“இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து அந்தக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உள்பட பல நாட்டு அரசுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த சோமாலியா நாடு, இந்தியாவிலிருந்து 1,600 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், மன்னார்வளைகுடா பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குகிறது. எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையர்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, இலங்கையிடமிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?”
- திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
“சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 35 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, தற்போது 65 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதுதவிர, ஐ.ஐ.டி.யில் படித்த 30 சதவிகிதம் பேருக்கு வேலையில்லை. இதற்கெல்லாம் மத்திய அரசிடம் பதில் கிடையாது. தனிநபர் வருமானம் என்பதுதான் உலகில் எது செல்வம் மிகுந்த நாடு என்பதைத் தீர்மானிக்கும். செல்வம் மிகுந்த நாடுகள் பட்டியலில் நாம் இன்னமும் 120-வது இடத்தில்தான் இருக்கிறோம். எனவே, சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான கடைசித் தேர்தல் இது. இதன்பிறகு சனநாயகத்தைக் காப்பாற்ற வாய்ப்பு கிடைக்காது. சனநாயகத்தைக் காப்பாற்றச் சிந்தித்து வாக்களியுங்கள்.”
- திரு. ப. சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
“பா.ச.க.வுக்கு இன்னொரு வாய்ப்பு அளித்தால் சனநாயகமே இருக்காது என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். தமிழக மீனவர்களை மத்திய பா.ச.க. அரசு காக்கத் தவறிவிட்டது. தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைச் சிறைபடுத்தி ஏலம் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. பத்தாண்டு கால ஆட்சியில் மத்திய பா.ச.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் ஆதார விலையைத் தராமல் ஆதரவு விலையைத் தருவதாகக் கூறினர். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றனர். ஆனால், அதுபோல வழங்கப்படவில்லை. பெரு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர். சட்டத்தை வளைத்து அதிகாரபூர்வமாகப் பணத்தைப் பறிக்கும் முறைதான் தேர்தல் நிதி பத்திரத் திட்டம். மத்திய பா.ச.க. அரசு சமூக நீதிக்கு எதிரானது.”
- திரு. கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்