Namvazhvu
ஆயரும், அவர்தம் இலச்சினையும் ‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ (எசே 34:11)
Wednesday, 14 Feb 2024 10:19 am
Namvazhvu

Namvazhvu

‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ (எசே 34:11) என்ற விருதுவாக்குடன் குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பொறுப்பேற்கிறார். ஆயர் அவர்கள் மேய்ப்புப்பணி, அருள்பணி துறையில் (Pastoral Theology) இறையியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னணியில் ‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ என்ற விருதுவாக்கை எடுத்துள்ளார். அவரது இலச்சினையில் உள்ள படங்களைக் குறித்த இறையியல் விளக்கம் இது:

புனித தேவசகாயத்தின் கை மற்றும் கை விலங்கு (Commitment); மூவொரு இறைவனின் உறவு ஒன்றிப்பு (Communion); தேடிச் செல்லும் கருணை நிறைந்த நல்லாயன் (Compassion); அன்னை மரியாவின் இடைவிடாத அருள்துணை (Constant Love of Mary).

Commitment என்ற வார்த்தைக்கு அர்ப்பணம் அல்லது உறுதிப்பாடு என்று பொருள். நீலகண்டன் என்ற நெருப்பு தேவசகாயமாக மாறி, கொழுந்து விட்டு எரிந்தது, இந்த அர்ப்பணத்தாலும், உறுதிப்பாட்டாலும் மட்டுமே. 300 ஆண்டுகளுக்கு முன் எந்தெந்த வீதிகளில் அவமானப்படுத்தப்பட்டு, வெற்றுடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளிக் குத்தி, எருக்கம்பூ மாலையுடன் இழுத்துச் செல்லப்பட் டாரோ, இன்று அதே வீதியில் தேர் பவனியாக வலம் வருகிறார் நம் புனிதர். இதற்கு ஒரே காரணம், அவருடைய அர்ப்பணிப்பு.  தேவசகாயம் நினைத் திருந்தால் இயேசு என்ற நிலை வாழ்வை உதறித் தள்ளிவிட்டு நிம்மதியாக நீலகண்டனாக நீடித்து வாழ்ந்திருக்கலாம். கோதுமை மணியாக மண்ணில் விழுந்து, முழுமையாகப் பலன்தர வைத்தது அவருடைய அர்ப்பணமும், மன உறுதியுமே. காற்றாடி மலையில் உருட்டிவிடப்பட்ட போதும், இந்த உறுதிப்பாட்டில் வழுவவில்லை. கிறிஸ்தவ மறையை ஏற்ற பிறகு அவர் போராடியது சமத்துவ வாழ்வுக்காக. இத்தகைய மாட்சி நிறைந்த புனிதரின் வழியில் பயணித்து, சகோதரத்துவத்தில் கரம் கோர்த்திட ஆயர் தம் பணி வாழ்வை முன்னெடுக்கிறார்.

மூவொரு இறைவனின் உறவு ஒன்றிப்பு (COMMUNION)

தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் மூன்று ஆள்களாக இருப்பினும், ஒரே கடவுளாக நமக்கு வாழ்வளிக்கின்றனர். ஆள் வடிவில் மூவராகினும், சம ஞான, வல்லமை, கருணை, இரக்கத்தோடு நம்மை வாழ வைத்து வழிநடத்துகின்றனர். தந்தையின் பணி படைத்துப் பராமரித்தல்; மகனின் பணி மீட்டுக் காப்பது; தூய ஆவியாரின் பணி வழிநடத்தி வாழ வைத்தலாகும்.

இயேசு ஆண்டவரின் பணி வாழ்வு முழுவதிலும் இந்த மூவருக்குமிடையேயான உறவு ஒன்றிப்பு மிகவும் வெளிப்படுகிறது. இயேசு ‘என் தந்தையின் விருப்பத்தைச் செய்து முடிப்பதே என் உணவு’ என்கிறார் (யோவான் 4:34). தந்தையும் தம் மகன் இயேசுவை உலகம் தோன்றும் முன்பே மாட்சிப்படுத்தியிருக்கிறார்; மீண்டும் மாட்சிப்படுத்துமாறு இயேசு கேட்பதையும் நாம் அறிகிறோம்.

தூய ஆவியார், இயேசுவின் பணி வாழ்வின் துவக்கத் தயாரிப்புக்காகப் பாலை நிலத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். திருமுழுக்கு முதல், தம் பணி வாழ்வு முழுவதிலும் தூய ஆவியாரின் உடனிருப்பை இயேசு முழுமையாகப் பெறுகிறார். இவ்வாறு மூவரும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாகச் செயல்பட்டதுபோல, மறைமாவட்டத்தில் ஆயரும், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் யாவரும் ஒன்றாக இணைந்து, ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைந்து குழித்துறை என்ற உறவுக் குடும்பமாகச் செயல்பட்டு மறைமாவட்டத்தை வழிநடத்துவதே நோக்கமாகும். மறைமாவட்டத்தின் தனிப்பெரும் சிறப்பாக இருக்கக்கூடிய சமய நல்லிணக்கத்திற்கும் இது பொருந்தும். பல்வேறு மதங்களால், சபைகளால் பிரிந்தாலும், நம்பிக்கையால் ஒரே உறவுக் குடும்பமாகக் கரம்கோர்த்துப் பயணிக்க அழைப்பு விடுக்கிறார்.

தேடிச் செல்லும் கருணை நிறைந்த நல்லாயன் (COMASSION)

‘COMASSION’என்ற வார்த்தையை வெறுமனே ‘இரக்கம்’ என்ற வார்த்தையோடு சுருக்குதல் சிறப்பாகாது. ஓர் ஆயன், தான் வளர்த்த மந்தை சிதறுண்ட பிறகு அவற்றைத் தேடுவதற்கு முன்பாக அவருடைய கண்ணிலும், நெஞ்சிலும் வழிந்தோடுகின்ற கனிவும், பரிவும், கருணையும் நிறைந்த பேரிரக்கமாகும். காணாமல் போன ஓர் ஆட்டிற்காக, நல்லாயன் 99 ஆடுகளையும் மலை உச்சியில் விட்டுச் செல்வது அந்த ஓர் ஆட்டின்மீது அவர் கொண்டிருக்கும் பேரன்பைக் காட்டுகிறது. விவிலிய அறிஞர்கள் பார்வையில் அந்த ஆடு கண் பார்வை குறைந்தோ, காது கேட்கும் திறன் குறைந்தோ அல்லது மற்ற உடலியல் குறைபாட்டோடு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தொலைந்துபோன அந்தத் தன் தனி அன்புக்குரிய ஆட்டைத் தேடிப் போகிறார். தேடிச் சென்று பேணிக் காக்கின்ற ஆயனாக, காயங்களுக்குக் கட்டுப் போடுகின்ற நல்ல பரிவு நிறைந்த மருத்துவராக இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார்.  ஆண்டவர் இயேசு “நல்ல ஆயன், தன் ஆடுகளை அறிந்து, அவை நிலை வாழ்வை நிறைவாகப் பெறும் பொருட்டு தன் வாழ்வையே இழப்பார்” (யோவான் 10:10) என்கிறார். சிதறிய ஆட்டைத் தேடிச் சென்று பேணிக் காக்க விரையும் நல்லாயனுக்கு, ஆடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அன்னை மரியாவின் இடைவிடாத அருள் துணை (Constant Love of Mary)

அன்னை மரியாவின் மாறாத உடனிருப்பு, அவர் மகன் இயேசுவின் மனுக்குல மீட்பிற்கு மிகப்பெரிய பங்களிப்பு. ஆண்டவரின் வார்த்தைக்கு ‘ஆம்’ எனத் தன்னை அர்ப்பணித்து, மீட்பரின் தாயாகிறார். மரியா இயேசுவின் பணி வாழ்வின் மிகப்பெரிய உந்து சக்தி. கருவறை முதல் கல்லறை வரை இயேசுவோடு பயணித்ததோடு மட்டுமின்றி, இயேசுவுக்குப் பிறகு சீடர்களோடு இணைந்து இருந்து, அவர்களுடைய விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

தூய ஆவியாரின் வருகையின்போது பெந்தகோஸ்தே நாளிலே அன்னை மரியாவின் உடனிருப்பு சீடர்களை இன்னும் அதிகம் திடம்பெறச் செய்தது. ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் தம் தாயின் உடனிருப்பும், பயணமும் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். இயேசுவோடு நடந்த அதே அன்னை மரியா பணி வாழ்விலும் நம்முடன் நடந்து நம்மை வழிநடத்துவார். நம் மறைமாவட்டத்திற்கு அவருடைய அன்பும், அரவணைப்பும் எப்போதும் துணையாக இருக்கும்.

இதுவே ஆயர் அவர்களின் விருதுவாக்கு இலச்சினை சுட்டும் விளக்கங்கள். நாமும் ஆயரின் வழியில், ஆண்டவர் ஒளியில் சாட்சிய வாழ்வைச் சரித்திரமாக்குவோம்!