வழியோரம் அறிமுகமாகும் இறைவன்!
G.K.Chesterton என்பவர் புகழ் பெற்ற ஓர் ஆங்கிலேய எழுத்தாளர். ‘Father Brown’ என்ற அருள்பணியாளர் ஒருவரை மையப்படுத்தி இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு திரைப்படமாக உருவானது. அதில், அலெக் கின்னஸ் (Alec Guinness) என்ற ஆங்கிலத் திரைப்பட நடிகர் Father Brown பாத்திரத்தில் நடித்தார். அலெக் கின்னஸ் இளமைப் பருவம் முதல் சமயம் சார்ந்த விசயங்களில் அக்கறை ஏதுமின்றி வளர்ந்தவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, பிரான்ஸ் நாட்டின் ஒரு கிராமத்தில் நடைபெற்றது. ஒரு நாள் மாலை, அலெக் அன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிப்பதற்காக அணிந்திருந்த அங்கியைக் கழற்றாமல், தான் தங்கியிருந்த உணவகத்தை நோக்கி நடந்து சென்றார். அப்போது வழியில் ஒரு சிறுவன் அவரை உண்மையிலேயே ஓர் அருள்பணியாளர் என்று எண்ணி ஒரு புன்சிரிப்புடன் அவரிடம் ஓடிவந்து, அவரது கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவருடன் நடக்க ஆரம்பித்தான். முன்பின் எவ்வித அறிமுகமும் இல்லாதபோதும், ஒரு சிறு குழந்தையின் மனத்தில் ஓர் அருள்பணியாளரின் உருவம் இவ்வளவு நம்பிக்கையை உருவாக்க முடியும் என்றால், அந்தக் கத்தோலிக்க மறையில் நிச்சயம் நல்லவை பல இருக்க வேண்டும் என்பதை அலெக் அன்று உணர்ந்தார். பின்னாளில் அவர், அவரது மனைவி மெருலா, மகன் மேத்யூ ஆகிய மூவரும் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினர்.
ஒரு சிறுவன் வழியாக அலெக் என்பவருக்கு இறைவன் அறிமுகமானது போன்று, நம் வாழ்விலும் பல நிலைகளில், வியப்பான வழிகளில் இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதே இன்றைய வாசகங்களின் உள்ளடக்கம். இறைவன் எனக்கு எப்போது அறிமுகமானார்? என்ற கேள்வியோடு இன்றைய நாள் சிந்தனையைத் துவங்குவோம். இறைவன் எப்போது எனக்கு அறிமுகமானார்? அல்லது இறைவனை யார் எனக்கு அறிமுகப்படுத்தினார்? என்ற கேள்விக்கு எளிதாக விடை தேட முடியுமா? பெற்றோரே முதன்முதலில் கடவுள், இறைவன், ஆண்டவன் என்ற வார்த்தைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களே நெற்றியில் சிலுவை அடையாளம் எப்படி வரைவது என்றும் கற்றுத் தந்திருப்பர். குழந்தைப் பருவம் தொட்டே அருள்சகோதரிகள், அருள்பணியாளர்கள், மறைக் கல்வி ஆசிரியர்கள் என்று பலரும் கதைகள், படங்கள் வடிவில் இறைவனை நமக்கு அறிமுகம் செய்திருப்பார்கள். ஆனால், எந்த ஒரு நாளில்...? எப்போது...? இக்கேள்விக்கு விடை இல்லை!
கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. வளர்ந்துவிட்ட நிலையில் அந்திரேயா மற்றும் பேதுரு இருவருக்கும் இயேசு அறிமுகமாகும் நிகழ்வை இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.
நீதித்தலைவர்களின் காலம் மாற, அரசுரிமையின் காலமாக இஸ்ரயேல் மாறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் மக்களை வழி நடத்த அழைக்கப்பட்டவர் சாமுவேல். நீதித் தலைவர்கள் வரிசையில் இறுதியாக வந்தவராக அவர் இருந்தாலும், அவருடைய இறைவாக்குப் பணி காலத்திற்குரிய சிறந்த தலையீடாக இருந்தது. எல்கானாவும், அன்னாவும் ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபட்டு, அவருக்குப் பலி செலுத்துவர் (1சாமு 1:3). குழந்தைப் பேறு இல்லா இத்தம்பதி வெகுகாலம் உருக்கமாகச் செபித்ததன் பலனாக, சாமுவேலைக் கொடையாகப் பெறுகின்றனர். இறைவனின் அருளால் அவர்களுக்கு அருளப்பட்டதால் அவனை வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே பணிபுரிய ஒப்புக்கொடுக்கிறார்கள்.
சிறுவன் சாமுவேல் ஆண்டவரின் இல்லத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இறைவன் சாமுவேலுக்கு அறிமுகமாகிறார். ஆண்டவர் ‘சாமுவேல்’ என்று மும்முறை அழைக்கிறார். இருந்தாலும் அந்தப் புனிதமான இடத்திலும் அச்சிறுவனால் இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ‘இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?’ என்று சொல்லி தனது குருவாகிய ஏலியை நோக்கி ஓடிச் செல்கிறான். சாமுவேலுக்கு இறைவனைப் பற்றிப் பல உண்மைகளைக் கற்றுத்தந்த ஏலியும் சாமுவேலை ஆண்டவர்தாம் அழைக்கிறார் என்பதை உடனே உணர்ந்து கொள்ளவில்லை.
இதற்கு அவரது கண்பார்வை மங்கி வந்தது (1சாமு 3:2) மட்டும் காரணமல்ல, அவரது புதல்வர்கள் ஒப்பினி, பினகாசு ஆகியோரின் தவறான வாழ்வு முறைகளும், அதனால் வந்து சேர்ந்த குற்றச்சாட்டுகளும் அவரது மனத்தைப் பாதித்திருந்தன. அவரது குடும்பத் தலைமுறையினர் இளம் வயதில் மடிவர். பணிபுரிய அவரது வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட உரிமை தொடராது என்று இறையடியார் ஒருவர் வந்து ஏலியிடம் உரைத்தது அவரின் உடலையும், உணர்வையும் உறிஞ்சி இழுத்தன (1சாமு 2:27-36). கடவுளைக் காண்பதற்குத் தேவையான உண்மையான, உள்ளார்ந்த கண்ணோட்டம் இல்லையெனில், அவர் குடியிருக்கும் இல்லத்திலும் அவரைக் காண இயலாமல் போகலாம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
மூன்றாம் முறையாக, ‘சாமுவேல்’ என்று கடவுள் அந்தச் சிறுவனை அழைத்தபொழுது, அவன் குரு ஏலியிடம் மீண்டும் ‘அடியேன். என்னை அழைத்தீர்களா?’ என்று கேட்க, ‘அழைத்தவர் இறைவன்தாம்’ எனும் உண்மையை ஏலி புரிந்துகொள்கிறார். சிறுவன் சாமுவேல், ஆண்டவருக்கு நேரடியாக அறிமுகமாகும் அனுபவம் பெறத் தலைமைக் குருவாகிய ஏலி சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுகிறார். அழைப்பது கடவுள் என அறிந்தபொழுதே தன்னை அடியனாக்கி இறைப்பணி செய்ய முன்வருகிறார் சாமுவேல்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் சிறுவன் சாமுவேலுக்கு அறிமுகமானதுபோல, நற்செய்தி வாசகத்தில் சாதாரணமான இரண்டு மனிதர்களுக்கு அறிமுகமாகிறார் இயேசு. சாமுவேலுக்குக் குரு ஏலி இறைவனை அறிமுகம் செய்து வைக்கிறார். இங்கே திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்து வைக்கிறார். சாமுவேலுக்கு ஆலயத்தில் அறிமுகமான இறைவன், இவர்களுக்கு யோர்தான் ஆற்றங்கரையோரம் (யோவா 1:28) அறிமுகமாகிறார். ஒரு சமாரியப் பெண்ணுக்கு இயேசு கிணற்று ஓரமாய் (யோவா 4:26), எம்மாவு சீடர்களுக்கு ஒரு வழிப் போக்கரைப் போல (லூக் 24:29), சக்கேயுவுக்கு எரிக்கோ நகர் வழியில் (லூக் 19:5), பவுலுக்குத் தமஸ்கு சாலையோரத்தில் (திப 22:6) இயேசு அறிமுகமாகிறார். கோவில்களிலும், புனிதத்தலங்களிலும் இறைவன் அறிமுகமாவதைவிட, சாதாரண வாழ்வுச் சூழல்களில் மாறுபட்டதொரு வழியில் அவர் அறிமுகமான நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன.
திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்கு இயேசுவை ‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி’ (யோவா 1:36) என்று அறிமுகப்படுத்துவது சீடத்துவ வாழ்வு என்பதும் இயேசுவைப் பின்பற்றுவதும் எவ்வளவு கடினமானது என்பதை உணர்த்துகிறது. இச்சொற்றொடருக்கு இரு பொருள்கள் உள்ளன: ஒன்று, ஆட்டுக்குட்டி; மற்றொன்று, இறைவனின் ஊழியன். கடவுளின் ஆட்டுக்குட்டி என்பதைப் பாஸ்கா ஆடாக (விப 12:5), பாவங்களைச் சுமக்கும் பரிகார ஆடாக (லேவி 16:20), ‘இதோ இறைவனின் வெற்றி’ எனும் பொருளில் திருவெளிப்பாட்டு ஆடாக (திவெ 7:17) அல்லது அன்றாடம் பலியிடப்படும் பலி ஆடாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கு யோவானின் சான்றை ஏற்றுக்கொண்ட அவரது சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்கின்றனர். அதை அறிந்த இயேசு ‘என்ன தேடுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கிறார். மிக ஆழமான, பொருள் நிறைந்த இந்தக் கேள்வியே யோவான் நற்செய்தியில் இயேசு பேசிய முதல் சொற்களாக அமைகின்றன. ‘நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?’ (லூக் 2:49) என்பது நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள இயேசுவின் முதல் சொற்றொடர். புரியாமலேயே, தவறானவற்றைத் தேடிக் களைத்து, வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து வரும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது ‘என்ன தேடுகிறீர்கள்?’ என்ற இயேசுவின் கேள்வி,
தாங்கள் எந்த ஒரு தேவைக்காகவும் இயேசுவைத் தேடிவரவில்லை. உண்மையான, நிறைவான, நிலையான வாழ்வைத் தரவல்ல இயேசு ஒருவரையே தேடி வந்திருக்கிறோம் என்பதை உணர்த்த அச்சீடர்கள், ‘ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றனர். உண்மையான தேடலில் ஈடுபட்டிருந்த சீடர்களிடம் இயேசு, ‘வந்து பாருங்கள்’ என்ற அழைப்பை விடுக்கிறார். இயேசுவின் இந்தப் பதில் மொழி சீடர்களைத் தம்மோடு இருப்பதற்கும், தம் உடனிருப்பை அனுபவிக்கவும் தூண்டுகிறது. உண்மையான தேடலில் ஈடுபட்டிருந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இருவரும் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு தங்குகின்றனர். இயேசுவோடு தங்கிய அவர்களது அனுபவம் விவரிக்க இயலாத அனுபவமாக அவர்கள் வாழ்வில் மாறிவிடுகிறது. இரண்டு சீடர்களுள் ஒருவரான அந்திரேயா (மற்றொருவர் நற்செய்தி ஆசிரியர் யோவான்) மறுநாள் காலையில் தன் சகோதரரான சீமோன் பேதுருவைக் கண்டு, ‘நாங்கள் மெசியாவைக் கண்டோம்’ என அறிவிக்கின்றார். அறிவித்ததோடு நின்றுவிடாமல், தான் பெற்ற இன்பத்தை, தன் சகோதரரும் பெறவேண்டும் என்று சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார்.
நான்காம் நற்செய்தியாளர் புனித யோவான் தனது நற்செய்தியில் அந்திரேயாவைப் பற்றி மூன்று இடங்களில் குறிப்பிட்டு, அவரது தனித்தன்மைகளை விளக்குகிறார். இங்கு அவர்தம் சகோதரர் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். சில காலம் தாழ்த்தி அந்திரேயா ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் வைத்திருக்கும் ஒரு சிறுவனை இயேசுவிடம் கூட்டி வருகிறார் (யோவா 6:8,9). இறுதியாக, இயேசுவைக் கண்டு பேச விரும்பிய கிரேக்கர்கள் சிலரை இயேசுவிடம் கூட்டி வந்து உரையாட வைக்கிறார் (12:22). இவ்வாறு ஒவ்வொரு முறையும் அந்திரேயா யாரையாவது இயேசுவிடம் அழைத்து வருகிறார் அல்லது அவர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்து வைக்கிறார். ‘சூரியன் ஒளி கொடுக்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால், ஒரு கிறிஸ்தவன், தான் பெற்ற நம்பிக்கையை இன்னும் அதைப் பெறாதவர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது’ எனும் புனித ஜான் கிறிஸ்தோஸ்தோமின் வரிகள் நினைவுகூர வேண்டியவை.
இன்று ஆலயங்களையும், ஆண்டவனையும், அருள்பணியாளர்களையும் தேடாத மனிதர்களின் எண்ணிக்கை குடும்பங்களில், சமூகத்தில், திரு அவையில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, கடவுள் தம் மக்களை அழைப்பதை, அன்புகூர்வதை இன்று உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிற ஏலி போன்ற அருள்நிலையாளர்கள், துறவியருக்கு உள்ளது. திரு அவையில், பல்வேறு பணி நிலைகளில் உள்ளோர் ‘இயேசுவை நாங்கள் பின்பற்றுகிறோம்; அவர் பின்னால் வழிநடக்கிறோம்; அவரையே அறிவிக்கிறோம்’ என்று முழங்கினாலும், இறையனுபவம் பெற்றால் மட்டுமே அவரை ஊருக்கும், உலகுக்கும் துணிவோடு அறிமுகம் செய்ய முடியும். நற்செய்தியை நாம் நம்புகின்றோம் என்றால், இயேசுவைத் தேடிக் கொண்டிருப்பவர்களிடத்தில் அவரை அறிமுகம் செய்யத் தயக்கம் காட்ட வேண்டாம்!
நாம் வாழும் இன்றைய அவசர உலகில், குடும்பங்களில் இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? கடவுள் நம்மை நோக்கி வருவதை, நமக்கு அறிமுகமாவதை, நம்மை அழைப்பதை, நம்மீது அன்புகூர்வதை நாம் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நமக்குத் தடையாக இருப்பவை எவை? சிறுவன் சாமுவேலுக்குக் குருவான ஏலியின் உதவி தேவைப்பட்டதுபோல, இன்று நம்முடைய பிள்ளைகள் இறைவனின் குரலைக் கேட்க, பெற்றோரின் உதவி தேவைப்படுகிறது. அதற்குப் பெற்றோர் முதலில் இறைக்குரல் கேட்க வேண்டும்; இறை அனுபவம் பெறவேண்டும்.
நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கும் கடவுளுக்கு, உள்ளத்தில் ஓர் இடத்தை வழங்கி, அவரிடம் நம் உறவுகளை அழைத்துச் செல்லும் வரத்தை இன்று நாம் இறைவனிடம் வேண்டுவோம்.