Namvazhvu
தவக்காலம் உணர்த்தும் தாராள மனம்!
Wednesday, 21 Feb 2024 11:35 am
Namvazhvu

Namvazhvu

நமது இயேசு ஆண்டவர் இந்த உலகத்திற்குள் பிறந்ததே ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கத்தான்! நற்செய்தி என்றால் நீதி! நற்செய்தி என்றால் அமைதி! நற்செய்தி என்றால் மகிழ்ச்சி!

நம்மில் யார் யார் ஏழைகளை அன்பு செய்கின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் இயேசு விடுதலையைத் தருவார். நீதியைத் தருவார். அமைதியைத் தருவார். முக்கியமாக மகிழ்ச்சியைத் தருவார். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் சக்கேயுவைப் பற்றிய கதைதான் லூக்கா 19:1-10 முடிய உள்ள பகுதி!

‘குள்ள மனிதர்’ சக்கேயு. அவர் ஒரு பெரிய பணக்காரர். ஆனால், பெரிய பாவி! ஆகவே, தூய்மையே உருவான இயேசுவைச் சந்திக்க நாணிக் கோணி, கோணலான மரத்தின்மீது அமர்ந்திருந்தார்.

இயேசு அப்பக்கமாக வந்தார். “நான் நீதிமான்களை அல்ல; பாவிகளையே அழைக்க வந்தேன்” என்ற இயேசு, சரியாகச் சக்கேயு அமர்ந்திருந்த மரத்தின் கீழே வந்து நின்றார்.

எல்லாருடைய கண்களையும் நாம் கட்டிவிடலாம்; ஆனால், இயேசுவின் கண்களை மட்டும் நம்மால் கட்ட முடியாது. ‘நீ மறைந்திருந்து பார்ப்பதன் மர்மம் என்ன?’ என்று அவரைப் பார்த்து இயேசு கேட்காமல் கேட்டு, அவரைக் கீழே இறங்கச் சொன்னார். இயேசு சக்கேயுவின் முகத்தை உற்றுப் பார்த்தார். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது.

சக்கேயுவின் மனம் விடுதலைக்காக ஏங்கியது; நீதிக்காக ஏங்கியது; அமைதிக்காக ஏங்கியது; மகிழ்ச்சிக்காக ஏங்கியது; இறையரசுக்காக ஏங்கியது! (உரோ 14:17). இந்த நான்கையும் தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் காசு கொடுத்து வாங்கிவிட்டார். இவற்றை இயேசுவால் மட்டுமே கொடுக்க முடியும் என்று அவர் நம்பினார்.

இவற்றை இயேசுவிடமிருந்து பெற வேண்டுமானால், அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டும் என்று சக்கேயுவுக்குத் தெரியும். அந்த விலை என்ன? அந்த விலைதான் தர்மம் செய்வது. ஏழைகளுக்கு உதவி செய்வது. அறச் செயல்களை மேற்கொள்வது.

இயேசுவின் கால்களிலே சக்கேயு விழுந்தார். இயேசுவைப் பார்த்து, “நான் யாரையாவது ஏமாற்றியிருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகின்றேன். என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றேன்” என்கின்றார். இந்தத் தாராள மனம், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தது. அவர் புனிதரானார்.

ஏழைகளுக்கு அவர் இன்னும் எதையும் கொடுக்கவில்லை. சொன்னார் அவ்வளவுதான். இயேசு அவரைப் பார்த்து “உன் வீட்டிற்கு இன்று மீட்பு உண்டாயிற்று” என்றார்.

மீட்பு என்றால் விடுதலை! மீட்பு என்றால் நீதி! மீட்பு என்றால் அமைதி! மீட்பு என்றால் மகிழ்ச்சி! மீட்பை இயேசுவிடமிருந்து பெற்ற சக்கேயுவின் இதயம் ஆடியது, பாடியது, ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், சக்கேயு மனைவியின் அகத்திலும் சிரிப்பில்லை, முகத்திலும் சிரிப்பில்லை. விருந்து முடிந்தது.

இயேசு சென்றவுடன் சக்கேயுவின் மனைவி அவரைப் பார்த்து, “உனக்கு என்னய்யா ஆச்சு? நீ கொள்ளையடிச்சதைத் திருப்பிக் கொடு; அது உன் பாடு. நாம் உழைச்சுச் சம்பாதிச்சதை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கணும்? அப்படியே கொடுத்தாலும், யூதச் சட்டப்படி பத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தா போதுமே? நீ வீட்டுல இருக்கிற எல்லாத்தையும் காலியாக்கிடுவபோல! பிள்ளைகளையும் நடுத் தெருவுலே விட்டுடுவதுபோல இருக்கே! வீட்டை விட்டு வெளியே போ” என்று சொல்லி வீட்டை விட்டு சக்கேயுவைத் துரத்தி விடுகிறாள்.

சக்கேயு ‘மனைவி, மக்களே வேண்டாம். நானும் இயேசுவின் சீடர்களில் ஒருவன்’ என்று சொல்லி முன்பு அமர்ந்திருந்த அதே மரத்தில் ஏறி அமர்ந்திருந்தார். இந்த வழியாகத்தானே இயேசு சென்றார்; இந்த வழியாகத்தானே திரும்பி வருவார் என்று காத்திருந்தார். இரவு முழுவதும் ‘எனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்துவிட்டதே’ என்று எண்ணி அழுது கொண்டிருந்தார். இரவு மனைவியின் கனவிலே கடவுள் தோன்றினார். அந்த மனைவியைப் பார்த்து “எதற்காக உன் கணவனை வீட்டை விட்டுத் துரத்தினாய்?” என்று கேட்டார்.

“அழியாத செல்வங்களான நீதி, அமைதி, மகிழ்ச்சி, இறையரசு உனக்கு வேண்டுமா? இல்லை, அழிந்து போகின்ற சொத்து, சுகம், பணம், மதிப்பு, மரியாதை வேண்டுமா?” என்று கேட்டார். உடனே அவள் உள்ளத்திலே ஒரு பெரிய போராட்டம் எழுந்தது. இறுதியாக, தான் செய்த தவற்றை உணர்ந்தாள். பொழுது விடிந்ததும் தன் கணவனைத் தேடினாள். தேடித் தேடிக் களைத்துப் போனாள். சற்று இளைப்பாறலாம் என்று நினைத்து ஒரு மரத்தடியிலே அமர்ந்தாள். அவள் தலையிலே கண்ணீர்த் துளிகள் விழுந்தன. அண்ணாந்து பார்த்தாள். சக்கேயு அழுதுகொண்டு அங்கே அமர்ந்திருந்தார்.

“கீழே இறங்கி வாருங்கள்” என்றாள். “நாம் யாரையாவது ஏமாற்றி இருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுவோம். நம் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுவோம்” என்றாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

இந்தக் கதையிலே வந்த சக்கேயுவைப் போல நாம் வாழ்ந்து கொண்டிருந்தால், கடவுளுக்கு நன்றி சொல்வோம். இல்லை என்றால் சக்கேயுவின் மனைவிபோல் இத்தவக்காலத்தில் மனம் மாறுவோம்.

புனித அன்னை தெரேசாவிடம் ஒருமுறை ஒருவர், “இந்த உலகத்தில் ஏழைகள் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அன்னை தெரேசா, “இந்த உலகத்தில் ஏழைகள் இல்லையென்றால், நான் மிகவும் இரங்கத்தக்க பெண்ணாக இருந்திருப்பேன்” என்றார்.

பணம் கொடுத்துக் கடையில் வாங்க முடியாத நீதி, அமைதி, மகிழ்ச்சி, இறையரசு ஆகியவற்றைக் கடவுளிடமிருந்து பெற ஓர் அழகான வழி, ஏழைகளுக்கு உதவி செய்வது. இன்று இந்தியாவில் ஒரு வேளை உணவோடு உறங்கச் செல்வோர் எத்தனையோ பேர்கள் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் உதவி செய்ய ஓர் அரிய வாய்ப்பினைக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கின்றார். இந்த அரிய வாய்ப்புதான் தவக்காலம். தாராள மனத்தோடு பொருளுதவி செய்து, உயிர்த்த இயேசுவிடமிருந்து நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும், இறையரசையும் வரமாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.