தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று, கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள், ‘தவத்தின் பாதையில் ஒன்றாக நடப்போம் மற்றும் நம்பிக்கையின் முன்னறிவிப்பாளர்களாக இருப்போம்’ என்ற கருப்பொருளுடன் கர்தினால் பிலிப் நேரி அவர்கள் தலைமையில் சான்கோலேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு ஆண்டுத் திருப்பயணம் மேற்கொண்டனர். 1677-ஆம் ஆண்டில், தூய ஜோசப் வாஸ் கடவுளுக்கும், மக்களுக்கும் இறைப்பணி ஆற்றுவதற்காக, சான்கோலேவில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் கர்நாடகா, தமிழ்நாடு எனப் பயணித்து இறுதியில் இலங்கையை அடைந்தார். இதை நினைவு கூரும் வண்ணமாகவும் இத்திருப்பயணம் அமைந்திருந்தது. அதிகாலை 2 மணிக்கு துவங்கிய இத்திருப்பயணம், மாலை 5 மணிக்கு திருநற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியுடன் நிறைவு பெற்றது. நாம் அனைவரும் இந்த உலகில் திருப்பயணிகள்; நாம் பிறக்கும்போது எதனையும் கொண்டு வருவதில்லை; இறந்த பிறகு எதையும் இங்கிருந்து எடுத்துச் செல்வதில்லை. நமக்கு வாழ்வு அருளிய கடவுளுக்கு முதலிடம் கொடுத்து, பிறர் நலனுக்காகத் தன்னலமின்றி வாழ்வதுதான் முக்கியம் என்று கர்தினால் பிலிப் நேரி மறையுரையில் பகிர்ந்து கொண்டார். இத்திருப்பயணத்தில் 18,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.