Namvazhvu
‘தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’
Thursday, 15 Feb 2024 10:13 am
Namvazhvu

Namvazhvu

விளையும் பயிர் முளையிலே ………

விதையொன்று விருட்சமானது - ஆம்

விதையாய் மணவிளை ஊரில் ஊன்றியது

விருட்சமாய் இன்று குழித்துறை மறைமாவட்ட ஆயராக என் எண்ண அலைகளில்

வண்ணக் கோலங்களாய்...!

1975-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் சரல் பங்கிற்குத் துணைப் பங்குத்தந்தையாகச் சென்ற போது, அப்பங்கின் கிளைப் பங்கான மணவிளை யில், அவ்வாண்டு முதல் திருவிருந்து பெற்று, பீடச் சிறுவனாகச் சேர்ந்தவர் ஆல்பர்ட். தந்தை திரு. அனஸ்தாஸ் ஊர்த்தலைவர், தாய் திருமதி. றோணிக்கம். உடன்பிறப்புகள், அத்தனை பேரும் திரு அவைக்கும், சமூகத்திற்கும் தங்களை அர்ப்பணித்தவர்கள். குருக்கள்மீது அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். இறைப்பற்றும், இறை நம்பிக்கையும் நிறைந்த இக்குடும்பத்தில்தந்தை வழி தனயன்என்பதற்கு ஏற்ப, சிறுவன் ஆல்பர்ட் வளமான பயிற்சிப் பாசறையில் வளர்ந்தார்.

இளமையின் துடிப்பும், குறிப்பறிந்த செயல்பாட்டையும், இறைஞானத்தையும், அறிவுக்கூர்மையையும், விவேகத்தையும் பிறப்புரிமையாகக் கொண்டு, பக்தியோடு சிறார் பருவத்தில் புனித டோமினிக் சாவியோ போன்று திருப்பலிக்கு உதவியவர். குருத்துவப் பயிற்சிக் காலத்தில் சகோ. ஆல்பர்ட் களப்பணிக்காக இலவுவிளைப் பங்கில் 1986-ஆம் ஆண்டு ஜூன் மாதம்  காலடி எடுத்து வைத்தது இன்றும் பசுமை நினைவலைகளாக என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அப்பங்கு ஒரு மறைபரப்புத் தளம். பங்கின் சில பகுதிகளில் கூட்டாகத் திருமுழுக்குப் பெற்று, நம்பிக்கை வாழ்வில் வளர பயணப்பட்ட காலம். மாலை வேளை பயிற்சி வகுப்பு, வீடு சந்திப்பு, புன்சிரிப்போடு மக்களைச் சந்தித்த அணுகுமுறை, பேதமற்ற கருத்துப் பரிமாற்றம், பங்கு மக்களின் நலனில் கொண்டிருந்த தணியாத தாகம், பாசம், அன்பு, கரிசனை போன்ற மேய்ப்புப்பணிக் கூறுகள் மற்றும் மக்கள் மத்தியில் இறையரசைக் கட்டி எழுப்பும் ஆன்மிகத் தாகம் அந்த இளம் வயதிலேயே அவரில் வெளிப்பட்டன.

குருத்துவப் பணியாற்றச் சென்ற பங்குகளில் எல்லாம் இன்றும் நன்றியோடும், மகிழ்வோடும் மக்கள் நினைவுகூரும் வண்ணம் நிறைவாகப் பணியாற்றியவர். மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு, பங்கின் வரலாற்று நாயகராக, மக்களைச் செதுக்கிய சிற்பியாக, முடிச்சுகளை அவிழ்த்து, சிக்கல்களைச் சாதூரியமாக அகற்றி, திரு அவையின் ஆக்கப்பூர்வமான வழிகாட்டலோடு, காலத்திற்கேற்ற, அர்த்தமுள்ள, பயனுள்ள பணிகளைச் சிறப்பாய்ச் செய்தவர். இத்தகைய பணிகளில் வலுவூட் டம் பெறமேய்ப்புப்பணிஇறையியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

2024, சனவரி 14-ஆம் நாள் இலவுவிளை பங்கின் திருவிழா திருப்பலிக்குச் சென்றபோது முன்னைய இளைஞர்கள் ஒன்றுகூடிஃபாதர், உங்க சிஷ்யன் இன்று உங்கள் குருவாக உயர்ந்துவிட்டார்என்று மகிழ்ச்சி ததும்பக் கூறியதைக் கேட்ட போதுதன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்மகிழ்வதைப் போன்று உள்ளம் அக்களித்தேன். என்னே! அவரது இளைஞர் ஈடுபாடு! எளிமைக்கும், தூய்மைக்கும், நேர்மைக்கும் ஆடுகளின் வாசனை அறிந்து செயல்படும் பாங்கிற்கும் முத்தாய்ப்பாக ஆண்டவன் அருளிய அன்பு பரிசே ஆயர் நிலை. என்றுமே மறைமாவட்டப் பரிசாகத் திகழ புதிய ஆயரின் பணியும், வாழ்வும் சிறக்க இறைவேண்டலோடு வாழ்த்துகளும்!