ஞாயிறு திருப்பலி முன்னுரை
இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாபோர் மலையில் உருமாற்றம் அடையும் நிகழ்வைக் காண்கிறோம். ஆண்டவர் இயேசு உருமாறியது உருபெறுவதற்கு அல்ல; மாறாக, உரு குலைந்து போவதற்கே என்பதைத்தான் இந்நிகழ்வானது எடுத்துக்காட்டுகிறது. இறைச்சட்டங்களின் தந்தையாகக் கருதப்பட்ட மோசேவும், இறைவாக்கினர்களில் சிறந்தவராகக் கருதப்பட்ட எலியாவும், ஆண்டவர் இயேசுவோடு இந்நிகழ்விலே உரையாடுகிறார்கள். ஏனெனில், இதுவரை ஆண்டவர் இயேசுவைக் குறித்து, அவர் கொண்டுவரப்போகும் மீட்பைக் குறித்து அறிவிக்கப்பட்ட இறைச்சட்டங்களும், இறைவாக்குகளும் ஆண்டவர் இயேசுவினுடைய சிலுவைப் பாடுகளின் வழியாக நிறைவு பெறப் போகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த உருமாற்ற நிகழ்வில் இவர்களும் பங்கு பெறுகிறார்கள். தாபோர் மலையில் உருமாறிய இறைவன், நாம் மனம் திரும்பி நல்வாழ்வு பெற வேண்டுமென்று நமக்காய் உருகுலைந்து போனார் என்பதை மனத்தில் கொண்டு, இத்தவக்காலத்தில் இறைவனின் ஆசீரை இன்னும் அதிகமாய்ப் பெற்றிட, இத்திருப்பலியில் இறையருளைக் கெஞ்சி மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
இறைவன் தந்த ஒரே மகனை தமக்காய்ப் பலியிடக் கேட்டபோது, துணிந்து நம்பிக்கையோடு செயல்பட்ட ஆபிரகாமை, இறைவன் நம்பிக்கையின் தந்தையாக்கினார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவர் நமது பக்கமாய் இருக்கிறார். எப்படியெனில், நாம் பாவிகளாய் இருந்தபோதும், தமது சொந்த மகனை நமக்காகப் பலியாய் சிலுவையில் கையளித்தார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● விண்ணையும், மண்ணையும் படைத்தவரே! உம் திரு அவையின் திருப்பணியாளர்கள் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவைப்போல உமது மக்களுக்காய் அஞ்சாது, உருகுலைந்திடும் மனத் திடன் கொண்டிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● ஞானத்தை அருள்பவரே! எம் நாட்டுத் தலைவர்கள் நிறம் மாறுபவர்களாக அல்ல; மாறாக, தீய எண்ணங்களில் இருந்து உருமாறுபவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● நம்பிக்கை அளிப்பவரே! எங்கள் பங்கையும், பங்குத் தந்தையையும் நிறைவாக ஆசீர்வதியும். நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய ஆபிரகாமைப்போல நாங்களும் உம்மில் முழு நம்பிக்கைக் கொண்டிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● நிலைவாழ்வு தருபவரே! எம் மறைமாவட்டத்திற்காக உழைத்து மரித்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், வேதியர்கள் மற்றும் உபகாரிகளின் ஆன்மாக்களுக்கு நீர் நிலை வாழ்வளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன் றாடுகிறோம்.