திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். துன்பத்தைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக்கொள்ளவும், துன்பங்களின் மத்தியில் நம்மைக் கைவிடாத இறைவன்மீது நம்பிக்கைக் கொள்ளவும், பிறர் துன்பங்களில் கரம் கோர்க்கும் சீடர்களாக நாம் வாழவும் அழைக்கிறது இன்றைய வழிபாடு. ‘வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்’ என்பார்கள். மனித வாழ்வில் துன்பமும் துயரமும், கவலையும் கண்ணீரும், வேதனையும் சோதனையும் தவிர்க்க முடியாத போராட்டக் கூறுகள். அதிலும், மிக முக்கியமாக நோயோடு போராடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ‘துன்பமே மனிதனைத் தெய்வமாக்குகிறது’ என்பது கிரேக்கப் பழமொழி. துன்பமில்லாமல் இன்பமில்லை; சிலுவையில்லாமல் உயிர்ப்பு இல்லை. துன்பத்தின் மறுபக்கத்தில் மகிழ்ச்சி சேர்ந்தே இருக்கிறது. துன்பம் வருவது நன்மைக்குதான் என்ற நேர்மறையான மனப்பக்குவத்தை இன்று வளர்த்துக்கொள்வோம். துன்பத்தின் மத்தியில் இறைவன் நம்மைக் கைவிடுவதில்லை. இறைவன் சீமோனின் மாமியாரைக் கைதூக்கி விட்டதுபோல், யோபுவின் போராட்ட வாழ்வில் கூடவே இருந்ததுபோல, நமது போராட்ட வாழ்விலும் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புவோம். நமது அன்றாட வாழ்வில் நமது தன்னார்வப் பணிகளும், உடனிருப்பும், உதவிக் கரமும் பலருக்கும் நலமளிக்கட்டும் என்ற மனநிலையோடு இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
மாசற்றவரும், நேர்மையானவருமான யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, தன் உடமைகளை யும், உறவுகளையும், உடல் நலத்தினையும் இழந்த நிலையில், தன் நிலைமையை எண்ணிப் புலம்புவதை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவி மடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நற்செய்தி அறிவிப்பது தன் மேல் சுமத்தப்பட்ட கடமை என்பதை உணர்ந்த பவுல், எத்தனை இடர்கள் வந்தாலும் அதிலிருந்து நான் பின்வாங்காமல், எல்லாருக்கும் எல்லாமுமானதைத் துணிவோடு எடுத்துரைக்கும் புனித பவுலடியாரின் அறிவுரையைக் கவனமுடன் கேட்போம்.
மன்றாட்டுகள்:
• நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திரு அவையில் உள்ள அனை வரும், எத்தகைய துன்பங்கள், சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கை குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• நம்பிக்கையின் நாயகனே இறைவா! மனித வாழ்வைப் போராட்டமாக நினைத்து, கண்ணீரோடும், கவலைகளோடும் தூக்கமின்றி, துன்பத்தோடு போராடும் மக்கள் அனைவரின் உடைந்த உள்ளத் தையும், வலுவிழந்த மனத்தினையும், உமது நலம் தரும் நற்செய்தியால் நம்பிக்கையூட்ட இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
• நோயாளிகளைக் குணப்படுத்தும் வல்லமையுள்ள ஆண்டவரே! மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள், குணப்படுத்தவே முடியாத நோயினால் துன்புறுவோர் மற்றும் படுத்த படுக்கையாகத் துன்புறு வோர் அனைவரும் உமது வல்லமையான கரத்தின் தொடுதலினால் குணமாக்கப்பட இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
• நலம் தரும் நற்செய்தியால் ஆசீர் வழங்குபவரே! பல்வேறு தேவைகளுடன், இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் எம் பங்கு மக்கள் அனைவரும் வேண்டிக்கொண்ட மன்றாட்டுகளும், எதிர்பார்க்கும் தேவைகளும் நிறைவேற்றப்பட இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.