகளும், பழிச் சொற்களும் சூழ்ந்திருந்த நிலையில், புனித யோசேப்பு, மரியாவைத் தனது மனைவியாக ஏற்று, மிகவும் தாழ்ச்சியுடன் செயல்பட்டார்.

தாழ்ச்சியே வளம் நிறைந்த நம் குடும்ப வாழ்வுக்கு அவசியம். இறைவனின் வல்லமையை உணர்வதற்கு நாம் தாழ்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும். ‘தான்என்ற அகந்தை கொண்டோர் வாழ்வில், இறைவன் வளமையை உருவாக்க இயலாது. கிறிஸ்து பிறப்பு விழாதன்னால் ஆவது ஒன்றுமில்லை; ஆனால், இறைவனால் எல்லாம் ஆகும்என்று நம்பும் தாழ்ச்சி நிறைந்த மனத்தை நமக்குள் உருவாக்குகிறது என்பதை ஒவ்வொரு குடும்பமும் உணர வேண்டும். குடும்பம் என்று குறிப்பிடும்போது அவரவர் தங்கள் நெருங்கிய குடும்பங்களையும், உறவுகளையும் மட்டும் எண்ணிப் பார்க்காமல், அந்த வட்டத்தைக் கடந்து, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரையும் தங்கள் குடும்பம் என்று ஏற்றுக்கொள்ளும் எளிய இதயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இவ்விழா நமக்கு வழங்கும் இரண்டாவது பாடம்.

மூன்றாவதாக, வியப்பின் இடமாக இருப்பது நம் திரு அவை. ‘திரு அவையை ஒரு சமய நிறுவனமாக நோக்காமல், ஒரு தாயாக நோக்க வேண்டும்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல்  சுடர் ஒளி உதித்துள்ளது’ (எசா 9:2) எனும் எசாயாவின் வாக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த ஒளி சாதாரண ஒளி அல்ல; மாறாக, ஒரு சிறப்பான ஒளி! யாருக்காக இறைமகன் பிறந்தாரோ, அவர்களை நோக்கிய, அதாவதுநம்மைநோக்கிய ஒளி. இதுவே, ‘முதல் கிறிஸ்துமஸ் ஒளி’.

நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், யோவானும் இயேசுவை ஒளியாகக் காண்கிறார்கள் (காண். மத் 4:15-16; யோவா 1:9). எங்கும் இருள் நிறைந்திருந்த வேளையில், ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மை ஒளி, நாசரேத்தூர் மாட்டுத் தொழுவத்தில் ஒளிர்ந்தது. இவ்வொளியின் தொடர்புக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்களே ஒளியாக மாறுகின்றனர். இதுவே திரு அவையின் வரலாறு. எளிமையான வகையில் பெத்லகேம் குடிலில் தன் பயணத்தைத் துவக்கிய திரு அவை இன்று, மனித குலத்தின் ஒளியின் ஆதாரமாக மாறியுள்ளது. கடவுளின் அன்பை வரவேற்கும்நாம்என்பது எங்கெங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் துன்பகரமான சூழல்களில்கூட இறைவனின் ஒளி ஒளிர்கின்றது.

தன்னை நிறுவியவரின் அழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளராய் இருக்கும் திரு அவை, பெத்லகேமில் பிறந்த குழந்தை வழியாகக் கடவுள் நம்மைச் சந்திக்க வந்து, நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்வின் பங்கீட்டாளர்களாக மாற்றுகிறது. அவரைக் கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்கும்நாம்’ (திரு அவை) தாகமுற்றிருப்போரை, அந்நியரை, உடையின்றி இருப்போரை, நோயாளிகளை, கைதிகளை அவரில் ஏற்று அரவணைக்கத் தயங்கக்கூடாது. நம் கதவுகளைத் தட்டும் அந்நியரிலும் அவர் இருக்கிறார். உதவி நாடி வருவோரைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இதைத்தான் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பாலும் கூறினார்: ‘அஞ்சாதீர்கள். கிறிஸ்துவுக்கென உங்கள் கதவுகளைத் திறந்து வையுங்கள்!’ மூடப்பட்ட கதவுகளால் ஏமாற்றமடைந்திருக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக மாறுவோம். ‘வறியோருடன், வறியோருக்கென வாழும் வறியத் திரு அவையை விரும்புகிறேன்எனும் திருத்தந்தை பிரான்சிஸின் வரிகளை இங்கே நினைவுகூர்வோம். பெத்லகேமில் பிறந்த சின்னக் குழந்தையின் அழுகை நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்துத் திரு அவை தம் கண்களைத் திறக்க வேண்டும் என்பது இவ்விழா நமக்கு வழங்கும் மூன்றாவது பாடம்.

அன்புமிக்கவர்களே! ‘கிறிஸ்துமஸ் கடவுள்நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல வியப்புகளை வழங்கி, வாழ்க்கை பற்றிய பல உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் இன்னுமொரு வாய்ப்பு இருக்கும். ஆனால், இன்னுமொரு வாழ்க்கைக்கு வாய்ப்பு ஒரு போதும் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து, கிறிஸ்துமஸ் ஒளியை இதயத்தில் ஏற்றுவோம். அடுத்த நொடியைக்கூட நம்மால் ஆள முடியாது என்பதே அவ்வப்போது நிகழும் இயற்கைப் பேரிடரும், திடீர் நிகழ்வுகளும் நமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம். அப்படியிருக்கும்போது, தேவையற்ற குப்பைகளை நம் இதயத்தில் குவித்து வைக்காது, அன்பை நிறைக்கின்ற, பிறர் பற்றி நினைத்து வாழும்கிறிஸ்துமஸ் இதயம்கொண்டு வாழ்வோம்.

இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த டிசம்பரில் மட்டும் சிறப்பிக்கப்படும் விழாவாக அமையாமல், எல்லாக் காலங்களிலும் நாம் செய்யும் செயல்களும், நாவின் பேச்சுகளும் கிறிஸ்துமஸ் இதயத்தை வெளிப்படுத்துவதாய் அமையட்டும். இந்த விழாவைக் கொண்டாட இயலாமல் மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், புலம்பெயர்ந்தவர் முகாம்களிலும் உள்ளவர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்க்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் நம் கிறிஸ்துமஸ் இதயத்தைக் கொடுப்போம். நாள்தோறும் வியப்பின் அடையாளங்கள் நம்வழி தொடரட்டும்!

அனைவருக்கும்

வியப்பின் கிறிஸ்துமஸ்வாழ்த்துகள்!