Namvazhvu
காவிகளின் வெறுப்புப் பிரச்சாரங்கள்
Wednesday, 17 Jan 2024 10:04 am
Namvazhvu

Namvazhvu

திருவிழாக்கள் மகிழ்வையும், மனித நேயத்தையும், சகோதர நேசத்தையும் தருபவை. திருப்பூர், திண்டுக்கல், கோவை  நகரங்களில்  தீபாவளி திருவிழா நேரத்தில் காவி அல்லது நீல நிறத்தில் ஒரு சுவரொட்டி வருடந்தோறும் ஒட்டப்படும். அதில்இந்துக்கள் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்குவோம்; இந்தியனாக இருப்போம்’  என்றிருக்கும். சில சமயங்களில்பிற சமயத்தினரின்  கடைகளைப் புறக்கணிப்போம்என்று அறைகூவல் விடப்படும்.

இஸ்லாமியத் துணிக் கடைக்கு எதிராக அந்த இந்துக் கடைக்காரர் ஆள் வைத்து போஸ்டர் ஒட்டுகிறார் எனச் சின்ன வயதில் பேசிக் கொள்வோம். இன்று மின்னணு ஊடகக் காலம். இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் வளர்ச்சி, அதில் புதைந்துள்ள அரசியல், இந்து மதவாதம் பொதிந்த காவி நிறமுடையது. தீவிர நச்சு விதைகளைச் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக விதைப்பது.

மேற்கு தமிழகத்தில், கேரள மக்களின் ஆதரவைப் பெற்றசோபாதுணிக்கடை கோவை மாநகரின் பெருமையாகப் பார்க்கப்பட்டது. இன்று அந்த ஜவுளி நிறுவனம் இல்லாத நிலைக்குக் காரணம் மத வாத வெறுப்புப் பிரச்சாரமே. சில தொழில் போட்டியாளர்கள் தங்கள்  அறக்கட்டளைகள் மூலம் வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் காவி இயக்கங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். சார்பு அதிகாரிகள் பிற மதத்தினரின் தொழில்களை நெருக்கடிகளுக்கு உட்படுத்துகிறார்கள்.                    

மதம் என்பதில் துவங்கிய இந்த வெறுப்புகள், தற்போது தமிழர், தமிழர் அல்லாதோர், பார்ப்பன-பனியா, மார்வாடிகளில் வந்து நிற்கிறது. வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்துக் கூப்பாடு போடும் நாம், வட இந்தியக் காவித் தொழில் அதிபர்களை மறந்து விட்டோம் என்பதே உறைக்கும் உண்மை.

கோவையில், ஈரோட்டில், திருப்பூரில்  ஜவுளித் தொழிலே இல்லாத நிலை. தமிழகத்தின் பெரு வணிகங்கள் எல்லாம் வட இந்தியர்களின்  தொழில் ஆதிக்கத்தில் முடிந்து விட்டது. இந்நிலையில் கடந்த  சில மாதங்களாக இணையத்தில் (Boycott A 2B) ‘அடையார் ஆனந்தபவன் உணவகத்தைப் புறக்கணிப்போம்என்ற ஒரு நச்சுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. காரணம், அடையார் ஆனந்த பவன்  உரிமையாளர் சித்ரா இலட்சுமணன் என்பவருடன் நடத்திய நேர்காணல் என அறிய முடிகிறது. அவர்பிராமணர்களே கோலோச்சிய தொழிலில் நீங்கள் வெற்றி பெற்றது எப்படி?’ எனக் கேள்வி கேட்கிறார்.  ‘குலத்தொழில் ஒழிப்பு என்று தமிழகத்தில் ஏற்பட்டு, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட பெரியார் செய்த முனைப்புகள் காரணம்என்று பதில் தருகிறார் அடையார் ஆனந்தபவனின் உரிமையாளர். இதுவே காவிகளின் கோபத்திற்கு மூல காரணம்.

ஒரு காலத்தில் சைவ உணவகம் என்றாலேபிராமணாள் ஓட்டல்என்ற பெயர் இருக்கும். எங்கள் ஊரில் மூன்று உணவகங்கள் இருந்த காலத்தில் இரண்டு சைவ உணவகங்களுமே (செல்லம், ஆர். ஹெச்.ஆர்.) பிராமணாள் ஓட்டல்கள். அசைவ உணவகம் (டிப்டாப்) பிற சமூகத்தினரின் உணவகம்.

காங்கிரஸ் மாநாடுகளில் எந்தச் சாதியினர் சமைப்பது, பிராமணருடன் அமர்ந்து சாப்பிடுவது போன்ற பிரச்சினைகள், காங்கிரசை விட்டுப் பெரியார் வெளியேற ஒரு காரணம் என்பது வரலாறு. பிராமணாள் ஓட்டல் என்ற பெயரை ஒழிக்க ஊர்கள் தோறும் பெரியார் போராட்டம் நடத்தியது மாற்றத்திற்கான அடிப்படை. அவர்களின் சாதி வெறி. அது எல்லை மீறுவதன் அடையாளம்.

தமிழகத்தில் ஊர்கள்தோறும் உருவாகியுள்ள  செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்குக்  காரணம் பிராமணர்கள் அல்லாதோர் உணவகங்கள் நடத்துவதுதான்; அவர்கள் செய்யும் சமையல்தான் என்றொரு பிரச்சாரம். அதைவிடக் கொடுமை, ‘நாய் கறி பிரியாணி கடைகள்என அசைவ உணவகங்களையும் குறி வைக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை, ஆர்.ஆர். பிரியாணி தமிழ்செல்வன் சொல்கிறார்.

தமிழகத்தில் தெருவுக்குத் தெரு உள்ள  பிரியாணி கடைகள், அந்தப் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுகின்றன. அதற்குப் பெயர்பிரியாணி ஜிகாத்என்ற பெருங்குண்டையும் போட்டார்கள். உணவகங்கள் மட்டுமல்ல, பல தொழில்களும் வெறுப்புப் பிரச்சாரத்தால் அழிக்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்சிறுமுகை  காரப்பன் சில்க்ஸ்என்ற நிறுவனத்திற்கு இது நடந்தது. அதன் உரிமையாளர் பொதுக்கூட்டத்தில் இந்து மதத்தைத் தாக்கிப் பேசினார் என்பது குற்றச்சாட்டு. தொழில் முனைவோருக்கு  சுதந்திர நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை மறுக்க இவர்கள் யார்?

இன்று ஆர்.எஸ்.எஸ்., பா... மற்றும்  அமைப்பின் வலைதள அணிகள் (IT Wing) தங்கள் கோட்பாட்டிற்கு உட்படாத விளம்பரங்களைக் கூட  தங்கள் சாம, பேத, தண்டத்தைப் பயன்படுத்தி விடுகிறது. சமூக சிந்தனையுள்ள, தேச பக்தியுள்ள, மதிப்பு மிகுந்த தொழில் அதிபர் டாடா. அவரது சங்கலித்  தொடர் நகைக் கடையான தனிஷ்கில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் இஸ்லாமியத் தம்பதிகள் இந்துப் பெண்ணிற்கு வளைகாப்பு செய்வதாகக் காட்சி விரிகிறது. சம்பந்தப்பட்ட டாடா உயர் அதிகாரிகளின் தொலை, அலைபேசி எண்கள் சமூக ஊடகங்களில்  பகிரப்படுகிறது. பெரும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தி, அவ்விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.

சர்ப் எக்ஸல்நிறுவனம் ஹோலி பண்டிகைகளின்போது ஓர் இந்து, தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை ஆடை அணிந்த ஓர்  இஸ்லாமியச் சிறுவனைத் தொழுகைக்குப் பத்திரமாக, ஹோலி சாயம் படாமல் கூட்டிச் சொல்வதாக விளம்பரம். அதையும் காவிகள்  தடுத்து நிறுத்தினர். இதை விடக் கொடுமை, ‘சர்ப் எக்ஸல்என்பதற்குப் பதில், காவிகள்மைக்ரோ சாப்ட் எக்ஸ்லுக்கு ரேட்டிங்கை முட்டாள்தனமாகக் குறைத்தார்கள்.

எச். ராஜா போன்றபுத்திசாலி பா... தலைவர்கள்டுவிட்டரில்வெறுப்புப் பிரச்சாரப் பதிவுகளைத் தருவது வழக்கம். ‘நீங்கள் ஆச்சி  மசாலாவை வாங்காதீர்கள்; அதன் உரிமையாளர் ஒரு கிறிஸ்தவர்; அவரது இலாபப் பணம் மத மாற்றத்திற்குப் போய்விடும்என எச்சரிக்கை விடுகிறார். இன்னொரு தலைவர் எஸ்.ஆர். சேகர், நல்லி சில்க்ஸ் விளம்பர மாடல் பொட்டு வைக்காத காரணத்தால்நோ பொட்டு, நோ பிசினஸ்எனடுவிட்போடுகிறார். இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் எல்லை இல்லாதது. நாம் இது குறித்து விழித்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

யூ டெர்ன்என்ற நிறுவனம் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அதில் பேசிய நேச்சுரல் சலூன் உரிமையாளர் குமரவேல் சொல்கிறார்: ‘தொழில் என்றால் பிரச்சினைகள் வரும். நாங்களும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரத்தைச் சந்தித்தோம்.’

இவர்கள் மதவாத வெறுப்புப் பிரச்சாரம் மட்டும் செய்வதில்லை; தங்கள் காவி முதலாளிகளுக்காகச் செய்த பணிகள் ஏராளம். காளீஸ்வரியின் கோல்டு வின்னர் சமையல் எண்ணெய்யை, அதானியின் பார்ச்சூன் சமையல் எண்ணெய்க்காக ரெய்டு  விட்டே நெருக்கடி தந்தார்கள். சரவணா ஸ்டோரை, ஜியோ மார்ட்டுக்காக இறுக்கினார்கள். நூறு ஆண்டு கால செட்டி நாட்டுத் துறைமுகத் தொழில்களையும் ரெய்டால் முடக்கினர். காஞ்சி பச்சையப்பா சில்க்ஸ்க்கும் இதே நிலைதான். பழனி பஞ்சாமிர்தத்துக்கும்கோவிந்தாபோட்டு விட்டார்கள்.

தேர்தல் காலங்களில் அரசியல் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகமாகலாம். வீண் வதந்திகள் பரப்பப்படலாம். நாம் அவைகளை அடையாளம் காண்போம். வெறுப்புப் பிரச்சாரங்களை விழிப்புணர்வால் வெல்வோம்.