Namvazhvu
கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ்?
Thursday, 21 Dec 2023 10:47 am
Namvazhvu

Namvazhvu

எல்லா மதங்களிலும் மனிதன் இறைவனைத் தேடிச் செல்கின்ற நிலைப்பாட்டையே காண்கின்றோம். ஆனால், கிறிஸ்தவத்தில்தான் இறைவன் மனிதனைத் தேடி வருகின்ற வினோதத்தைப் பார்க்கின்றோம். இது ஆச்சரியமான, அபூர்வமான ஒரு நிகழ்வாகும். இறைவன் மனிதனைத் தேடி வந்தது - இறைவனே மனிதனாக இந்த மண்ணில் வந்து பிறந்தது உண்மையில், “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”தான் (லூக் 2:10).

‘இயேசு’ என்ற பெயருக்கு, ‘அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு விடுதலையையும், மீட்பையும் அருள்வார்’ என்பது பொருளாகும். அவர் அவதரித்தது “துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்று கூறப்படுவது போன்ற “கெட்டவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக” அல்ல; மாறாக, “பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது (திமொ 1:15). பாவத்திலும், சாபத்திலும் மூழ்கியிருந்த மனிதனை மீட்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஆகவே, கிறிஸ்துமஸ் என்பது இரட்சிப்பின் விழா; மீட்பின் விழா; விடுதலையின் விழா; புறக்கணிப்பும் இவ்விழாவிலே ஒளிந்திருக்கும் ஒரு பேருண்மை!

மன்னவன் ஒருவன் மக்களைத் தேடி வந்தான். மக்களோ அவனைப் புறக்கணித்தனர். இறைவனும் மனிதனாகப் பிறக்க வந்தார். அவர் பிறக்க மனிதன் இடம் கொடுக்கவில்லை. அவர் மாடுகள் அடையும் கொட்டிலில், எளிமையின் கோலத்தில், புறக்கணிப்புகள் மத்தியிலே பிறக்கின்றார். உலகைப் படைத்த இறைவனுக்கு உலகில் பிறக்க சரியான இடம் கிடைக்கவில்லை. ஆம், கிறிஸ்துமஸ் விழா ஒரு புறக்கணிப்பின் விழா!

“ஓளி உலகத்திற்கு வந்தது; ஆனால், உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:10-11) என்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

மனிதன் இறைவனைப் புறக்கணித்தாலும், அந்த இறைவனோ மனிதனை விடுவதாக இல்லை. இறைவன் மனிதரிடையே குடிகொண்டார். “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1:1) என்கிறார் யோவான் நற்செய்தியாளர். கடவுள் தன்மையில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. மாறாக, தம்மையே வெறுமையாக்கி மனிதருக்கு ஒப்பானார்” எனப் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில் புனித பவுல் குறிப்பிடுகின்றார்.

‘கடவுள் எந்த அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்தார்?’ என்ற கேள்வியை எழுப்பும்போது, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பும் அளவுக்கு அவர் இந்த உலகத்தை அன்பு செய்தார் என்பதே விடையாகும். “தமது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது” (1யோவா 4:9) என்பார் நற்செய்தியாளர் யோவான்.

“கடவுள் நம்மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடே கிறிஸ்துவின் மனுவுடலேற்பு” என்றார் புனித அகுஸ்தினார்.

‘தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது

யூத நிலத்தினிலே

சத்திய வேதம் நின்று நிலைத்தது

தாரணி மீதினிலே

எத்தனை உண்மைகள் வந்து பிறந்தது

இயேசு பிறந்ததிலே

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது

இயேசுவின் வார்த்தையிலே’

என்றே இயேசு காவியத்தை நிறைவுசெய்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

ஆம், இயேசுவின் பிறப்பிலே எத்தனையோ உண்மைகள் வந்து பிறந்தன!   இயேசு கொண்டு வந்த அன்பை, அமைதியை, மீட்பை, இரட்சிப்பை, விடுதலையை அனுபவிப்பதும், அதைக் கொண்டாடுவதும்தான் கிறிஸ்துமஸ் விழா. இங்கே இரண்டு விசயங்கள் நமது அவதானத்திற்குரியன. ஒன்று, அனுபவிப்பது; மற்றது, கொண்டாடுவது. முதலாவது நடைபெற்றால்தான், இரண்டாவதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஆனால், அந்தோ பரிதாபம்! இன்றைய உலகின் நடைமுறை என்ன? கிறிஸ்து கொண்டு வந்த மீட்பை, இரட்சிப்பை அனுபவிக்காமல் வெறும் கொண்டாட்டங்களோடு கிறிஸ்துமஸ் விழா வழக்கம்போல, பழக்கதோசமாக வருடாந்திர நிகழ்வாக நிறைவு பெற்று விடுகின்றது!

கிறிஸ்துமஸ் விழாவின் அடிப்படையை மறந்து விட்டு, இயேசு கொண்டு வந்த பாவ மன்னிப்பின் அனுபவத்தை, புதுவாழ்வு அனுபவத்தை மறந்து விட்டு வெற்று ஆடம்பரங்களிலும், கொண்டாட்டங்களிலும் மட்டும் மூழ்கிவிடுவது என்பது கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ் விழாவாகவே அமையும்.

கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ் விழாவா? சிந்திப்போம், செயல்படுவோம்.