திருப்பலி முன்னுரை
இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். பாலைநிலத்தில் 40 நாள்கள் தமது பணிக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்த நேரத்திலே, சாத்தான் ஆண்டவர் இயேசுவைச் சோதிக்கிறான். எவ்வாறு சோதிக்கிறான்? ‘நீர் கடவுளின் மகன் என்றால், இந்தக் கல்லை அப்பமாக மாற்றும். இந்தக் கல்லை அப்பமாக மாற்றினால், நீர் கடவுளின் மகன்; இல்லையென்றால் நீர் கடவுளின் மகன் அல்ல’ என்று ஆண்டவர் இயேசுவைச் சோதிக்கிறான். யூதர்களும் ஆண்டவர் இயேசுவை இப்படித்தான் சோதித்தார்கள். ‘நீர் கடவுளின் மகன் என்றால், வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்; அப்படிக் காட்டவில்லை என்றால், நீர் கடவுளின் மகன் அல்ல’ என்று ஆண்டவரின் வல்லமையைச் சோதித்தார்கள். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் வல்லமையை இப்படித்தான் சோதிக்கின்றோம். ‘நீர் இதை எனக்குச் செய்தால், நீர் உண்மையாகக் கடவுள்; இல்லையென்றால் நீர் கடவுள் அல்ல’ என்று நாம் பலமுறை ஆண்டவரின் தெய்வீகத் தன்மையை, வல்லமையைச் சோதிக்கிறோம். ஆண்டவரைச் சோதிக்கிறபோது நாமும் சாத்தான்களாக மாறுகின்றோம் என்பதை நினைவில் கொண்டவர்களாய், எந்நொடியும் ஆண்டவரைச் சோதிக்காதவர்களாய், சோதனை வருகிறபோது அவற்றிலிருந்து விடுபடும் வரத்தை வேண்டியவர்களாய் இத்தவக்கால ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
இனி ஒருபோதும் மனிதர்களும், உயிரினங்களும் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படமாட்டார்கள் என்று கடவுள் நோவாவிடம் ஏற்படுத்தும் உடன்படிக்கையை எடுத்துரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நீதியுள்ளவரான கிறிஸ்து, நீதியற்ற நம் அனைவருக்காகவும் இறந்தார். நம் அனைவரையும் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே அவர் இவ்வாறு இறந்தார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● படைகளின் ஆண்டவரே! மதத்தின் பெயரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் எவ்விதச் சோதனைக்கும் இடம் கொடாமல், தங்கள் நம்பிக்கையைக் காத்து உமது மக்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● வல்லமையுள்ள ஆண்டவரே! நீரே இவ்வுலகைப் படைத்தவர் என்பதை உணர்ந்து, கர்வம், ஆணவம் நீங்கி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை எம் நாட்டுத் தலைவர்கள் நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எங்கள் பரம்பொருளே! இத்தவக்காலம் முழுவதும் எங்களுக்கு வரும் சோதனைகள் அனைத்தையும் வென்று, உமது ஆசியை நிறைவாகப் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● வாழ்வை வழங்கும் வள்ளலே! போரால், நிலநடுக்கத்தால், பெருமழையால், வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு நீரே அரணாக இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.