(சென்ற இதழ் தொடர்ச்சி)
3. யூபிலி கி.பி. 2025: தயாரிப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, 2024-ஆம் ஆண்டுகளைத் தயாரிப்பு ஆண்டுகள் எனவும், 2025-ஆம் ஆண்டு கொண்டாட்ட ஆண்டு எனவும் வரையறுத்துள்ளார். 2023-ஆம் ஆண்டு ‘சங்க ஏடுகள் கற்றல் ஆண்டு’ எனவும், 2024-ஆம் ஆண்டு ‘இறைவேண்டல் ஆண்டு’ எனவும், 2025-ஆம் ஆண்டு ‘திருப்பயண ஆண்டு’ எனவும் அழைக்கப்படுகிறது.
அ) 2023 - சங்க ஏடுகள் கற்றல் ஆண்டு
கற்றல் ஆண்டில், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் முதன்மையாக இருக்கிற நான்கு கொள்கைத் திரட்டுகளைக் கற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம். மேலும், சங்கம் மொழிந்த மாற்றத்தின் கூறுகளை அறிந்துகொள்ளவும், உள்வாங்கவும், கடவுள் திரு அவை, உலகம் பற்றிய புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ளவும் இந்த ஆண்டு நம்மை அழைக்கிறது.
‘தேயி வெர்பும்’ (ஆங்கிலத்தில், ‘கடவுளின் வார்த்தை’). இறைவெளிப்பாடு பற்றிய கொள்கைத் திரட்டு. நவம்பர் 18, 1965 அன்று வெளியிடப்பட்டது. திருவிவிலியத்திலும், திருமரபிலும், உள்ள இறைவெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளுதல். இறைவெளிப்பாட்டுக்கு மாந்தர்கள் அளிக்கும் பதிலிறுப்பே நம்பிக்கை. இந்த ஏட்டில் ஆறு அலகுகள் உள்ளன: 1) இறைவெளிப்பாடு; 2) மரபு; 3) இறைத்தூண்டுதல்; 4) பழைய ஏற்பாடு; 5) புதிய ஏற்பாடு மற்றும் 6) திரு அவையில் திருவிவிலியத்தைப் பயன்படுத்துதல்.
‘சாக்ரோசாங்த்தும் கொன்சிலியும்’ (ஆங்கிலத்தில் ‘திருச்சங்கம்’). திருவழிபாடு பற்றிய கொள்கைத் திரட்டு டிசம்பர் 04, 1963 அன்று வெளியிடப்பட்டது. திரு அவை வாழ்வில் திருவழிபாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது இந்த ஏடு. திரு அவைச் செயல்பாடுகளின் ஊற்றும், உச்சமுமாக இருப்பது திருவழிபாடு என மொழிகிற இந்த ஏடு, நம்பிக்கையாளர்கள் திருவழிபாட்டின் வழியாக கிறிஸ்துவின் மறைபொருளில் பங்கேற்கும் முறைகளை எடுத்துரைக்கிறது. இந்த ஏடு ஏழு அலகுகளைக் கொண்டுள்ளது:
1) திருவழிபாட்டைப் புதுப்பிக்கவும், வளர்க்கவும் உதவுகிற அடிப்படையான வழிகாட்டுதல்கள்; 2) நற்கருணையின் புனிதமான மறைபொருள்; 3) மற்ற அருளடையாளங்களும், அருள்கருவிகளும்; 4) திருப்புகழ்மாலை; 5) திருவழிபாட்டு ஆண்டு; 6) திரு இசை மற்றும் 7) திருக்கலையும், திருவழிபாட்டுப் பொருள்களும்.
‘லூமன் ஜென்ஷியும்’ (ஆங்கிலத்தில் ‘மக்களின் ஒளி’). திரு அவை பற்றிய கொள்கைத் திரட்டு. நவம்பர் 21, 1964 அன்று வெளியிடப்பட்டது. திரு அவையின் தான்மை மற்றும் அடையாளத்தை எடுத்துரைக்கும் இந்த ஏட்டில் எட்டு அலகுகள் உள்ளன: 1) திரு அவையின் மறைபொருள்; 2) இறைமக்கள்; 3) திரு அவையின் படிநிலையும், ஆயர் பணியும்; 4) பொதுநிலையினர்; 5) திரு அவையில் அனைவருக்கும் விடுக்கப்படும் தூய்மைக்கான அழைப்பு; 6) துறவியர்; 7) விண்ணகத் திரு அவையோடு ஒன்றித்த திரு அவையின் பயணம் மற்றும் 9) கிறிஸ்துவின் மறைபொருளிலும், திரு அவையின் மறைபொருளிலும் கடவுளின் தாய் புனித கன்னி மரியா!
‘கௌதியும் எத் ஸ்பெஸ்’ (ஆங்கிலத்தில் ‘மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்’). இன்றைய உலகில் திரு அவை பற்றிய மேய்ப்புப்பணி கொள்கைத் திரட்டு. டிசம்பர் 7, 1965 அன்று வெளியிடப்பட்டது. ‘காலத்தின் அறிகுறிகளை’ நற்செய்தியின் ஒளியில் கண்டுணர்ந்து பதிலிறுப்புச் செய்ய இறைமக்களை அழைக்கிறது இந்த ஏடு. மானிடர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றிய முன்னுரையோடு தொடங்குகிற இந்த ஏடு இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: 1) திரு அவையும் மனிதரின் அழைப்பும் (மனித மாண்பு, மானுடக் குழுமம், இவ்வுலகில் மாந்தர்களின் செயல்பாடு, இன்றைய உலகில் திரு அவையின் பணி); 2) அவசரமான சில பிரச்சினைகள் (திரு மணம் மற்றும் குடும்பத்தின் மேன்மையைப் போற்றுதல், கலாச்சார வளர்ச்சி, பொருளாதார-சமூக வாழ்க்கை, அரசியல் குழுமத்தின் வாழ்க்கை, அமைதியைப் பேணுதல், நாடுகளுக்கு இடையேயோன ஒன்றிப்பை மேம்படுத்துதல்).
மறைபரப்புப் பணிக்கான திருப்பேராயம் (Dicastery for Evangelization) மேற்காணும் நான்கு கொள்கைத் திரட்டுகளின் பின்புலத்தையும், மையக் கருத்துகளையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் 35 புத்தகங்களை (35 Council Notebooks) வெளியிட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மற்ற ஏடுகள்:
அறிக்கைகள்: ‘க்ராவிஸ்ஸிமும் எதுகாஷி யோனிஸ்’ (கிறிஸ்தவக் கல்வி), ‘நோஸ்த்ரா எத்தாதே’ (பிற சமயங்களோடு திரு அவையின் உறவு), ‘திக்னிதாதிஸ் உமானே’ (சமயச் சுதந்திரம்). ஆணைகள்: ‘ஆத் ஜென்த்தஸ்’ (திரு அவையின் மறைப்பணி), ‘ப்ரெஸ்பிதெரோரும் ஓர்தினிஸ்’ (அருள்பணியாளர்களின் பணி மற்றும் வாழ்க்கை), ‘அப்போஸ்தோலிகாம் ஆக்துவோஸிதாதேம்’ (பொது நிலையினரின் திருத்தூதுப்பணி), ‘ஓப்தாதாம் தோஷியுஸ்’ (திருப்பணிப் பயிற்சி), ‘பெர்ஃபெக்தே காரிதாதிஸ்’ (துறவற வாழ்வைப் புதுப்பித்தல்), ‘க்றிஸ்துஸ் தோமினுஸ்’ (திருஅவையில் ஆயர்களின் அருள்பணி), ‘உனிதாதிஸ் ரெதின்டெக்ராஷியோ’ (கிறிஸ்தவ ஒன்றிப்பு), ‘ஓரியன்த்தாலியும் எக்ளேசியாரும்’ (கீழைத் திருச்சபைகள்) மற்றும் ‘இன்த்தெர் மிரிஃபிகா’ (சமூகத் தொடர்புக் கருவிகள்).
ஆ) 2024 - இறைவேண்டல் ஆண்டு
அனைத்து மறைமாவட்டங்களிலும் தனிப்பட்ட மற்றும் குழும இறைவேண்டல்களை ஊக்குவிக்குமாறு முயற்சிகள் மேற்கொள்ள ஆயர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இறைவேண்டல் ஆண்டுக்கான வழிகாட்டியாக 9 புத்தகங்களைத் திருப்பேராயம் வெளியிட்டுள்ளது. திரு அவையின் திருப்புகழ் மாலை, அருள்கருவிகள், பக்தி முயற்சிகள், மரபு வழி இறைவேண்டல்கள் போன்றவற்றையும், பல்வேறு துறவற சபைகளின் அருள்வரங்களின் பின்புலங்களில் எழுந்த இறைவேண்டல்களையும் பற்றி அறிந்துகொள்ள இந்த ஆண்டு நமக்குத் துணை செய்கிறது. ஒட்டுமொத்தத் திரு அவையுடன் இணைந்து, அனைத்துலகுக்காகவும் நாம் இறை வேண்டல் செய்கிறோம். பங்குத்தளங்களிலும், திருத்தலங்களிலும் யூபிலி சிறப்பு இறைவேண்டல் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படலாம்.
இ) 2025 - திருப்பயண ஆண்டு
யூபிலி ஆண்டில் உரோமையில் உள்ள நான்கு பேராலயங்களின் (தூய பேதுரு பவுல், தூய யோவான் இலாத்தரன், தூய கன்னி மரியா, நகருக்கு வெளியே உள்ள தூய பவுல்) யூபிலி கதவுகள் வழியே நடக்கும் நோக்கில், அவற்றை நோக்கித் திருப்பயணம் மேற்கொள்ள நம்மை அழைக்கிறது திரு அவை. மேலும், ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய’ நாம் எதிர்நோக்கு மங்கிக் கொண்டிருக்கும் இடங்களான மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், புலம் பெயர்ந்தோர் முகாம்கள் நோக்கியும் திருப்பயணம் மேற்கொள்ளலாம்.
4. யூபிலி கி.பி. 2025: பங்கேற்பு
நம் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (Conference of Catholic Bishops of India, CCBI) 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளை இணைத்து ‘கற்றல் ஆண்டு - இறைவேண்டல் ஆண்டு’ எனக் கொண்டாடுமாறு நமக்கு வழிகாட்டுகிறது. கடந்த நவம்பர் 26-ஆம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று அனைத்து மறைமாவட்டங்களிலும், யூபிலி 2025-க்கான தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அன்று தொடங்கி நாம் யூபிலி இறைவேண்டலைச் செபிக்கிறோம். யூபிலி 2025 இலச்சினைகள் தாங்கிய கொடிகள் ஏற்றப்பட்டு, பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.
பங்குத்தளங்களிலும், துறவியர் இல்லங்களிலும், மறைமாவட்டக் கூடுகைகளிலும் நாம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டுகள் முன்வைக்கிற கருத்துகளையும் (இறைவெளிப்பாடு, திருவழிபாடு, திரு அவை, உலகம்), பல்வேறு தரப்பட்ட இறைவேண்டல்களையும் சிந்தனைப் பொருள்களாகவும், கொண்டாட்டப் பொருள்களாகவும் கொள்வோம்.
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் யூபிலி ஒருங்கிணைப்புக் குழு, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து இலத்தீன் ரீதி (132) மறைமாவட்டங்களையும் சந்தித்து உரையாடுகிறது. கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்ற முதல் அமர்வு கொண்டு வந்துள்ள அறிக்கை பற்றிய கலந்துரையாடல், யூபிலி 2025-க்கான அறிமுகம், இந்திய ஆயர் பேரவையின் செயல்திட்டக் கூர்மை (CCBI Strategic Planning for the Church in India)) பற்றிய முன்னுரை ஆகியவை யூபிலி யாத்திரையின்போது (Jubilee Yatra) வழங்கப்படுகின்றன.
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘இரக்கத்தின் தூதுவர்கள்’ (Missionaries of Mercy) ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தை அறிவித்தவர்களாகப் பல பங்குத்தளங்களுக்கும், திருத்தலங்களுக்கும் வருகிறார்கள். ஒப்புரவு வழிபாட்டுக்கு நம்மைத் தயாரிக்கிற இவர்கள் இறைவனின் இரக்கத்தின் முகத்தை நம் கண்முன் வைத்துப் பயணிக்க நம்மைத் தூண்டுகிறார்கள்.
‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ (2013) எனும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது ஊக்க மடலின் பின்புலத்தில் நற்செய்தி அறிவிப்பு நம் திரு அவையின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்ற நினைவூட்டல் நமக்குத் தரப்படுகிறது.
இறுதியாக...
யூபிலி கி.பி. 2025-ஐ மற்றுமொரு கொண்டாட்ட ஆண்டு எனக் கடந்துவிடாமல், நம்மையே ஆன்மிக அளவில் புதுப்பித்துக்கொண்டு, எதிர் நோக்கின் திருப்பயணிகளாக நம் குடும்பங்களிலும், பங்குத்தளங்களிலும், சமூகத்திலும் இணைந்து வழிநடக்க நாம் இன்றே புறப்படுவோம்.