Namvazhvu
உலகக் கத்தோலிக்கர் குறித்த புள்ளி விவரம்
Wednesday, 17 Apr 2024 10:47 am
Namvazhvu

Namvazhvu

உலக அளவில் ஆண் மற்றும் பெண் துறவியரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் திரு அவை ஆண்டுப் புத்தகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டிற்கான உலகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் 2024-ஆம் ஆண்டிற்கான திரு அவை ஆண்டுப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2022-ஆம் ஆண்டில் உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதாவது 137 கோடியே 60 இலட்சத்திலிருந்து, 139 கோடியாக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டுமே கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்றும், இது மூன்று விழுக்காடு, அதாவது 26 கோடியே 50 இலட்சம் என்பதிலிருந்து 27 கோடியே 30 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் ஏற்றமும் இறக்கமும் இன்றி அதே அளவில் தொடர்வதாகவும், அமெரிக்கக் கண்டத்தில் 0.9 விழுக்காடு மற்றும் ஆசியாவில் 0.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஆயர்களின் எண்ணிக்கை 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டில் 5,340 என்பதிலிருந்து 5,353 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் 2021-ஆம் ஆண்டில் 47,872 அருள்பணியாளர்கள் இருந்தனர். இது 2022-ஆம் ஆண்டில் 47,730 ஆக, அதாவது 142 பேர் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2021-ஆம் ஆண்டில் ஆண் துறவிகளின் எண்ணிக்கை 49,774 ஆக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 49,414 ஆக குறைந்துள்ளதாகவும், பெண் துறவிகளின் எண்ணிக்கையும் 68,958 என்பதிலிருந்து 59,228 ஆக சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.