இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) சார்பாக அதன் பொதுச் செயலாளர் பேராயர் அனில் கூடோ, ஒட்டுமொத்த இந்தியக் கத்தோலிக்க இறைச்சமூகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “நமது இந்தியத் தாய் திருநாட்டிற்காகவும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் 12 மணி நேரம் நோன்பிருந்து செபிப்போம். இச்செபமானது திருப்பலி, நற்கருணை ஆராதனை, செபமாலை சொல்லுதல் போன்ற பக்தி முயற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் தாமஸ் செ நெட்டோ, “இச்செப வழிபாடு சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிரான ஓர் அமைதிப் போராட்டமாகும்” என்று கூறியுள்ளார். “ஏழை மற்றும் செல்வந்தர், முதலாளித்துவம் மற்றும் வேலையில்லா நிலை இவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்திடச் செபிப்போம்” என்று பெங்களூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் பீட்டர் மச்சாடோ கூறியுள்ளார்.
மார்ச் 22 -ஆம் தேதி அனைத்துக் கத்தோலிக்க ஆலயங்களிலும் ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் இணைந்து இந்தியத் தாய்த் திருநாட்டிற்காகவும், எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் மற்றும் இந்தியக் கத்தோலிக்கத் திரு அவையின் புனிதத்திற்காகவும் செபித்தார்கள்.