அன்புக்குரியவர்களே! பசித்ததும், தன் உணவுக்காகத் தாயைத் தேடுவதில் தொடர்கிறது மனித வாழ்வின் தேடல்; இது உலக வாழ்வு. ஆதி மனிதன் ஆண்டவரோடு இணைந்திருந்தபோது, அவன் தேடல் அனைத்தும் அவரையே மையம் கொண்டிருந்தது. அத்தேடல் அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது. படைப்புகள் அனைத்தையும் அவரே உருவாக்கி ஆதாமிடம் கொடுத்தார். மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல எனக் கண்டு, தகுந்த துணையை அவனிடமிருந்தே உருவாக்கினார். இறைவன் கொடுத்த வாழ்க்கையை இன்பத்தின் உச்சத்தில் ஏதேன் தோட்டத்தில் இணை பிரியாமல் வாழ்ந்தார்கள்.
ஆண்டவர் தங்களிடம் கூறிச்சென்ற வார்த்தையில் நம்பிக்கை வைக்காமல், ஆசையைத் தூண்டும் அலகையின் வார்த்தையைக் கேட்டார்கள். படைத்தவரின் பாசத்தைவிட, படைக்கப்பட்ட பாம்பின் ஆசையை நம்பினார்கள். அந்தோ பரிதாபம்! பாவச் சிறைகளின் கதவுகளுக்குள் சிக்குண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்து வெட்கி, நாணி, தங்களை மூடிக்கொள்ள இலைகளைத் தேடினார்கள். இதுதான் முதல் மனிதர்களின் தேடல். அன்று தொடர்ந்த தேடல் ஒவ்வொரு வயதிலும், காலக்கட்டத்திலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது. அதற்கு ‘விஞ்ஞானம்’ எனப் பெயரிட்டான்.
ஆக்க சக்தியாக இருக்க வேண்டிய தேடலின் கண்டுபிடிப்புகள் மனிதரைச் சிறை வைக்கும் அழிவு சக்தியாக மாறியுள்ளன. அன்று பாம்பின் உருவத்தில் வந்த அலகை, காலத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு சினிமா, சீரியல், அலைபேசி, வலைதளம் போன்ற சமூக ஊடகங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது. தனியாக அலகையிடம் சிக்கிய ஏவாள்போல, நாமும் சிக்கிவிடக் கூடாது என்றே இறைவன் விரும்புகிறார்.
நாம் நல்வழி நடக்க, வழியும் உண்மையும் வாழ்வுமான வார்த்தையை இயேசுவாகத் தந்திருக்கிறார். அந்த வார்த்தையை நம்பி வாழும்போதும், அவரோடு இணைந்திருக்கும் போதும் சிறைகளுக்கு என்ன வேலை?
“தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்ற பார்வையற்றவரின் தேடல் (மத் 9:27) இயேசுவைத் தேடிச் செல்ல வைத்தது; தன் சிறைகளுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. “இலாசரே வெளியே வா” என இயேசு கூறியபோது இலாசருக்கு மட்டுமா விடுதலை? அவரைப் போல இருள் என்ற கல்லறைக்குள் முடங்கிக் கிடக்கும் நமக்கும் விடுதலை அல்லவா!
வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தைத் தேடித் தன் வீட்டையும், நாட்டையும் விட்டுப் புறப்பட்ட ஆபிரகாம் தங்கள் குடும்பப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை என்ற சிறைகளிலிருந்து விடுதலையானது போல, நாமும் இயேசுவை நம்பிக்கையோடு தேடி, நமது பாவச் சிறைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
இன்றைய சூழலில்... பெண்களுக்குப் பல வழிகளில் சிறைகள் வருகின்றன. சமூகக் கட்டமைப்பில் ஆண் ஆதிக்கச் சூழலில் எழுப்பப்படும் இச்சிறைகளைத் தகர்த்து, சுதந்திரப் பறவைகளாக அவர்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வேண் டும். இங்கே எதிர்நீச்சல் போட்டு, சாதனைப் பெண்களாக உலா வருவதும் உண்டு!
நம்மில் பலருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆனால், பல பெண்கள் சிறைகளுக்கு ‘முடியாது’ என்ற பூட்டால் தம்மையே அடைத்துக் கொள்கின்றனர். உலகமே முடியாது என்று சொல்லும்போது ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக நம் மனத்திற்குள் மட்டுமே கேட்கும் குரல் ஒலியே நம்பிக்கை. அனைவரும் இந்த நம்பிக்கை எனும் ஒலியைப் பயன்படுத்தியே காலத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றனர். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, நம்பிக்கையை மட்டும் நம்பி வெற்றிப் பயணத்தை நோக்கிச் செல்ல வேண்டும். சரியாகவே செல்கிறோம் என்று திறமையைப் பின்தொடர்ந்து, வெற்றிப் பாதையை நோக்கிச் சென்றால், பெண்களின் சிறைகளாக உறவினர்களும், நண்பர்களும் முன் நிற்கின்றனர். ‘அனைத்திலும் முதலிடம் எங்களுக்கே’ என்ற எண்ணத்தில் ஆண்களும், ‘எதிலும் சரிசமம் வேண்டும்’ என்ற எண்ணத்தில் சில பெண்களும் இருக்கும் சூழலைக் காண முடிகிறது. இத்தகைய சூழலில், அனைத்துச் சிறைகளையும் திறமையால் உடைத்தெறிந்து வெற்றி காண்பாரும் காணக்கிடக்கிறார்கள்.
திறமை, படிப்பு என்னும் அதீத ஞானத்தைப் பயன்படுத்தி வெற்றிப் படியில் இன்று பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். குடும்பச் சிறைகள், சமூகச் சிறைகள் என உடைக்க வேண்டிய சிறைகள் இன்னும் பல உள்ளன. ஆகவே, வாழ்க்கை என்னும் படகில், நம்பிக்கை என்னும் துடுப்பை வைத்து, வெற்றி என்னும் கடலைக் கடக்கத் துணிய வேண்டும்.
இன்று திருமணம் என்பதே பலருக்குச் சிறையாகப் பார்க்கப்படுகிறது. பெற்றோருக்காக அனைத்துக் கனவுகளையும் விட்டு விட்டு இச்சிறையைத் தழுவுபவர்களும் உண்டு. படித்து விட்டு வேலைக்குச் சென்று தன் வாழ்வை நிலைநிறுத்தும் பெண்கள் சிலரே! இத்தகைய நிரந்தரச் சிறைகளைத் தகர்த்து விடுபட்டவர்களே சாதனைப் பெண்கள்! “என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்” (ஆமோஸ் 5:4) என்ற இறை வார்த்தையை மனத்தில் இருத்தி, விடுதலை நாயகன் இயேசுவைத் தேடுவோம். அவர் தந்த வெற்றிப் பாதையில் நடை போடுவோம்.
பெண் குலத்தின் இத்தகைய முயற்சியில் ஒட்டுமொத்த மனிதகுலமும் துணை நிற்க வேண்டும். உரிமையும், உடைமையும் பொதுவுடைமையாக வேண்டும். விடுதலை தேடும் இந்த விழிகளுக்குள் நாம் ‘நம்பிக்கை’ எனும் ஒளி ஏற்ற வேண்டும். மானுட சமுதாயம் மேம்பட பெண்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மாண்பும் பேணப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம்; அவர்களின் வெற்றிப் படிகளில் முன்னேற பேராதரவு கொடுப்போம்; அவர்களின் சமூக-அரசியல் பங்களிப்பு மேம்பட துணையிருப்போம். அதற்கு இந்நாளில் உறுதியேற்போம்.
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பணியிலும், இயேசுவின் சீடர்களின் சாட்சிய வாழ்விலும் அன்னை மரியா துணையிருந்தது போலs, இப்பெண்ணினமும் எல்லா நிலைப்பாடுகளிலும் சிறை எனும் தடை உடைத்து வெற்றி காண துணையிருப்போம்!
அன்னை மரியின் துணை நாடுவோம்!
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகளும், சிறப்பு ஆசிரும்!
அன்புடன்
மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி
மதுரை உயர் மறைமாவட்டம்