இன்று தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு. ‘அகமகிழ்தல் ஞாயிறு’ அல்லது ‘மகிழ்ச்சி ஞாயிறு’ என்று இந்த நாளைக் கொண்டாடுகின்றோம். இறைவன்மீது நம்பிக்கை கொண்டு, நற்செயல்களால் நம் உள்ளங்களை நிரப்பும்போது கிடைக்கும் அகமகிழ்வே ‘மீட்பு’ அல்லது ‘நிலை வாழ்வு’ என்பதே இன்றைய வழிபாட்டின் மையப்பொருளாக அமைகின்றது.
நிலைவாழ்வு கடவுளுக்கு மட்டுமே உரித்தானது! கடவுள் மட்டுமே நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். ஆபிரகாம் கடவுளை ‘என்றும் வாழ்பவர்’ என அழைக்கிறார் (தொநூ 21:33). கடவுள் மட்டுமே முதலும், முடிவுமானவர்! (திவெ 2:8). அவர் ஒருவருக்கே தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை (எபி 7:3); அவர் ஒருவரே ‘இருக்கின்றவராக இருக்கின்றவர்’ (என்றும் இருப்பவர்) (விப 3:14). கடவுளுக்கு மட்டுமே உரித்தான நிலைவாழ்வில் நாமும் பங்குபெற அழைப்புப் பெறுகின்றோம். சுருங்கக் கூறின், நிகழ்காலத்திலும், காலத்தைக் கடந்தும் கடவுளோடு ஒன்றித்து, அவர் வாழ்வில் பங்கு பெறுவதே நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு திருமுழுக்கில் தொடங்குகிறது (உரோ 6:4). இது உயிர்த்த இயேசுவால் நமக்குக் கொடுக்கப்படும் புதுவாழ்வு (1கொரி 4:11). இது ஒரு புதுப்பிறப்பு (யோவா 3:2-5). எனவே, நாம் அவர் வாழ்வில் பங்குபெற அவர் அருளால் அழைக்கப்பட்டுள்ளோம்.
நிலைவாழ்வு என்பது ஒருவர் கடவுள் மீது கொண்டிருந்த அன்பையும், நம்பிக்கையையும், அவரின் விருப்பத்தை எந்தளவுக்கு நிறைவேற்றி வாழ்ந்தார் என்பதைப் பொறுத்தே அமையும். நிறைவான வாழ்வைப் பெற்ற இஸ்ரயேல் சமூகம், தங்கள் பாவக்கறைகளால் கடவுளிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டதையும், அவரது ஆசியை இழந்ததையும் உணர்வுப்பூர்வமாக விளக்குவதுதான் இன்றைய முதல் வாசகம்.
எருசலேமின் வீழ்ச்சி இஸ்ரயேலரின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். இஸ்ரயேல் மக்கள் விடுதலை தந்து அழைத்து வந்த இறைவனை மறந்தமையால், நம்பிக்கையற்றவர்களாய், உண்மையற்றவர்களாய் வாழ்ந்தனர்; ஆண்டவரின் திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தினர் (2குறி 36:14). இதனால் பாவங்களும், சுயநலங்களும் பெருகின. குருக்களும், தலைவர்களும் நன்றியற்றவர்களாக, இறைவனின் உடன்படிக்கையை மீறியவர்களாக, இறைவாக்கினர்களின் குரலுக்குச் செவிகொடாதவர்களாக இருந்தனர். மக்கள் எவ்வளவுதான் பாவம் செய்தாலும், அவர்கள் மூதாதையரின் நம்பிக்கை பொருட்டு இரக்கம் கொண்டு, ‘தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்’ இறைவன் (2குறி 36:15). ஆனால், மக்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் கடவுளின் ‘வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர்’(2குறி 36:16).
எனவே, கி.மு. 586-இல் எருசலேம் அழிக்கப்பட்டு யூதா மரபினர் அடிமைகளாகப் பாபிலோனுக்குக் (கல்தேயாவுக்கு) கொண்டு செல்லப்பட்டனர் (2அர 25:1-7; எரே 21:1-10); அடிமைநிலைக்குக் கையளிக்கப்பட்டனர்; நெபுகத்நேசர் அரசர் தலைமையில் பல உயிர்கள் பலியாகின. அவர்கள் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயம் எரிக்கப்பட்டது; பாதுகாப்பின் கோட்டையாக இருந்த மதில்கள் தகர்க்கப்பட்டன; இது அதன் இறைமை தகர்க்கப்படுவதற்குச் சமம்! அரண்மனைகள் தீக்கிரையாக்கப்பட் டன; விலையுயர்ந்த பொருள்கள் அழிக்கப்பட்டன (1குறி 36:19). கி.மு. 515 வரை பாபிலோனில் அடிமைக் கைதிகளாக நடத்தப்பட்டனர். இவர்களின் வலிகள் நிறைந்த இதய உணர்வுகளைக் கனமாகத் தாங்கி வருகிறது இன்றைய திருப்பாடல் (137). எருசலேமையும், தங்கள் கடவுளையும் எந்த அளவுக்கு இஸ்ரயேல் மக்கள் அன்பு செய்தார்கள் என்பதற்கு இந்தப் பாடலைவிட சிறந்த பாடல் வேறு எதுவும் இருக்க முடியாது. சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், ஆண்டவர் தமது இரக்கத்தால் பாரசீக மன்னர் சைரசு வழியாக அவர்களை விடுவித்து, தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்புகிறார். இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்பட்ட அனுபவம் அவர்கள் வாழ்வில் மாற்றத்தையும், கடவுள்மேல் நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டம்.
முதல் ஏற்பாட்டைப் போலவே, இரண்டாம் ஏற்பாட்டிலும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வதற்குமுன் மனிதர் பாவத்திற்கு அடிமைகளாகி, இறைவனிடமிருந்து விலகி நின்றனர்; இறைவனது உறவிற்குச் செத்தவராக இருந்தனர். குற்றங்கள் காரணமாக இறந்தவர்களாக இருந்தும், கடவுளை மிகுந்த இரக்கம் உடையவராகவும், மிகுந்த அன்பு கொண்டவராகவும் தூய பவுல் காட்டுகிறார். இவ்வாசகத்தில் ‘மீட்பு என்பது கடவுளுடைய செயல்’ (2கொரி 5:18); ‘அது தனிப்பட்ட அவரது கொடை’ (உரோ 6:23); ‘மீட்பு என்பது மனிதச் செயல்களால் ஆனது அல்ல’ (எபே 2:8); மாறாக, கடவுளின் அருளால் நம்பிக்கையின் வழியாகக் கிடைக்கிறது என்று பவுல் தெளிவாகத் தனது வாதத்தை முன் வைக்கிறார்.
இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு மனித மீட்பில் தனிமனிதருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நாம் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, மனித மீட்பைப் பொறுத்தமட்டில் ‘எவரும் பெருமை பாராட்ட இயலாது’ (எபே 2:9) என்ற பவுலின் கண்ணோட்டத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பாலும், இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும், பொருளாதாரத்தாலும் மக்கள் தங்களை எப்படி உயர்ந்தவர்கள் எனக் கருத முடியும்? ஏனெனில், அனைத்தையும் தீர்மானிக்கிறவர் கடவுள். அவர் பாகுபாடு காட்ட முடியாதவர். ஆக, இயற்கையில் அனைவரும் சமமானவர்களே என்பது பவுலுடைய அழகான வாதம்.
அதேவேளையில், ‘இறை நம்பிக்கையால், இறையருளால் நாம் மீட்கப்பட்டுவிட்டோம்; இனி உடல் சார்ந்த செயல்களின் ஒழுக்கம் பற்றியோ, அறநெறி பற்றியோ கவலை இல்லை’ என வாழ்ந்து விடக் கூடாது. இறையருளால் நாம் மீட்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை இரண்டாம் வாசகத்தின் இறுதிப் பகுதியில் பவுல் வலியுறுத்திச் சொல்கிறார். மனிதர் மீட்கப்பட்டதே அவர்கள் புதுப்படைப்புகளாக மாறி (2கொரி 5:17), ‘நற்செயல் புரிவதற்கென்றே’ (எபே 2:10) என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. மனித மீட்புக்கு மனிதச் செயல்கள் தேவையற்றவை என்றாலும், நற்செயல்கள் புரிவதன் வழியாகக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ முடியும்; இதுவே மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் கடமை என்பது இங்கு ஆழமாக வலியுறுத்திச் சொல்லப்படுகின்ற இறையியல் விளக்கம்.
இன்றைய நற்செய்தியில் நிக்கதேமுடன் நிகழ்ந்த இயேசுவின் ஒரு சிறு உரையாடல் இடம் பெற்றுள்ளது. நிலைவாழ்வு பெறுவது எப்படி என்பதே நிக்கதேமுடனான உரையாடலின் தேடலாக அமைகிறது. யார் இந்த நிக்கதேம்? இவர் ஒரு யூதர்; பரிசேயர்; சிறந்த மறைநூல் வல்லுநர்; யூதச் தலைமைச் சங்க உறுப்பினர்; யூதச் சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவர்; சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதன் வழியாக மீட்பு உண்டு என நம்பியவர். யூதர்கள் திருச்சட்டத்தை முன்னிறுத்தி, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் மட்டுமே ஒருவர் மீட்படைய முடியும் என்றும், யூதராகப் பிறந்த காரணத்தினாலே தங்களுக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றும் நம்பினர். இதற்கு அவர்கள் இஸ்ரயேல் அழைப்பை ஒரு காரணமாகக் காட்டினர். இந்த நம்பிக்கையும், பெருமையும் நிக்கதேமுக்கும் இருந்திருக்கும். இவரையே யோவான் வளர்ச்சி பெறும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுகிறார். என்ன காரணம்?
இயேசுவால் கவரப்பட்ட நிக்கதேம் இயேசுவிடம் முதலில் தயங்கித் தயங்கி வருகிறார் (யோவா 3:1); எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தியதைக் கண்டு மிகவும் வியக்கிறார்; ஆலயத்தில் நடந்த நெறிகேடுகளும், பண வழிபாடும் தவறு எனக் கருதுகிறார்; ‘கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வருள் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது’ (3:2) என வியந்து பாராட்டுகிறார்; திறந்த மனநிலையுடன் இயேசுவிடம், ‘நிலைவாழ்வு பெறுவது எவ்வாறு?’ எனும் கேள்வியை முன்வைக்கிறார்; ஒரு முறை இயேசுவுக்கு எதிராகத் தலைமைக் குருக்களும், பரிசேயர்களும் எழுந்தபொழுது, ‘அவர் என்ன செய்தார் என்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பு அளிப்பது நமது சட்டத்தின்படி முறையாகுமா?’ என இயேசுவின் சார்பாகத் துணிவுடன் கேட்டார் (7:51); இறுதியில் யாருக்கும் அஞ்சாது வெள்ளைப் போளமும், சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டு வந்து இயேசுவின் உடலை அடக்கம் செய்தார் (19:39). இவ்வாறு தனது அன்பையும், பற்றையும், துணிச்சலையும் வெளிப்படுத்துகிறார் நிக்கதேம். இறுதியில் புதுப்பிறப்பு அடைகிறார்; நிறைவாழ்வைச் சுவைக்கும் பேற்றினைப் பெறுகிறார் (3:3).
அகமகிழ்வின் ஞாயிறு நமக்குத் தரும் படிப்பினைகள்
● நிலைவாழ்வு என்பது ஒருவர் இயேசுவை நம்பியதிலிருந்து தொடங்குகிறது (யோவா 5:24). நிலைவாழ்வு என்பது ‘கடவுள் வாழ்வு’. இது ஏதோ, எங்கேயோ மேகங்களுக்கு மேலே உள்ள கற்பனைக்கு எட்டாத வகையில் பெறும் வாழ்வு அல்ல (நாம் இறந்த பின்னரே நிலைவாழ்வைப் பெற முடியும் என்பது பலரின் நம்பிக்கை!); மாறாக, கடவுளின் சொந்த மக்களாக, கடவுள் வாழும் இடத்தில் கடவுளோடு நாம் நிகழ்காலத்தில் வாழப் போகும் வாழ்வு முறை (நம்பிக்கைக் கொள்!).
● நிலைவாழ்வு என்பது இயேசுவின் போதனைகளை, விழுமியங்களை, செயல்பாடுகளை, ஏன் அவரின் வாழ்வு முழுவதையும் ஏற்று வாழும் வாழ்வு முறையாகும். ஏற்றுக்கொள்வது என்பது வெறும் மனத்தளவில் நிகழ்வது அல்ல; மாறாக, அவரையே நாம் வாழ்ந்து காண்பிப்பதாகும். அதாவது, நோயில்லாத, சாவில்லாத, வாட்டிடும் வறுமையில்லாத, தனிமை இல்லாத, அழுகை இல்லாத, வெறுப்பு இல்லாத, விரோத மனமில்லாத, ஒடுக்குதல் இல்லாத (திவெ 21:4) புதிய உலகை உருவாக்குவது (நற்செயல் புரி!).
● நிலைவாழ்வு என்பது உயிர்த்த இயேசுவோடு அவரை முழுமையாக அன்பு செய்வதாகும். அவரால் மட்டுமே நமது ஏக்கங்களையும், ஆவல்களையும் தீர்த்து வைக்க முடியும். இதனால்தான் புனித அகுஸ்தினார் ‘எங்கள் இதயங்கள் உமக்காகவே படைக்கப்பட்டன. எங்கள் இதயங்கள் உம்மில் இளைப்பாறும்வரை ஏங்கியே இருக்கின்றன’ என்றார். அன்பு செய்ய இயலாமையில் நீடித்திருக்கும் வாழ்வு நிலை(றை)வாழ்வு ஆகா! (நிலைவாழ்வை உரிமையாக்கு!)