திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலே தொழுநோயாளர் ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம், ‘நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்’ என்று வேண்டுகிறார். ஆண்டவர் இயேசுவும் அவர்மீது பரிவு கொண்டு, ‘விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக’ என்று கூறுகிறார். தான் விரும்பும்படி ஆண்டவர் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பவில்லை; மாறாக, ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தன்னையும், தன் செயல்களையும் மாற்றிக் கொள்ளுகிறார். நாம் செய்கிற செயல்கள் எதுவாக இருந்தாலும், அது ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, ஆண்டவரின் திருவுளத்திற்கு ஏற்றவாறு அமைகிறபோது, இறைவன் கண்டிப்பாக நமக்கு வெற்றியைத் தருவார். நம்முடைய செயல்கள் ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிராக அமைகிறபோது, நாம் ஆண்டவரின் அருள் நிலையிலிருந்து அகன்று போகிறோம். முதல் பெற்றோரான ஆதாம், ஏவாளின் வாழ்க்கையில் இதைத்தான் காண்கிறோம். ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் நடந்து, அலகையின் விருப்பத்திற்கு உடன்பட்டபோது ஆண்டவரின் அருள் நிலையிலிருந்து பிரிக்கப்பட்டு, வெளியே துரத்தப்பட்டார்கள். ஆகவே, நமது விருப்பப்படி ஆண்டவர் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் விருப்பப்படி வாழ்ந்து அவரது இறையாட்சியில் பங்கு பெற்றிட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஒருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டால் அவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எத்தகைய உடை அணிந்து கொள்ள வேண்டும்? எவ்விடத்தில் குடியிருக்க வேண்டும்? என்பதையெல்லாம் ஆண்டவர் உரைப்பதை எடுத்துரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் எதைச் செய்தாலும், அது கடவுளை மகிமைப்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அது நமக்கு மீட்பை பெற்றுத் தந்து, ஆண்டவரின் அரசில் பங்கு பெறும் தகுதியைத் தரக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
• அனுதினமும் எங்களைக் காப்பவரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உமது மக்களை வழிநடத்தாமல், உமது திருவுளத்திற்கேற்றவாறு உம் மக்களுக்கு நல்வழி காட்டிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• அனைத்துலகோரின் ஆண்டவரே! தம் மக்கள், தம் வீடு, தம் மொழி, தம் இனம் என்று வாழாமல், தேர்ந்தெடுத்த எல்லா மக்களுக்காகவும் ஊழலற்ற நல்லதோர் ஆட்சியை எம் நாட்டுத் தலைவர்கள் வழங்கிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• கண்மணி போல எங்களைக் காப்பவரே! எங்கள் பங்குத் தந்தையையும், எங்களையும் நிறைவாக ஆசீர்வதியும். எங்களுக்கான உமது திட்டத்தை அறிந்து, அதன்படி நடந்திட தூய ஆவியின் துணையை நீர் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• நலன் பல தருபவரே! உலக நோயாளர்கள் தினத்தை நினைவுகூரும் இந்நாளில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறும் உம் மக்களுக்கு நீர் நலன்களை வழங்கி வாழ்வளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.