“சனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வகுப்புவாத சக்திகளிடமிருந்து மீட்க வேண்டும். அதற்காக முழுவீச்சில் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.”
- திரு. சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
“அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ’மதச்சார்பற்ற’ மற்றும் ’ஜனநாயகம்’ எனும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பூஜை, சடங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை படத்தை வைத்து, அதற்குத் தலை பணிந்து வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும்.”
- அபய் எஸ் ஓகா, உச்ச நீதிமன்ற நீதிபதி
“பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ‘ஆம் ஆத்மி’ அரசு டில்லியில் அறிவித்துள்ளது. பெண்களுக்குப் பணம் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர் என்று பா.ச.க. தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ச.க. அரசிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். பெருமுதலாளிகளின் பல கோடி ரூபாய் கடன்களை மத்திய அரசு இரத்து செய்கிறது. இதில் மக்களின் வரிப்பணம் வீணாகவில்லையா? வரும் மக்களவைத் தேர்தலில் மக்களுக்காக உழைப்பவர்கள் யார் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.”
- திரு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர்
“தேர்தல் ஆணையம் என்பது பா.ச.க.வின் விரிவாக்கப்பட்ட கிளைபோல் மாறியுள்ளது. டி.என். சேஷன் காலத்தில் இருந்த தேர்தல் ஆணையம் தற்போது இல்லை. தேர்தலைக் கண்காணிக்கும் உயர் அமைப்பாக, பாரபட்சமற்றதாகத் தேர்தல் ஆணையம் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் தனியார்மயமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார். உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், ஆளுநர் மாளிகைகள் ஆகியவற்றில் பா.ச.க.வினர் நியமிக்கப்படுவதைப் போல், தேர்தல் ஆணையத்திலும் காலியாக உள்ள இரு இடங்களுக்கு அவர்கள் (மத்திய ஆட்சியாளர்கள்) இரு பா.ச.க.வினரை நியமிக்கக்கூடும்.”
- திரு. சஞ்சய் ரௌத், சிவசேனை மூத்த தலைவர்